Published:Updated:

அரசியல், ஆக்‌ஷன், டிராமா... 2020-ல் கலந்துகட்டி வரும் வுமன் சென்ட்ரிக் படங்கள்!

இந்த வருடம் பல `வுமன் சென்ட்ரிக்’ படங்கள் வெளிவர வரிசைகட்டி நிற்கின்றன. அதன் லிஸ்ட் இதோ!

திரைக்குப் பின்னால், பெண் கலைஞர்களின் பங்களிப்பும், திரையில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களும் தமிழ் சினிமாவில் சமீபகாலத்தில் அதிகரித்திருக்கிறது. இந்த வகைப் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்க, கதாநாயகியை மையப்படுத்தி வரும் கதைகளைத் தேர்ந்தெடுக்க முன்னணிக் கதாநாயகிகளும் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த வருடம் `வுமன் சென்ட்ரிக்’ படங்கள் பல வரிசைகட்டி நிற்கின்றன.

2
தலைவி

தலைவி:

`தாம்தூம்’ படத்துக்குப் பிறகு கங்கனா ரணாவத் தமிழில் நடிக்கும் படம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இப்படத்தின் மீது இருக்கிறது. அதே சமயம் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. `தலைவி’ ஃபர்ஸ்ட் லுக்கிலிருந்து, படம் குறித்தான ஒவ்வொரு அப்டேட் வரும்போதும் பல விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி வெப் சீரிஸ் வந்துவிட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவாக கங்கனா, எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி, சசிகலாவாக பூர்ணா, ஜானகியாக மதுபாலா என ஏ.எல். விஜய் இயக்கத்தில் `தலைவி’ வரும் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தியிலும் வெளியாக இருக்கிறது `தலைவி’

3
பொன்மகள் வந்தாள்

பொன்மகள் வந்தாள்:

`36 வயதினிலே’, `காற்றின் மொழி’, `ராட்சசி’ எனத் தனது செகண்டு இன்னிங்ஸில் `ஹீரோயின் சென்ட்ரிக்’ படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் ஜோதிகாவின் அடுத்த ரிலீஸ் `பொன்மகள் வந்தாள்’. 2டி தயாரிப்பில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஃப்ரெட்ரிக் இயக்கி இருக்கிறார். முதன்முறையாக வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஜோதிகா. இயக்குநர் பாக்யராஜ், பார்த்திபன், பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரும், பிருந்தா சிவக்குமார் பாடிய `வா செல்லம்’ பாடலும் வெளியானது.

4
மூக்குத்தி அம்மன்

மூக்குத்தி அம்மன்:

ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தைத் தொடங்கிய ஆர்.ஜே. பாலாஜி, வீஜே, நகைச்சுவை நடிகர், ஹீரோ எனத் தனது கரியர் கிராஃபில் வைத்துள்ள அடுத்த புள்ளி இயக்குநர். `ஹீரோயின் சென்ட்ரிக்’ படங்களில் அதிக அளவில் கவனம் செலுத்தி வரும் நயன்தாராவின் அடுத்த படமான `மூக்குத்தி அம்மன்’னின் இயக்குநர்தான் பாலாஜி.

படத்தின் ஒன்லைன் குறித்து, `கடவுளைக் கிண்டல் பண்றவங்களைக் கேள்வி கேட்குற படமா இது இருக்கும். கண்டிப்பா, கடவுளைக் கிண்டல் பண்ற படமா இருக்காது’ என்கிறார் ஆர்.ஜே. பாலாஜி. சமீபத்தில் சிவப்பு சேலையில் அம்மன் வேடத்தில் நயன்தாரா இருக்கும்படியான ஃபர்ஸ்ட் லுக், சமூகவலைதளங்களில் டிரெண்டானது. சம்மரில் ரசிகர்களை தரிசிக்க வருகிறார் `மூக்குத்தி அம்மன்'.

5
சூர்ப்பனகை

சூர்ப்பனகை:

`கேடி பில்லா, கில்லாடி ரங்கா’, `சரவணன் இருக்க பயமேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த ரெஜினா கசாண்ட்ரே , `1945’, `பார்ட்டி’ என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். அதைத் தொடர்ந்து தற்போது நடித்து வரும் பீரியட் படம்தான் `சூர்ப்பனகை’.

கார்த்திக் ராஜூ இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என பைலிங்குவலாக வெளிவரவிருக்கும் இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம் ரெஜினா. தெலுங்கில் பிஸியாக இருந்த ரெஜினாவை `சூர்ப்பனகை’யாக விரைவில் கோலிவுட்டில் பார்க்கலாம்.

6
அதோ அந்த பறவை போல

அதோ அந்த பறவை போல:

ஒரு குட்டி பிரேக்குக்குப் பிறகு `ஆடை’, `அதோ அந்த பறவை போல’ எனத் தனக்கான படங்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறார் அமலாபால். ரத்னகுமார் இயக்கத்தில் இவர் நடித்த `ஆடை’ படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் அமலாபாலுக்கு முக்கியமானதொரு படமாகவே இது அமைந்தது.

ஆக்‌ஷன் – அட்வென்ச்சர் ஜானரில் உருவாகியிருக்கும் `அதோ அந்த பறவைபோல’ படம் கடந்த மாதமே வெளியாகவேண்டியது. சில காரணங்களால் தள்ளிப்போனது, கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7
Paris Paris

பாரிஸ் பாரிஸ்:

பாலிவுட்டில் 2014-ல் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன படம் `குயின்’. தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்ற இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழ் மற்றும் கன்னடத்தில் நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கிறார்.

தமிழில் காஜல் அகர்வாலும், தெலுங்கில் தமன்னாவும், கன்னடத்தில் பருல் யாதவ்வும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும் நடித்திருக்கிறார்கள். தமிழில் காஜலுடைய கதாபாத்திரத்தின் பெயர் பரமேஸ்வரி. பரமேஸ்வரி இங்கிருந்து எதற்காக பாரிஸ் போகிறார் என்பதுதான் `பாரிஸ் பாரிஸ்’. அமித் திரிவேதி இசையமைக்க, தமிழச்சி தங்கபாண்டியன் வசனம் எழுதியுள்ளார்.

8
ராங்கி

ராங்கி:

சமீப காலமாக வுமன் சென்ட்ரிக் படங்களில் கவனம் செலுத்தி வரும் த்ரிஷா, தற்போது `ராங்கி'யில் நடித்திருக்கிறார். `எங்கேயும் எப்போதும்’, `இவன் வேற மாதிரி’ படங்களை இயக்கிய சரவணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஜர்னலிஸ்ட்டாக நடித்துள்ளார் த்ரிஷா .

9
பென்குயின்

பென்குயின்:

ரஜினியின் அடுத்த படமான `அண்ணாத்த’வில் பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், `நடிகையர் திலகம்’ படத்துக்குப் பிறகு நடிக்கும் `வுமன் சென்ட்ரிக்’ படம் `பெண்குயின்’. கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் படத்தை இயக்குகிறார். கர்ப்பிணிப் பெண்ணாக கீர்த்தி சுரேஷ் இருக்கும்படியான இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதற்குப் பிறகான அப்டேட்ஸ்களுக்கு ரசிகர்கள் வெயிட்டிங்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு