ஸ்வேதா திரிபாதி
டெல்லியில் பிறந்து வளர்ந்த ஸ்வேதாவுக்கு மாடலிங் மீது ஆர்வம். மாடலிங் மூலமாக பாலிவுட் சினிமாவில் கால்பதித்தவருக்கு, 'மாசான்' திரைப்படம் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. இதில், இவர் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தபோதும், இவரது புன்னகைக்கு பலரும் மயங்கினர். குறிப்பாக, 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது இயக்குநர் மாரி செல்வராஜ், ''ஸ்வேதா திரிபாதியின் நடிப்பு மிகவும் பிடிக்கும். இவரை என் படத்தில் நடிக்கவைப்பேன்'' என்று கூறினார். தமிழில் இவருக்கு முதல் படமாக அமைந்த 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தில் வடநாட்டு சர்க்கஸ் கலைஞராக இவர் நடித்திருந்தார். தேடிவரும் கதைகளில் தனக்கு முக்கியத்துவம் இருக்கும் கேரக்டர்களைத் தேர்ந்தெடுக்கும் ஸ்வேதாவுக்காக, தமிழ் சினிமா ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅனகா :

'நட்பே துணை' படத்தின்,மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், அனகா. மலையாளத்தில் சில படங்களில் நடித்தவருக்கு 'நட்பே துணை' வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதலில் கதையைக் கேட்டவருக்கு, நடிகர் 'ஹிப் ஹாப்' ஆதி யாரென்று தெரியவில்லையாம். பிறகு, 'மீசைய முறுக்கு' படத்தைப் பார்த்துவிட்டு, இந்தப் படத்தில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார். ஹாக்கியை மையமாகவைத்து உருவான 'நட்பே துணை' படத்திற்காக முறைப்படி ஹாக்கி பயிற்சி எடுத்துக்கொண்டு படப்பிடிப்புக்குச் சென்றிருக்கிறார், அனகா.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
லவ்லின் :
நடிகை விஜி சந்திரசேகரின் இளைய மகள், லவ்லின் சந்திரசேகர். 'ஹவுஸ் ஓனர்' படத்தின்மூலம் நடிகையாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவருக்கு, இந்தப் படம் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இந்தப் படத்துக்கு முன்பாக, இவர் மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் அனுபம் கெர் நடத்தும் நடிப்புக் கல்லூரியில் சேர்ந்து நடிப்பைக் கற்றிருக்கிறார். மேலும், துபாயிலும் நடிப்பு சம்பந்தமாகப் படித்திருக்கிறார். அம்மா சினிமாவில் நடிகையாக இருந்ததனால், இவருக்கு சிறு வயதிலிருந்தே நடிப்புமீது ஆர்வம். அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போகும் லவ்லினை ஒருமுறை 'குட்டி ஹீரோயின்' என்று நடிகர், இயக்குநர் சமுத்திரக்கனி அழைத்திருக்கிறார். 'ஹவுஸ் ஓனர்' படத்துக்காக லஷ்மி ராமகிருஷ்ணன் நடத்திய ஆடிஷனில் கலந்துகொண்டு, ஹீரோயினாகத் தேர்வானார், லவ்லின்.

கீர்த்தி பாண்டியன் :

'தும்பா' படத்தின்மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், கீர்த்தி பாண்டியன். இவர், நடிகர் அருண் பாண்டியனின் மகள். நடிப்பில் ஆர்வமுள்ள இவர், கடந்த மூன்று வருடங்களாக தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் இருந்திருக்கிறார். 'தும்பா' படத்துக்கு முன்பே இவருக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வந்திருக்கின்றன. ஆனால், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லாத காரணத்தால், பல படங்களை நிராகரித்திருக்கிறார் கீர்த்தி பாண்டியன்.
சந்தோஷ் நம்பிராஜன்

தேசிய விருது வென்ற 'டூ லெட்' படத்தில் ஹீரோவாக நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றவர், சந்தோஷ் நம்பிராஜன். தன்னிடம் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய இவரை படத்தின் ஹீரோவாக்கி அழகு பார்த்திருக்கிறார், செழியன். இந்தப் படம், இவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரை வாங்கிக் கொடுத்திருந்தாலும், இவரை ஹீரோவாக வைத்துப் படமெடுக்கும் வாய்ப்பு தமிழ் சினிமாவில் அதிகம் இல்லை என்பது நம்பிராஜனின் வருத்தம்.
அஞ்சலி நாயர்

'நெடுநல்வாடை' படத்தின்மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், அஞ்சலி நாயர். முதலில் இப்படத்துக்கு வேறொரு ஹீரோயின் கமிட்டாகி படத்திலிருந்து விலக, அஞ்சலி நாயரை ஹீரோயினாக கமிட் செய்தது படக்குழு. படத்தில் நடித்துக்கொண்டே தனக்குப் பிடித்த விமான பணிபெண் வேலையும் செய்துகொண்டிருந்திருக்கிறார், அஞ்சலி நாயர். முக்கியமாக, படத்தின் புரமோஷனுக்குக்கூட வரமுடியாத அளவுக்கு வேலையில் கவனமாக இருந்த இவருக்கு, வாழ்த்துகள் குவிந்தது. தமிழ் சினிமாவில் அழுத்தமான கதாபாத்திரங்கள் அஞ்சலி நாயருக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன.