Published:Updated:

அக்கட தேசம் 2021

அக்கட தேசம் 2021
பிரீமியம் ஸ்டோரி
அக்கட தேசம் 2021

2021-ல் எதிர்பார்ப்பில் இருக்கும் தெலுங்கு, மலையாள சினிமாக்களின் லிஸ்ட்!

அக்கட தேசம் 2021

2021-ல் எதிர்பார்ப்பில் இருக்கும் தெலுங்கு, மலையாள சினிமாக்களின் லிஸ்ட்!

Published:Updated:
அக்கட தேசம் 2021
பிரீமியம் ஸ்டோரி
அக்கட தேசம் 2021
2020 எப்படி முடிந்தது என்று தெரியாமலே முடியப்போகிறது. இந்த வருடம் வெளியாகவிருந்த பல படங்கள் அடுத்த வருடத்திற்குச் சென்றுவிட்டன. கோலிவுட்டின் 2021 எப்படியிருக்கும் என்பது ஓரளவுக்குத் தெரியும். கொஞ்சம் பக்கத்து மாநிலங்களுக்குச் சென்று அங்குள்ள நிலவரம் என்ன என்பதைப் பார்ப்பாமோ? 2021-ல் எதிர்பார்ப்பில் இருக்கும் தெலுங்கு, மலையாள சினிமாக்களின் லிஸ்ட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆச்சார்யா

இது மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 152வது படம். கொரடாலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சிரஞ்சீவிக்கு டூயல் ரோல். அதில் ஒரு கதாபாத்திரத்தில் நக்ஸலைட்டாக நடிக்கிறார். ‘கைதி நம்பர் 150’ படத்திற்குப் பிறகு, இந்தப் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் நடிக்கிறார். இந்தப் படத்தை ராம் சரண் தயாரிப்பதோடு கேமியோ ரோலிலும் நடிக்கிறார். இதை முடித்துவிட்டு, ‘லூசிபர்’, ‘வேதாளம்’ படங்களின் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார் சிரு.

வக்கீல் சாப்

அரசியல் பக்கம் போனபிறகு, பவன் கல்யாண் நடித்த படங்கள் எதுவும் பெரிய ஹிட் இல்லை. அரசியலிலும் நினைத்தபடி ஹிட் கிடைக்கவில்லை. அதனால், அடுத்தடுத்து நான்கு படங்களை கமிட் செய்திருக்கிறார், பவன் கல்யாண். அதில் முதல் படம் ‘பிங்க்’ படத்தினுடைய ரீமேக் ‘வக்கீல் சாப்.’ அமிதாப் பச்சன் நடித்த கேரக்டரில் பவன் நடித்து வருகிறார். அஞ்சலி, நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

அக்கட தேசம் 2021

சர்காரு வாரிபாட்டா

‘கீதா கோவிந்தம்’ படத்தை எடுத்த பரசுராம், இந்தப் படத்தை இயக்குகிறார். முதல்முறை மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். வங்கியில் நடக்கும் கொள்ளை தொடர்பாகத்தான் இந்தப் படம் இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகின்றன. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், அதில் மகேஷ் பாபுவின் கழுத்தில் இருக்கும் ஒரு ரூபாய் நாணய டாட்டூதான் ஹைலைட்டாகப் பேசப்பட்டது.

புஷ்பா

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். ராஷ்மிகா மந்தனாதான் ஹீரோயின். சுகுமார் - அல்லு அர்ஜுன் - தேவி ஸ்ரீபிரசாத் எனும் இந்த சூப்பர்ஹிட் காம்போ பல ஆண்டுகள் கழித்து இதில் இணைந்திருப்பது கூடுதல் ஸ்பெஷல்!

ராதே ஷ்யாம்

‘பாகுபலி’க்குப் பிறகு, இந்தியா முழுக்க பரிட்சயமான பிரபாஸின் அடுத்த படமான ‘சாஹோ’ எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. அதனால், தன்னுடைய அடுத்த படத்தில் விட்டதைப் பிடிக்கவேண்டும் என்று முழு வீச்சில் இறங்கியிருக்கிறார் பிரபாஸ். இத்தாலியில் நடக்கும் அழகிய காதல் கதையே இந்த ‘ராதே ஷ்யாம்.’ ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் நாயகி பூஜா ஹெக்டே. கோலிவுட்டிலிருந்து ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவும் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனும் படக்குழுவில் இணைந்துள்ளனர். இந்தப் படத்திற்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு பிரபாஸின் அடுத்த இரண்டு படங்களுக்கும் இருக்கின்றன. ‘நடிகையர் திலகம்’ இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். மற்றொரு படம், ஓம் ராவத் இயக்கும் ‘ஆதிபுருஷ்.’

இவை தவிர, நானியின் ‘டக் ஜெகதீஷ்’ மற்றும் ‘ஷியாம் சிங்கராய்’, பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவின் ‘பைட்டர்’ ஆகிய படங்களுக்கும் மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருக்கின்றது.

அக்கட தேசம் 2021

த்ரிஷ்யம் 2

ஏற்கெனவே சூப்பர் ஹிட்டான படத்தில் இரண்டாம் பாகம் என்பதாலேயே இதற்கான எதிர்பார்ப்பு வேற லெவலில் உள்ளது. தவிர, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், த்ரிஷா நடிப்பில் ‘ராம்’ என்ற படமும் இருக்கிறது. வெளிநாட்டிற்குச் சென்று சில காட்சிகள் எடுக்கவேண்டும் என்பதால் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். தவிர, மோகன்லால் ‘பேரோஸ்’ என்ற 3டி படத்தை இயக்கவிருக்கிறார். லாலேட்டனை இயக்குநராகப் பார்க்கவும் ஆர்வமாக இருக்கிறது மல்லுவுட். இதற்கு இசை நம்ம ஊர் லிடியன் நாதஸ்வரம்தான்.

குரூப்

சுகுமார குரூப் என்ற உண்மையான கேங்ஸ்டரின் வாழ்க்கைதான் ‘குரூப்.’ கேரள போலீஸால் இன்னும் தேடப்பட்டுக் கொண்டிருக்கும் குற்றவாளி இவர். அந்தக் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். இவரின் முதல் படமான ‘செகண்ட் ஷோ’வை இயக்கிய ஸ்ரீநாத் ராஜேந்திரன்தான் இந்தப் படத்தின் இயக்குநர். தவிர, முக்கியமான கதாபாத்திரத்தில் டொவினோ தாமஸ் நடித்திருக்கிறார்.

மாலிக்

மூன்றாவது முறையாக மகேஷ் நாராயணன் - பகத் பாசில் காம்போ இணையும் படம் ‘மாலிக்.’ இதுவும் ஒரு கேங்ஸ்டர் கதை. சுலைமான் மாலிக் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் பகத். 25 வயதிலிருந்து 65 வயது வரை அந்தக் கேரக்டரின் பயணம் படத்தில் இருக்குமாம். அதற்காக மூன்று வெவ்வேறு லுக்கில் வருகிறார் பகத் பாசில். இதனைத் தொடர்ந்து, ‘ஜோஜி’, ‘தங்கம்’, ‘இருள்’ என அடுத்தடுத்து பகத் பிலிமோகிராபி நிறைந்திருக்கிறது.

அக்கட தேசம் 2021

ஆடுஜீவிதம்

பென்யமின் என்பவர் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ என்ற நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. அரேபிய நாட்டில் மாட்டிக்கொண்ட இந்தியர், எப்படித் தப்பிக்கிறார் என்பதே படம். இந்தப் படத்திற்காக உடல் எடையைக் குறைத்து, நிறைய தாடி வளர்த்து, தோற்றத்தில் பயங்கர சேஞ்ச் ஓவர் காட்டியிருக்கிறார் பிரித்விராஜ். ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் என டெக்னிக்கலாகவும் படம் மிகவும் ஸ்ட்ராங். இந்தப் படம் இல்லாமல், ‘வாரியம்குன்னன்’ எனும் வரலாற்றுப் படம், ‘கடுவா’, ‘ஜன கண மன’ உள்ளிட்ட பல படங்கள் பிரித்விராஜ் கைவசமுள்ளன. தவிர, இவர் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பகுதியான ‘எம்புரான்’ படப்பிடிப்பையும் விரைவில் தொடங்கவிருக்கிறார்.

அக்கட தேசம் 2021

துறமுகம்

‘கம்மட்டிப்பாடம்’ படத்திற்குப் பிறகு, நான்கு வருடங்கள் கழித்து வரவிருக்கிறது ராஜீவ் ரவி இயக்கியிருக்கும் ‘துறமுகம்.’ நிவின் பாலி, இந்திரஜித், நிமிஷா ஆகியோர் நடித்துள்ளனர். 1950களில் நடக்கும் கதை. கொச்சி துறைமுகத்தில் உள்ள தொழிலாளர்கள், அவர்களின் வறுமை நிலை, அவர்களுக்கு எதிராக நடத்தப்படும் சுரண்டல்கள், அதில் ஏற்பட்ட புரட்சி ஆகியவற்றைப் பேசும் படமாக இருக்கும் என்கிறார்கள்.

மின்னல் முரளி

இந்தப் படம் எதிர்பார்ப்பில் இருக்க முக்கிய காரணம், இது ஒரு சூப்பர் ஹீரோ படம். டொவினோ தாமஸ் நாயகனாகவும் குரு சோமசுந்தரம் வில்லனாகவும் நடித்திருக்கின்றனர். சூப்பர் ஹீரோ படம் என்றதும் VFX, கிராபிக்ஸ் இருக்கும் என எண்ண வேண்டாம். கிராமத்தில் இருக்கும் சாதாரண சாமானியனுக்கு சூப்பர் பவர் கிடைத்தால் எப்படியிருக்கும் என்பதுதான் கதை. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism