Published:Updated:

`மறுவார்த்தை’, `வெறித்தனம்... நெஞ்சுக்குள்ள குடியிருந்த’ டாப் 10 பாடல்கள்! #2019SongRewind

வருடத்திற்கு வருடம் படத்திற்குப் பஞ்சம் இருக்குமே தவிர, பாடல்களுக்கு இருக்காது. அப்படி 2019-ல் படமாக வெளியாகி ப்ளே லிஸ்ட்டை ஆக்கிரமித்த டாப் 10 பாடல்களின் லிஸ்ட் இதோ! #2019songsrewind

1
மறுவார்த்தை பேசாதே – எனை நோக்கி பாயும் தோட்டா

'எனை நோக்கி பாயும் தோட்டா'- மறுவார்த்தை:

படத்தைப் பார்க்க காத்திருந்தவர்களைவிட, பாடல்களைக் கேட்கவும் அதை விஷுவலாகப் பார்க்கவும் காத்திருந்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். `மறுவார்த்தை', `விசிறி', `நான் பிழைப்பேனா', `நிஜமே' என ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். அதுவும் `மறுவார்த்தை' போன்றதோர் மெலடி பாடலுக்கு திரையரங்கில் நிகழ்ந்த கொண்டாட்டம் எல்லாம் வேற லெவல். கௌதம் மேனன் - தாமரை காம்போ என்றால் சொல்லவே தேவையில்லை. இவர்களோடு சித் ஶ்ரீராமும் இணைந்து, பாடல்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றிருப்பார். இதைத் தன்னுடைய இசையின்மூலம் மேலும் அழகுபடுத்திய`கேப்டன் ஆஃப் தி ஷிப்' தர்புகா சிவாவுக்கு ஹார்ட்ஸ், லைக்ஸ், வாவ்!

2
கமலா கலாசா –சங்கத்தமிழன்

'சங்கத்தமிழன்' – கமலா கலாசா:

`குலேபா' பாடலின் மூலம் குத்தாட்டம் போடவைத்த விவேக் - மெர்வின் கூட்டணி, அதே கலர்ஃபுல் கொண்டாடத்தைக் கொடுக்கக் களமிறங்கிய பாடல்தான், `கமலா கலாசா'. விவேக் சிவா - சஞ்சனா காம்போ இப்பாடலுக்கு கொடுத்த ஃப்ளேவர், திரையிலிருக்கும் ஒவ்வொருவரையும் ப்ரேக் டான்ஸ் ஆட வைத்தது. பலரது காலர் டியூன்களையும் ஆக்கிரமித்தார், இந்த கமலா கலாசா.

3
கத்தரி பூவழகி – அசுரன்

'அசுரன்'- கத்தரிப் பூவழகி:

ஸ்லோ மோஷனில் நடந்துவரும் தனுஷை நினைத்தாலே இப்படத்தின் பிஜிஎம்மும் நம் காதுகளில் ஒலிக்கும். அதேபோல் படத்தின் வலி, ஓலம், காதல் என எல்லாவற்றையும் கடத்தியது பாடல்கள். முகம் முழுக்க மீசை தாடி படர்ந்திருந்தால், இரு டீனேஜர்களுக்கு அப்பா. அதே தாடி மீசையை ஷேவ் செய்தால், 20 வயது இளைஞன். அதுவும் வரப்பு மீசையில் இவர் ஆடும் `கத்திரிப் பூவழகி'தான் ஒவ்வொருவருக்கும் ஃபேவரைட் பாடலாக அமைந்தது. ஏகாதேசியின் பாடல் வரிகளோடு, வேல்முருகன், ராஜலட்சுமி, நெப்போலியா என இவர்களது குரலில் கிராமத்து வாசனை வந்துபோகும்.

4
வெறித்தனம் – பிகில்

'பிகில்' - வெறித்தனம்:

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் விஜய் முதல் முறையாகப் பாடிய பாடல் `வெறித்தனம்'. இந்தப் பாடலின் ரிசல்ட்டை, பாடலின் முதல் வரியே உணர்த்தியிருக்கும். விஜய், தன்னுடைய குரலில் `ராஆஆஆவடி' என இழுக்கும்போது, உண்மையிலேயே ராவடிதான். விஜய் தன்னுடைய ரசிகர்களுடன் எளிமையாக உருவாகும் விதமாக அமைந்திருந்தது, விவேக்கின் வரிகள்.

5
காந்தக் கண்ணழகி – நம்ம வீட்டு பிள்ளை

'நம்ம வீட்டு பிள்ளை' - காந்தக் கண்ணழகி:

கவுண்டமணியின் எபிக் டயலாக்கை வைத்து சிவகார்த்திகேயனால் கட்டியெழுப்பப்பட்ட பாடலே, `காந்தக் கண்ணழகி'. `ஓமாஹசியா', `நாக்க மூக்க', `ஹசிலி ஃபிசிலி' என அர்த்தம் தெரியாத வரிகளென்றாலே அந்தப் பாடல் ஹிட்தான். இந்த வரிசையில்,`கும்முருடப்புரு' பாடலும் இணைந்துகொண்டது. இமான் இசையில் அனிருத் பாடிய இப்பாடல், குழந்தைகளின் ஃபேவரைட்டானது.

6
பைசா நோட்டு – கோமாளி

'கோமாளி'- பைசா நோட்டு:

படத்தின் கதை மூலம் 90'ஸ் கிட்ஸின் நினைவுகளைத் தூண்டிவிட்டதிலேயே பாதி படம் வெற்றியடைந்துவிட்டது. அதைத் தொடர்ந்து, ஹிப்ஹாப்பின் இசையில் வெளியான ஒவ்வொரு பாடலும் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. `பைசா நோட்ட உத்துப் பார்த்தேன்' பாடல், ஒவ்வொருவரையும் ஆட்டம்போட வைக்க, விஷுவல் ஒரு பக்கம் `வாவ்' போடவைத்தது. கதை என்னவோ 90'ஸ் கிட்ஸின் நினைவுகளை வருடிவிட்டாலும், பாடல்கள் என்னவோ 2கே கிட்ஸுக்கு டார்கெட் செய்ததுபோலத்தான் இருந்தது.

7
புலராத காலைதனிலே –டியர் காம்ரேட்

'டியர் காம்ரேட்' - புலராத காலைதனிலே:

`கீத கோவிந்தம்' படத்தின் ஹிட்டைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்து நடித்திருந்த படம் `டியர் காம்ரேட்'. கார்த்திக் நேத்தா `புலராத' பாடலின் வரிகளைச் செதுக்க, ஜஸ்ட்டின் பிரபாகரன் தன்னுடைய இசையின்மூலம் அழகாக்கியிருப்பார். நனையாத நிழல், புணரும் காதல், நிலவோடு பேசும் மழை என வரிகளில் அத்தனை உணர்வுகள் புதைந்திருக்கும்.

8
தீரா காதல் – மான்ஸ்டர்

'மான்ஸ்டர்' - தீரா காதல்:

ஜஸ்டின் பிரபாகரனின் இசையில், இந்த வருடத்தின் மற்றுமொரு மாஸ்டர் பீஸ் 'மான்ஸ்டர்'. யுகபாரதி, ஷங்கர்தாஸ், கார்த்திக் நேத்தா வரிகளில், படத்தின் பாடல்கள் அனைத்துமே ஃபீல் குட் ரகம். சொந்த வீடு வாங்கி, கல்யாணம் நடந்து, வீட்டில் குடியேறும்போது தொடங்குகிறது. `தீரா காதல்' பாடல். வீடு வாங்கும் கனவில் இருப்பவன், தன் ஏக்கத்தையும் அந்தக் கனவு நிறைவேறிய பின்னும், 'சுவர்க்கோழியின் ஒலியைப் பெரும் இசையென லயித்திருப்பேன், தரை விழுகிற ஒளிமேல் சிறு நிழலெனப் படுத்திருப்பேன், நரை விழுகிற வரையில் இந்த அறைகளை ரசித்திருப்பேன்' என்ற இந்த வரிகளின்மூலம் பாடல் முழுவதும் இழையோடியிருக்கும்.

9
கோடி அருவி – மெஹந்தி சர்க்கஸ்

'மெஹந்தி சர்க்கஸ்' - கோடி அருவி:

கேசட் கடை நடத்தும் நாயகனுக்கும் சர்க்கஸ் நடத்தும் குடும்பத்தைச் சேர்ந்த நாயகிக்கும் காதல் மலர, அவர்களுக்கு நடக்கும் சாதிப் பிரச்னையைக் கடந்து காதல் கைகூடியதா என்பதை சொல்லும் படம் `மெஹந்தி சர்க்கஸ்'. ஷான் ரோல்டன் இசையில், யுகபாரதியின் வரிகளுக்கு பிரதீப் குமார், நித்யஸ்ரீ பாடியிருக்கும் இப்பாடல்தான், இரவு நேரப் பயணங்களின் ப்ளே லிஸ்டில் லூப் மோடில் ஒலித்துக்கொண்டிருக்கும்.

10
மரண மாஸ் – பேட்ட

'பேட்ட' - மரண மாஸ்:

ரஜினிக்கு முதல் முறை அனிருத் இசையமைத்திருக்கும் படம், `பேட்ட'. எதிர்பார்த்ததுபோலவே `மரண மாஸ்', `உல்லாலா', `இளமை திரும்புதே' என அனைத்துப் பாடல்களும் தெறி ஹிட். ரஜினியின் ஸ்டைலை இன்ச் பை இன்ச் கொண்டாடியது `மரண மாஸ்' பாடல். அதேபோல், ரஜினி படங்களில் கட்டாயம் ஒரு பிலாசஃபி பாடல் இருக்கும். அந்த வகையில் `பைலா' ஸ்டைலில் உருவாகியிருந்த `உல்லாலா' பாடலும், தனுஷின் வரிகளில் `இளமை திரும்புதே' பாடலும் ஹிட்டோ ஹிட்.

`ஒரிஜினலாவே நான் வில்லன் மா!’- அதிர வைக்கும் தர்பார் டிரெய்லர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு