Published:Updated:

``பழிவாங்குறதுனா அடிக்கறது, அவமானப்படுத்தறது மட்டுமல்ல... ஜெயிப்போம் பாலா!" #20YearsOfSethu

அபிதா மற்றும் விக்ரம்
அபிதா மற்றும் விக்ரம் ( Photo: vikatan )

``நான் ஒரு விபத்துல அடிபட்டுக் கிடந்தப்போ என் சொந்தக்காரர் ஒருத்தர் `உனக்குனு சினிமாவுல ஏதாவது நொண்டி கேரக்டர் கிடைக்கும்னு' சொன்னார். நாம ஜெயிக்கணும் பாலா. பழிவாங்குறதுனா அடிக்கறது, அவமானப்படுத்தறது மட்டுமல்ல... அவங்க கண்ணு முன்னால நாம ஜெயிக்கணும் பாலா"

விதிகளை மீறி, கணிப்புகளைத் தாண்டி நிகழவே நிகழாது எனக் கருதப்படும் ஒரு நற்சம்பவம், நிஜத்தில் நிகழ்ந்துவிடுவதுதான் அதிசயம்! அப்படியொரு அதிசயம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் நிகழ்ந்தது. பாலா எனும் புதுமுகக் கலைஞனின் புத்துயிர் ஊட்டியது மட்டுமின்றி, விக்ரம் எனும் பெருந்திறமையை தமிழ் சினிமாவுக்கு அடையாளம் காட்டிய படம் `சேது'.

விக்ரம்
விக்ரம்

இயக்குநராக முதல் படத்தை இயக்க வேண்டுமென முடிவெடுத்த பாலா, யோசித்தது ஒரு காதல் கதைதான். ஆனால், அந்தக் காதல் அதற்கு முன்னர் யாருமே கண்டிராத ஒரு காதலாக இருந்தது. சொல்லப்போனால், மினுமினுப்புகள் சேராத, பட்டைத்தீட்டப்படாத, கரடுமுரடான காதலின் மூல வடிவத்தில் இருந்தது. இதுதான், பாலாவை தனித்துக் காட்டியது. `பாலுமகேந்திரா பட்டைத்தீட்டிய வைரம்' என ஊர் மெச்சியது.

பல ஊர்களைச் சுற்றிவரும் பழக்கமுடைய பாலாவுக்கு, தன் முதல் படத்துக்கான விதையை தந்த ஊர், ஏர்வாடி. அந்தக் கடலோர கிராமத்தின் கடல் அலைகளைத் தாண்டி அவர் காதுகளுக்கு மட்டுமே கேட்டது அந்த அலறல். ஆயிரமாயிரம் மனிதர்கள், சங்கிலிகளால் கால்கள் கட்டப்பட்டு நடைபிணங்களாக அலையும் காட்சியைப் பார்க்கும்போது எவருக்குமே இதயம் கனக்கும், அவருக்கும் கனத்தது. பல ஊர்களில் இருந்து அழைத்துவரப்படும் மனநோயாளிகள், அடிப்படை மனிதத்தன்மைகூட இல்லாமல் நடத்தப்படுவதைப் பார்த்தபோது அவர் நிலைகுலைந்துப் போனார்.

விக்ரம்
விக்ரம்

ஊட்ட ஊட்ட திகட்டாத அன்பை, ஒரு பிடியாவது யாரேனும் ஊட்டிவிட மாட்டார்களா என கண்கள் நிலைக்குத்தி கிடந்ததைப் பார்த்த படைப்பாளி பாலாவுக்கு மனதில் ஒரு கதை தோன்றியது. ஏர்வாடியில் மனநோயாளியாகக் கிடக்கும் ஒருவனுடைய கடந்தகாலம் காதலில் திளைத்திருந்தால் எப்படியிருக்கும். போதையின் கோரப்பிடியில் சிக்கி இளம் வயதில் இறந்துபோன தன் நண்பனின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களையும் சேர்த்துக் கதையெழுதத் துவங்கினார் பாலா.

அவரின் சில நண்பர்களே, படத்தை தயாரிக்க முன் வந்தார்கள். கதை முழு உருவம் பெற்ற பிறகு, முதன்முதலாக அவர் கதை சொல்ல யத்தனித்த நபர் இளையராஜா. மூன்று மணி நேரம் கதை கேட்டு முடித்த பிறகு படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டார். நடிகர்களைப் பொறுத்தவரை, பாலா ஆசைப்பட்ட ஒரே விஷயம் நாயகனின் அண்ணனாக சிவக்குமார் நடிக்க வேண்டும் என்பதுதான். கதை கேட்ட சிவக்குமாரும் அதற்கு ஒப்புக்கொண்டார். எல்லா விருப்பங்களும் நிறைவேற `அகிலன்' என பெயரிடப்பட்டும் படத்தின் பூஜைக்கும் நாள் குறிக்கப்பட்டது.

விக்ரம்
விக்ரம்

ராஜா வரப்போகிறார். ஆசீர்வாதம் வழங்க தன் குருநாதர் பாலுமகேந்திராவும் அவர் மனைவி அகிலாம்மாவும் வரப்போகிறார்கள். பாலாவின் மனம் பரபரப்பாக துள்ளிக்கொண்டிருக்க, பூஜைக்கு முந்தைய இரவில் பாலாவிடம் `இந்தப் படம் டிராப்' என சொல்கிறார்கள். அடுத்த நாள் எடுக்காத படத்துக்கு பூஜை மட்டும் நடந்தது.

சென்னையில் இருக்க முடியாமல் மறுபடியும் ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்தார் பாலா. சொந்த ஊருக்கு சென்றவரிடம் அவரது தந்தை, கந்தசாமி என்ற ஒருவரை சந்திக்கச் சொல்லியிருக்கிறார். இதுதான் நிகழப்போகும் அதிசயத்தின் துவக்கப்புள்ளி. ``நான் பில்டிங் கான்ட்ராக்டர் தம்பி. கொஞ்சம் காசு சேத்து வெச்சிருக்கேன். நீங்க பெரிய டைரக்டர்கிட்ட வேலை பாத்தவர். இதை வெச்சி நல்லபடியா ஒரு படம் எடுத்துக் கொடுங்க" என்றார் `சேது' படத்தின் தயாரிப்பாளர் கந்தசாமி. மீண்டும் புத்துணர்ச்சியோடு சென்னை வந்தார் பாலா. இளையராஜா, சிவக்குமார் தவிர மற்ற கலைஞர்கள் எல்லோரையும் புதிதாகத் தேட வேண்டும்.

சேது
சேது

இந்தப் படம்தான் எனது வாழ்க்கை எனத் தன்னைப் போலவே நம்பும் ஒரு நடிகன் அவருக்குத் தேவைப்பட்டார். அந்த சமயத்தில் கிடைத்தார் விக்ரம். பாலாவைப் போலவே, வென்றாக வேண்டுமென்கிற வெறியும் தாகமும் விக்ரமின் மனதுக்குள் கணலாக எரிந்துகொண்டிருந்தது. ``இது ஒரு ஹீரோவுக்கு அபூர்வமா கிடைக்கிற வாய்ப்பு. ஒரே படத்துல ஆக்‌ஷன் ஹீரோவாகவும், அதே சமயம் பெர்ஃபார்மராவும் அடையாளம் காட்டிக்கொள்ள சரியான படம்" என்று பாலா சொன்னபோது ``நான் பண்றேன் பாலா" என்று பாலாவின் கனவை தன் கனவாகவும் கண்களுக்குள் சேமித்துக்கொண்டார் விக்ரம். `அகிலன்', `சேது'வாக மாறினான்.

நடிகர்கள், லொக்கேஷன் என எல்லாம் முடிவு செய்து ஷூட்டிங் கிளம்பும் நேரத்தில் அடுத்த பேரிடியாக வந்து விழுந்தது `பெப்சி-படைப்பாளிகள்' தகராறு. ஆறேழு மாதங்கள் வேலைநிறுத்தம் முடிந்து படப்பிடிப்பை ஆரம்பித்தார்கள். காலேஜ் காட்சிகள், பாடல்கள் என முதல் பாதிக்கான காட்சிகளை படம் பிடித்தார்கள். அதன்பிறகு ஒரு மாதம் ஓய்வு. இருபது கிலோ வரை எடை குறைத்து இரண்டாம் பாதிக் காட்சிகளுக்காக தன்னை வருத்திக்கொண்டிருந்தார் விக்ரம்.

விக்ரம் மற்றும் ஶ்ரீமன்
விக்ரம் மற்றும் ஶ்ரீமன்

``ரொம்ப கஷ்டமா இருக்கா விக்ரம்" என பாலா கேட்டபோது ``இல்ல பாலா, நான் நிறைய அவமானங்களைச் சந்திச்சிட்டேன். நான் ஆக்சிடென்ட்ல அடிபட்டு கிடந்தப்போ என் சொந்தக்காரர் ஒருத்தர் `உனக்குனு சினிமாவுல ஏதாவது நொண்டி கேரக்டர் கிடைக்கும்னு' சொன்னார். நாம ஜெயிக்கணும் பாலா. பழிவாங்குறதுனா அடிக்கறது, அவமானப்படுத்தறது மட்டுமல்ல... அவங்க கண்ணு முன்னால நாம ஜெயிக்கணும். முன்னாடி நான் தனியா இருந்தேன். இப்போ நீங்க கூட இருக்கீங்க. சேர்ந்து ஜெயிப்போம் பாலா" என்றார் விக்ரம்.

இரண்டாம் பாதி ஷூட்டிங் ஆரம்பமானது. விக்ரமின் அர்ப்பணிப்பைப் பார்த்து பாலா திகைத்துப் போனார். இந்த நூற்றாண்டு நினைவில் வைத்துக்கொள்ளும் நடிகனாக விக்ரம் இருப்பார் என உறுதியாக நம்பினார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி இசைக்கோப்பு ஆரம்பித்தது. உடலாகக் கொண்டு வந்த `சேது'வுக்கு தன் இசை மூலம் உயிரூட்டினார் இளையராஜா. தணிக்கை குழுவில் படம் பார்த்தவர்கள் பாராட்டித் தள்ளினார்கள். ஆனால், படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. திரைக்கு வராமலேயே `சேது' ப்ரீவியூ தியேட்டரில் மட்டும் நூறு நாள்களுக்கு மேல் ஓடியது.

விக்ரம்
விக்ரம்
`` `சேது’ க்ளைமேக்ஸ் ஷூட்ல நல்லா தூங்கிட்டேன்!’’ - அபிதா #20YearsofSethu

படத்தின் சோகமான கிளைமேக்ஸ் எடுபடாது எனப் பலரும் சொன்னார்கள். ஒரு வழியாக படம் 1999-ம் ஆண்டு, டிசம்பர் 10-ம் தேதி வெளியானது. முதல் வாரம் படம் பார்க்க யாரும் இல்லை. ஆனால், படம் மெதுவாக பிக்-அப் ஆனது. பத்திரிகைகளும் டி.வி விமர்சனமும் `சேது'வைக் கொண்டாடின. ராசியில்லாத நடிகர் எனச் சொல்லப்பட்ட விக்ரமை, சிறந்த நடிகர் எனப் புகழ்ந்தார்கள். புது வருடமான 2000, பாலாவுக்கும் விக்ரமுக்கும் புதிய பாதைகளை வகுத்துத் தந்தது.

`சேது'வுக்கு சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது கிடைத்தது. இப்படியான அதிசயங்கள், திடீரென நிகழ்ந்துவிடுவதில்லை. கனவுகளும், கடின உழைப்புகளும் பிணைந்த சங்கிலி விளைவுகளால் நிகழ்கிறது. `நாம ஜெயிக்கணும் பாலா...' இந்த வார்த்தைகளில் இருந்த வெறிதான் அவர்களைக் கடுமையாய் உழைக்க வைத்தது. அந்த வெறிதான் அவர்களைப் பல துன்பங்களைத் தாங்கச் செய்தது. உலகளாவிய சினிமா கலைஞர்களுக்கு மட்டுமல்ல, மற்ற துறையினருக்கும் `சேது' உருவான கதை, மனங்களை எழுச்சியூட்டும் கதை.

அடுத்த கட்டுரைக்கு