ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

• எம்.ஜி.ஆர்., சிவாஜி மறைந்த பிறகும், ரசிகர்களின் சண்டை ஓயவில்லை. சமீபத்தில் டிஜிட்டலில் வெளியான 'கர்ணன்’ படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ். தமிழகம் முழுக்க ஹவுஸ்ஃபுல். உடனே வெகுண்டு எழுந்த எம்.ஜி.ஆர். ரசிகர்கள், 'குடியிருந்த கோயில்’ படத்தை சென்னையில் திரையிட்டனர். தாரை தம்பட்டம் அடித்து, கட்அவுட் வைத்துக் கொண்டாடிய எம்.ஜி.ஆர். ரசிகர்கள், சிவாஜியைக் கடுமையாகத் தாக்கி துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டு காட்டத்தைக் காட்டி இருக்கிறார்கள்.  

• ஆந்திர நடிகர் கோபிசந்துக்கும் நயன்தாராவுக்கும் நல்ல நெருக்கமாம். தெலுங்கு ப்ளஸ் தமிழில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் கோபிசந்த் நடிக்கப்போகிறார். ஹீரோயினாக நயனை நடிக்கவைக்க நினைத்த பூபதிக்கு, கால்ஷீட் சிக்கல். விவகாரத்தைக் கோபியின் காதில் ஓத... ஒரே போனில் நயன் ஓகே ஓகேவாம்.  

மிஸ்டர் மியாவ்

• சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபு நடிக்கும், 'சட்டம் ஒரு இருட்டறை’ படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் பேத்தி டைரக்ஷன் செய்கிறார். அதாவது எஸ்.ஏ.சி-யின் அக்காவின் பேத்தி சிநேகா. சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்து இருக்கிறார். இதுவரை யாரிடமும் உதவி டைரக்டராக வேலை செய்யாத சிநேகா, நேரடியாகவே இயக்குநர் ஆகிறார். 'கோ’ நாயகிகளான கார்த்திகா, பியா இருவரையுமே இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளார். ஹீரோவுக்கு அக்கா கேரக்டரில் மீனா நடிக்கிறார்.  

• கைவசம் படங்கள் இல்லை என்றால் நடிகர்கள் டல்லாகித் தவிப்பார்கள். ஆனால் கவுண்டமணி இதற்கு நேர்எதிர். முன்பைவிட  குஷியாக இருக்கிறார். 'மனசு சரியில்லன்னா உடனே காரை எடுத்திட்டு கவுண்டமணி வீட்டுக்குப் போயிடுவேன். ரெண்டு மணி நேரம் மனசுவிட்டு சிரிக்கவைப்பார். அந்த சார்ஜ் ஒரு மாசத்துக்குத் தாங்கும்...’ என்கிறார் அர்ஜுன்.

மிஸ்டர் மியாவ்
##~##