Published:Updated:

இது சினிமா கதையல்ல !

ஆர்.ஷஃபி முன்னா, படங்கள்: அசுதோஷ் மிஸ்ரா

இது சினிமா கதையல்ல !

ஆர்.ஷஃபி முன்னா, படங்கள்: அசுதோஷ் மிஸ்ரா

Published:Updated:
##~##

ஒரு பெண்ணை, வில்லன்கள் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போகிறார் அந்தப் பெண். இதற்காக நீதி கேட்டு போராடுகிறார், சம்ப வத்துக்கு சாட்சியான அவளுடைய தோழி. அவளை மிரட்டிப் பணிய வைக்க நினைக்கிறார்கள் வில்லன்கள். அது முடியாமல் போகவே, அவளையும் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். மருத்துவமனை, காவல்துறை, அரசாங்கம் எங்கு சென்றாலும், அவளுடைய குரல் எடுபடவில்லை. காரணம், அந்தக் கயவர் களுக்கு கேடயமாக இருப்பது ஓர் அமைச்சர்!

இது சினிமா கதை அல்ல. ஒடிசா மாநிலத்தில் நடந்து இருக்கும் நெஞ்சை நடுங்க வைக்கும் நிஜ சம்பவம்! வழக்கம்போல, சினிமாவை மிஞ்சும் கொடூரம் என்றுதான் வர்ணிக்க வேண்டிஇருக்கிறது இந்தக் கொடுமையை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒடிசா மாநில நீதிமன்றம் மட்டும் தலையிடாமல் போயிருந்தால்... இந்த விஷயம் இன்றைக்கு நாடறிந்த ஒரு வழக்காக மாறி இருக்காது. சம்பந்தபட்ட கயவர்களும் எளிதாக தப்பியிருப்பார்கள்!

கட்டாக் மாவட்டத்தின், எஸ்.சி.பி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நினைவிழந்து கிடக்கிறாள் 19 வயது இளம்பெண் பெஹரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவளது மூளையின் ரத்த செல்களில் சுமார் 40 சதவிகிதம் செயல் இழந்துவிட்டன. அவளுக்கு நினைவு திரும்புவதே கடினம் எனும் நிலையில், ஒடிசா உயர் நீதிமன்றம், மாநில அரசு, அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என மாநிலம் முழுவதிலும் இருந்து அவளுக்கான பிரார்த்தனைகளும் போராட்டங்களும் வலுத்து வருகின்றன.

இது சினிமா கதையல்ல !

''இப்போது இத்தனை ஆதரவுகள். ஆனால், என் மகள் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 40 நாட்கள் வரை, ஓர் ஏழை தலித் தொழிலாளியின் மகளான அவளை கண்டுகொள்ள யாருமில்லை. நாங்கள் அனுபவித்த அலைக்கழிப்புகள் கொஞ்சம் நஞ்சமில்லை!''

- குரல் கம்மி அழுகிறார் பெஹராவின் அப்பா. கட்டாக்கின் நகர்புறப் பகுதிகளில் ஒன்றான பீப்லியில் உள்ள அர்ஜுன்           கோடா என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர் இவர்.

என்ன நடந்தது பெஹராவுக்கு..?

அதைப் பற்றி மாநில தலைநகர் புவனேஸ்வரில் 'தாய் வீடு’ என்கிற பெயரில் பொதுநலச் சேவையாற்றிக் கொண்டிருக்கும் ரித்துபர்ணா மொஹந்தி நம்மிடம் பேசினார்.

''செப்டம்பர் 2008. அப்போது பெஹரா ஒன்பதாம் வகுப்பு மாணவி. வகுப்புத் தோழி பிரபாதி. பீப்லியைச் சேர்ந்த குணச்சந்திரா சுவைன் மற்றும் பிரம்நந்தன் நாயக் எனும் இரு கயவர்கள், பிரபாதி பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் அவளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதற்காக பிரபாதி போலீஸிடம் அளித்த புகாரை வாபஸ் வாங்கி விடும்படியும் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே... மன அழுத்தம் காரணமாக, திடீரென பிரபாதி மண் எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொண்டுவிட்டார்.

அந்த பாலியல் பலாத்கார வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இந்த வழக்கின் ஒரே சாட்சியான பெஹராவை மிரட்டிப் பணிய வைத்துவிட்டால், பிரச்னை முடிந்தது என்று திட்டமிட்ட அந்தக் கயவர்கள், 'சாட்சி சொன்னால், நடப்பதே வேறு’ என பெஹராவை மிரட்டியுள்ளனர். ஆனால், துளியும் அஞ்சாத அவர், 'என் தோழியை சீரழித்த உங்களுக்கு தண்டனை பெற்றுத் தரும் வரை போராடுவேன்' எனக் கூறியுள்ளார்.

இது சினிமா கதையல்ல !

இதனால் கோபப்பட்ட அந்தக் கயவர்கள், மேலும் இரு நண்பர்களுடன் சேர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 28 அன்று பெஹராவை பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்துள்ளனர். கடைசியாக அவருடைய கழுத்தை நெரித்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவர் இறந்து விட்டதாகக் கருதி வயல்வெளியில் போட்டு ஓடி விட்டனர்.

நிர்வாணமாக வயல்வெளியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெஹராவை, மறுநாள் காலையில் பார்த்த கிராமவாசிகள், பதறியபடியே உள்ளூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓட, 'இது போலீஸ் கேஸ்’ எனக் கூறி சிகிச்சை தர மறுத்துள்ளனர். போலீஸிடம் சென்றபோதும் பயனில்லாமல் போக, வீட்டிலேயே அவளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

பெஹராவின் நிலைமை மிகவும் மோசமாக, பீப்லியில் சில பொதுநல அமைப்புகளுக்கு அவள் நிலைமை தெரியவர... அவர்களின் உதவியுடன் ஒடிஸா மாநில மகளிர் ஆணையத்தை அணுகியுள்ளனர். அவர்களுடைய பரிந்துரையின் படி எஸ்.சி.பி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கச் சென்றபோது, முதலில் 'சரி’ என்றவர்கள், பிறகு சிகிச்சைக்கு மறுத்துள்ளனர். அடுத்து மாநில மனித உரிமை ஆணையத்தை அணுகியபோது... புவனேஸ்வர் அரசுப் பொது மருத்துவமனை யில் சேர்ப்பதற்கு உத்தரவிட்டுள்ளனர். அங்கு பெஹராவின் நிலைமை மேலும் மோசமாகி, அவர் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்.

இந்த அராஜக சம்பவம் கடந்த மாதம் முதல் வாரத்தில் மீடியாக்களில் வெளியாக, ஒடிஸாவின் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதிகள் இட்ட உத்தரவின் பேரில், தற்போது கட்டாக் எஸ்.சி.பி மருத்துவக் கல்லூரியிலேயே மீண்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாள் பெஹரா'' என்றவர், அடுத்து சொன்ன செய்தி ஜனநாயகத்தின் அவல முகத்தை தோலுரித்துக் காட்டியது.

''குற்றவாளிகளுக்கு பீப்லியின் எம்.எல்.ஏ-வும் ஒடிசா மாநிலத்தின் விவசாயத்துறை அமைச்சருமான பிரதீப் மஹரதியிடம் கிடைத்த முழு அடைக்கலமே, பெஹராவை இந்தளவுக்கு அலைக்கழித்துள்ளது. அரசு மருத்துவமனையில் பெஹராவுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல், பாம்புக் கடிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கும், எஸ்.சி.பி-யில் சிகிச்சை மறுக்கப் பட்டதன் பின்னணியிலும் அந்த அமைச்சர் இருந்திருக்கிறார்'' என ஆவேசப்பட்ட ரித்து, பெஹராவுக்காக தற்போது உருவாக்கப்பட்டுள்ள போராட்டக் குழுவில் இருக்கிறார்.

பெஹராவின் நிலைமை மோசமாகவே, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் டெல்லியின் புகழ் பெற்ற 'எய்ம்ஸ்’ மருத்துவமனை மருத்துவர்கள், கட்டாக் நகரிலிருக்கும் மருத்துவமனைக்கு வந்து, பெஹராவுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் பலாத்கார வழக்கைப் பதிவு செய்த பீப்லி காவல்துறையினர், குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர். இந்த அநீதிக்கு உடந்தையாக இருந்த பிரதீப் மஹரதி, தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். முதலில் புகாரை பதிவு செய்ய மறுத்த பீப்லியின் காவல்துறை ஆய்வாளரையும் அரசு டிஸ்மிஸ் செய்ததுடன், மாவட்ட எஸ்.பி-யும் மாற்றப்பட்டுள்ளார்.

இது சினிமா கதையல்ல !

''தன் தோழிக்காக ஒற்றையாளாகப் போராடியவள், இன்று அவளுக்காக இந்த மாநிலமே போராடுவதைப் பார்க்க கண் திறப்பாளா..?''

- கண்ணீருடன் கேட்கிறார், மருத்துவமனையில் பெஹராவுக்கு உதவியாக இருக்கும் அவரது சகோதரர் மெலிதான குரலில்!

சம்பவம் குறித்து விசாரித்த ஒடிசா மாநில மகளிர் ஆணையத்தின் செயலாளர் அனிதா அக்னி ஹோத்ரி, 'அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை’ என அறிக்கை அளித்தார். இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்ப, மறுநாளே 'இது எங்கள் முழுமையான இறுதி அறிக்கை அல்ல’ என்று பல்டியடித்தார்.

ஒடிசாவின் கவர்னர் எம்.சி.பண்டாரே தலையிட்டு, மறுவிசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி மகளிர் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது பாலியல் பலாத்காரம், கொலை முயற்சி, தாழ்த்தப்பட்டோர் பாதுகாப்பு வன்முறை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்குகள் பதிவாகி உள்ளன.

அரசியல் வலைக்குள் கிடக்கிறது பெஹராவின் உயிரும் சட்டப் போராட்டமும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism