Published:Updated:

தி காஷ்மீர் ஃபைல்ஸ், சோழர்கள் விவகாரம் முதல் வாடகைத்தாய் சர்ச்சை வரை - 2022 சினிமா ஒரு ரீவைண்ட்!

2022 சினிமா ஒரு குட்டி ரீவைண்ட்

இந்த ஆண்டு கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை நடந்த பல நெகிழ்ச்சியான சம்பவங்களும் சர்ச்சைகளும்... 2022 சினிமா எப்படியிருந்தது? ஒரு குட்டி ரீவைண்ட்!

தி காஷ்மீர் ஃபைல்ஸ், சோழர்கள் விவகாரம் முதல் வாடகைத்தாய் சர்ச்சை வரை - 2022 சினிமா ஒரு ரீவைண்ட்!

இந்த ஆண்டு கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை நடந்த பல நெகிழ்ச்சியான சம்பவங்களும் சர்ச்சைகளும்... 2022 சினிமா எப்படியிருந்தது? ஒரு குட்டி ரீவைண்ட்!

Published:Updated:
2022 சினிமா ஒரு குட்டி ரீவைண்ட்
இந்த ஆண்டு ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை நடந்த பல நெகிழ்ச்சியான சம்பவங்களும் சர்ச்சைகளும் சினிமா ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களின் காதுகள் வரை சென்று பேசுபொருளாகியிருந்தது. இந்தச் சம்பவங்கள் சமூகத்திலும் உரையாடலை நிகழ்த்தி இருந்தது என்றுகூட சொல்லலாம். அப்படியான சம்பங்கள் என்னென்ன என்பதைப் பற்றிய ஒரு குட்டி ரீவைண்ட்தான் இது.

ஆஸ்கர்: க்ரிஸ் ராக் கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித்

94வது ஆஸ்கர் விருது விழா
94வது ஆஸ்கர் விருது விழா
94வது ஆஸ்கர் விருது விழாவைத் தொகுத்து வழங்கிய கிறிஸ் ராக்கின் கன்னத்தில் நடிகர் வில் ஸ்மித் அறைந்தது உலகம் பேசும் பெரும் விவாதப் பொருளாகியிருந்தது.

வில் ஸ்மித்தின் மனைவி ஜேடாவுக்கு 'அலோபீசியா' என்ற நோய்த் தாக்கத்தின் காரணமாக முடி கொட்டத் தொடங்கியிருந்ததால் தலையை முழுக்க மொட்டை போட்டுக்கொண்டார். அதைக் குறிப்பிட்டு கிறிஸ் ராக் பேசியதால், அவர் கன்னத்தில் அறைந்தார் வில் ஸ்மித். “என் மனைவியின் பெயரை இழுக்காதே!” எனக் கோபமாகச் சொன்னார். பிறகு வில் ஸ்மித் வருத்தமும் தெரிவித்து, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் மற்றும் சயின்சஸ் உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்தார். இந்தச் சம்பவம் குறித்து ஆஸ்கர் விருதுக்குழுவும் விசாரணை நடத்தி அடுத்த 10 வருடங்களுக்கு அவர் எந்தவித ஆஸ்கர் விழாக்களிலும் கலந்து கொள்ளக் கூடாது என தடை விதித்தது.

இந்துத்துவா பிரசாரமும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' சர்ச்சையும்

`தி காஷ்மீர் ஃபைல்ஸ்!’
`தி காஷ்மீர் ஃபைல்ஸ்!’
1990-களில் காஷ்மீர் பகுதிகளில் இருந்து வெளியேறிய இந்து பண்டிட்களின் துயரங்களை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டதாக வெளியான திரைப்படம் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’.

காஷ்மீர் இந்து பண்டிட்களின் துயரங்களைப் பதிவு செய்கிறோம் என்ற போர்வையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலையும், இந்துத்துவா பிரசாரத்தையும் காட்சிப்படுத்தியிருப்பதாக இத்திரைப்படம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த விவகாரம் கடந்த நவம்பர் மாத கோவா 53-வது சர்வதேச திரைப்பட விழா வரையிலும் நீடித்தது. இந்த விழாவில் பேசிய சர்வதேச திரைப்படப் போட்டித் தேர்வுக்கான குழுத் தலைவராக இருந்த இஸ்ரேலிய இயக்குநர் நாடவ் லேபிட் இத்திரைப்படம் குறித்து, "வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரசாரப் படமான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்', இந்த சர்வதேசத் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. இழிவான இந்தப் படத்தைப் பார்த்து நான் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்திருக்கிறேன். விமர்சனங்களை இந்தத் திரைப்பட விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையாக இங்கு மனக்கசப்புகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்" என்று விமர்சித்துப் பேசியிருந்தார்.

இந்த விவாதம் திரையுலகம் மற்றும் அரசியல் கட்சிகளையும் தாண்டி நாடாளுமன்றம் வரை எதிரொலித்திருந்தது.

இளையராஜாவின் அரசியல் பிரவேசம்

'அம்பேத்கரும் மோடியும்' புத்தகம்; மோடி, இளையராஜா
'அம்பேத்கரும் மோடியும்' புத்தகம்; மோடி, இளையராஜா
இளையராஜாவின் இசைத் தமிழ் மக்களின் காதுகளையும் தாண்டி இதயம் வரை சென்று ஆட்கொண்டிருக்கிறது. ஆனால், அந்த இசை தற்போது காசி வரை சென்று காவி மயமாகி இருப்பதால் மக்களின் ஒரு தரப்பினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இந்த ஆண்டு இளையராஜாவின் இசையையும் அரசியலயையும் பிரித்தறியும் நிலைமைக்கு தமிழ் மக்களைத் தள்ளியிருக்கிறது என்று கூறலாம்.

'அம்பேத்கரும் மோடியும்: சீர்திருத்தவாதியின் சிந்தனையும், செயல்வீரரின் நடவடிக்கையும் (Ambedkar & Modi - Reformer’s Ideas, Performer’s Implementation)' என்ற புத்தகம் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருந்த இளையராஜா மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு, மோடி ஆட்சியின் பல திட்டங்கள் அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது என்றும் பெண்கள், சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக விளிம்புநிலையில் உள்ள மக்களுக்காகப் பல நல்ல திட்டங்களை மோடி அரசு வகுத்துள்ளது என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

"பெண்களுக்கு ஆதரவான முத்தலாக் தடைச்சட்டம், ‘குழந்தைகளைக் காப்போம், குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ போன்ற நடவடிக்கையின் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார்" என்று குறிப்பிட்டுப் பேசியிருந்தார். இது பெரும் பேசுபொருளாக மாறி அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டுப் பேசுவது துளியும் நியாயமானதல்ல என்று பலர் இளையராஜாவின் இந்த முன்னுரையை விமர்சித்திருந்தனர். இதையடுத்து எதிர்பார்த்தபடி பா.ஜ.க அரசின் ஆதரவில் நியமன பதவியின் அடிப்படையில் மாநிலங்களவை உறுப்பினரானார் இளையராஜா.

இளையராஜாவின் இந்த அரசியல் பிரவேசத்தின் நீட்சியாகக் கடந்த நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது ஆன்மிக இசைக் கச்சேரியை அரங்கேற்றினார் இளையராஜா. மேலும், காசிக்கும் தமிழுக்கும் உள்ள பழைமையானத் தொடர்பைப் பற்றிப் பேசியபோது, "காசிக்கும் தமிழுக்கும் பெரும் தொடர்பு உள்ளது. பாரதியார் காசியில் இரண்டு ஆண்டுகள் தங்கி கல்வி பெற்றார். கபீர் தோஹாவிலே 8 வார்த்தைகள் மூலம் ஆன்மிகம் பேசினார். தமிழ்நாட்டில் திருவள்ளுவர் 7 வார்த்தையில் உலகுக்கு வாழ்வியலைத் தந்தார். இவ்வளவு சிறப்பு பெற்ற காசியில் தமிழ்ச் சங்கமம் நடத்த வேண்டும் என பிரதமருக்கு எப்படித் தோன்றியது என்பதைக் கண்டு வியக்கிறேன்" என்றார். இது அவரின் அரசியல் நிலைப்பாடு பற்றிய விவாதத்தை பற்ற வைத்தது.

இப்படியாக, இளையராஜாவின் இந்த அரசியல் பிரவேசம் அவரின் இசையையும் அரசியலையும் பிரித்தறியும் நிலைமைக்கு தமிழ் மக்களைத் தள்ளிவிட்டது இந்த ஆண்டு.

ஜானி டெப் vs ஆம்பர் ஹெர்ட் வழக்கு

ஜானி டெப் vs ஆம்பர் ஹெர்ட்
ஜானி டெப் vs ஆம்பர் ஹெர்ட்
ஆம்பர் ஹெர்ட்டின் அழுகுரல் ஹாலிவுட்டில் பெரும் எதிரொலியாக ஒலித்தது. பல மாதங்களாக நடந்து வந்த ஜானி டெப் vs ஆம்பர் ஹெர்ட் வழக்கு உலகம் பேசும் பேசுபொருளாக இருந்தது.

'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படம் மூலம் பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், தன்னைவிட 25 வயது குறைவாக இருந்த அமெரிக்க நடிகை ஆம்பர் ஹெர்ட் மீது காதல் வயப்பட்டு 2015-ல் அவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், இவர்களின் திருமண வாழ்க்கை வெகுநாள்கள் நீடிக்கவில்லை. பின்னர் இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்றனர். இதையடுத்து 2018-ல் 'தி வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் ஆம்பர் ஹெர்ட் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில் ஜானி டெப் பெயரைக் குறிப்பிடாமல் தன்னைக் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக முன்னிலைப்படுத்திக்கொண்டார். இந்தக் கட்டுரை வெளியான நான்கு நாள்களில் 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' ஆறாவது பாகத்திலிருந்து ஜானி டெப் நீக்கப்பட்டார். மேலும் பல படங்கள் அவரின் கைகளை விட்டு நழுவிச் சென்றன.

இதன்பிறகு ஜானி டெப், கடந்த 2018ல் ஆம்பர் எழுதிய கட்டுரையின் மீது குற்றம்சாட்டி ஆம்பர் தனது சினிமா வாழ்க்கையைச் சிதைத்து வருவதாகவும் இதற்காக அவர் 50 மில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் ஆம்பர் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இதற்கு எதிராக ஆம்பர் தரப்பிலிருந்து 100 மில்லியன் டாலர்கள் கேட்டு ஓர் எதிர் வழக்கும் தொடரப்பட்டது. இரு தரப்பிலும் ஏராளமான வாதங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. ஆனால் ஆம்பரால் ஜானி டெப்பின் குற்றங்களை நிறுபிக்க முடியாமல் போனது. இந்நிலையில் இந்த வழக்கில் ஜானி டெப் அவதூறுக்கு ஆளானதாக அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், ஆம்பர் ஹெர்ட் இழப்பீடாக 15 மில்லியன் டாலர்கள் வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அதேசமயம் ஆம்பர் ஹெர்ட் தொடர்ந்த எதிர் வழக்கில், ஜானி டெப்பின் வழக்கறிஞர் பேசிய அவதூறு பேச்சுக்காக, 2 மில்லியன் டாலர்கள் ஆம்பருக்கு வழங்கவேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஒருபுறம் இந்த வழக்கின் வெற்றியை ஜானி டெப் மற்றும் அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்க்க, மறுபுறம் ஆம்பர் ஹெர்ட்டின் கண்ணீர் நீடித்தபடி இந்த வழக்கு விசாரணை நிறைவுற்றிருந்தது.

68வது தேசிய விருதுகள் - விருதுகளைக் குவித்த 'சூரரைப் போற்று'

68வது தேசிய விருதுகள்
68வது தேசிய விருதுகள்
இந்த ஆண்டு தமிழ் சினிமா மொத்தம் 10 தேசிய விருதுகளைப் பெற்றது. கோவிட் பெருந்தொற்றின் காரணமாக 2020ம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகள், இந்த ஆண்டு நடைபெற்ற 68வது தேசிய விருதுகள் விழாவில் வழங்கப்பட்டது.

இதில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை என 5 தேசிய விருதுகளை தட்டித்தூக்கியிருந்தது 'சூரரைப் போற்று' திரைப்படம். அதைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்த 'மண்டேலா' திரைப்படம் சிறந்த அறிமுக இயக்குநர் மற்றும் சிறந்த வசனதிற்கான தேசிய விருதைப் பெற்றது. சிறந்த தமிழ்ப் படம், சிறந்த எடிட்டர், சிறந்த துணை நடிகைக்கான விருதுகள் என மூன்று விருதுகளை வசந்த் சாய் இயக்கிய ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம் தட்டிச் சென்றது. மலையாளத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படம் சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர், சிறந்த பாடகி, சண்டை இயக்கம் ஆகிய 4 பிரிவுகளில் விருதுகளைப் பெற்றது. சிறந்த பாடகியாக நஞ்சியம்மா தேர்வானது எல்லோருக்கும் நெகிழ்ச்சியானதொரு தருணமாக இருந்தது. 'ஆயிரத்தில் ஒருவன்', 'ஆடுகளம்' என எப்போதோ பெற்றிருக்க வேண்டிய சிறந்த பின்னணி இசைக்கான விருதை 'சூரரைப் போற்று' மூலம் பெற்றுக் கொண்டார் ஜீ.வி. பிரகாஷ்.

சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும், சிறந்த படத்திற்கான விருதை ஜோதிகாவும் பெற்றுக் கொண்டு இருவரும் மாறிமாறி எடுத்துக்கொண்ட புகைப்படம் இந்த ஆண்டின் நெகிழ்ச்சியான புகைப்படங்களில் ஒன்று.

பாடகர் கே.கே-வின் சோகப் பிரிவு

பாடகர் கே.கே | Singer KK
பாடகர் கே.கே | Singer KK

பாடகர் கே.கே என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் கிருஷ்ணகுமார் குன்னத். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி எனப் பல மொழிகளில் பல சிறந்த பாடல்களைப் பாடியுள்ளார். தமிழில் 'மின்சாரக் கனவு' படத்தில் 'ஸ்ட்ராபெர்ரி கண்ணே', 'மன்மதன்' படத்தில் 'காதல் வளர்த்தேன்', 'எம் குமரன் சன் அஃப் மகாலட்சுமி' படத்தில் 'நீயே நீயே', 'கில்லி' படத்தில் 'அப்படிப் போடு', '7ஜி ரெயின்போ காலனி' படத்தில் 'நினைத்து நினைத்து' என இவர் பாடிய பல பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. தன் பாடல்களால் இந்தியா முழுவதும் ரசிகர்களை ஆட்கொண்டிருக்கும் கே.கே, கடந்த மே 31-ம் தேதி கொல்கத்தா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது பிரிவு அவரது ரசிகர்களை மட்டுமில்லாமல் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது.

பொன்னியின் செல்வனும் வெற்றிமாறன் பற்ற வைத்த நெருப்பும்

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் புதினம் எப்போது திரைக்கு வரும் எனக் காத்திருந்த கல்கியின் ரசிகர்கள் அநேகம். அதைச் சாத்தியமாக்கி, அமரர் கல்கியின் `பொன்னியின் செல்வன்' புதினத்தை திரையில் மிளிரச் செய்தார் இயக்குநர் மணிரத்னம்.

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மக்களைக் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாய் திரையரங்குக்கு அழைத்து வந்தது இத்திரைப்படம். பாகம் ஒன்று நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த ஆண்டு இதன் இரண்டாம் பாகம் வெளியாகிறது. ஒருபுறம் இது வரவேற்பை பெற்று வரும் நிலையில் மற்றொருபுறம் படம் வருவதற்கு முன்னரே, வேறொரு விவாதத்தில் சோழர் வரலாறு தமிழ் வரலாறாகச் சென்று சேராமல் இந்து வரலாறு என்ற அடையாளத்துடன் மக்களிடம் சென்று சேர்கிறது. ராஜராஜ சோழன் இந்து அரசனாக அடையாளப்படுத்தப்படுகிறார், இது வரலாற்று திரிபு என்ற விமர்சனமும் எழுந்தது.

இந்த விமர்சனத் தீயைப் பற்ற வைத்த இயக்குநர் வெற்றிமாறன், “கலையை இன்று நாம் சரியாகக் கையாள வேண்டும். தவறினால், வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்குக் காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படித் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்” என்றார்.

வெற்றிமாறனின் இந்தக் கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இதை ஆதரித்தப் பேசியிருந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அருள்மொழி சோழனின் உண்மையான வரலாற்றையும், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான வே.பிரபாகரனின் வரலாற்றையும் கலைவடிவமாக தான் தயாரிக்கவுள்ளதாகவும் இயக்குநர் வெற்றிமாறன் அதை இயக்குவார் என்றும் அறிவித்திருந்தார்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் கல்யாணமும் வாடகைத் தாய் முறையும்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
தமிழ்த் திரையுலகின் கலர்புல் காதல் ஜோடியாக வளம் வந்தவர்கள் நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும். சுமார் ஏழு வருடங்களாகக் காதலித்து வந்த இருவரும் கடந்த ஜூன் 9ம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள Sheraton Grand-ல் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக் கான், கமல்ஹாசன், சிரஞ்சீவி, சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, அனிருத் ரவிச்சந்தர், நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து கடந்த அக்டோபர் 9ம் தேதி விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் "நயன்தாராவும் நானும் அம்மா அப்பா ஆகிவிட்டோம். பிரார்த்தனை, ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் என எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசிர்வதிகப்பட்ட அழகான இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன" என்ற மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்திருந்தார். பின்னர், வாடகைத்தாய் முறையில் குழந்தைப் பெற்றுக் கொண்டனர் என்ற செய்திகளும் பரவின. திருமணமாகி நான்கு மாதங்களே ஆகியிருந்த நிலையில் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெறுவது சட்டப்படி சரியா என்ற கேள்விகள் எழ, சுகாதாரத் துறையின் விசாரணைக்குப் பின்னர், நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டது சட்டப்படி சரிதான். அவர்கள் எந்தச் சட்டத்தையும் மீறவில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டது.

வாடகைத் தாய் முறை சரியானதா, அதில் இருக்கும் சிக்கல்கள் என்ன என்ற விவாதமும் இதன் மூலம் எழுந்து பெரும் பேசுபொருளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரே வருடத்தில் மூன்று இழப்புகள் - மகேஷ் பாபுவைத் தேற்றும் ரசிகர்கள்

மகேஷ் பாபு
மகேஷ் பாபு

நடிகர் மகேஷ் பாபுவுக்கு மிகவும் சோகமான ஆண்டாக அமைந்துவிட்டது இந்த ஆண்டு. கடும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு (56), ஜனவரி 8ம் தேதி இறந்தார். இதையடுத்து தாயார் இந்திரா தேவி (70), வயது முதிர்ச்சியின் காரணமாக உடல் நலக்குறைவால் கடந்த செப்டம்பர் 28ம் தேதி காலமானார். இந்த சோகத்திலிருந்து மீளுவதற்குள் மகேஷ் பாபுவின் தந்தையும், ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட கிருஷ்ணா என்ற கட்டமனேனி சிவ ராம கிருஷ்ண மூர்த்தி (80) மாரடைப்பால் பாதிக்கப்பட்டு கடந்த நவம்பர் 15-ம் தேதி அன்று காலமானார்.  அண்ணன், தாய், தந்தை என ஒரே ஆண்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த இழப்புகளால் மகேஷ் பாபு மிகந்த துயருக்கு ஆளாகியுள்ளார். அவரையும் அவரது குடும்பதையும் சோகத்தில் இருந்த தேற்ற திரையுலகினரும், அவரது ரசிகர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர். மகேஷ் பாபு இந்தத் துயரத்திலிருந்து விரைவில் மீண்டு தனது தாய், தந்தையின் ஆசிர்வாதத்துடன் பல சாதனைகளைப் படைத்து அவர்களுக்கு நிச்சயம் பெருமைச் சேர்ப்பார். எல்லோரின் விருப்பமும் அதுவே!

வாரிசு: பனையூர் பிரியாணி விருந்து; நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி!

வாரிசு; விஜய்
வாரிசு; விஜய்
விஜய்யின் தெலுங்கு, தமிழ் பைலிங்குவல் படமான `வாரிசு' பொங்கலன்று வெளியாகவுள்ளது.

ஆனால், கடந்த மாதம் திடீரென இத்திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல்கள் இருப்பதாகச் சர்ச்சைகள் கிளம்பின. இத்திரைப்பட வெளியிட்டின் அன்றைய தினம் ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை என்பதால் நேரடி தெலுங்குப் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுமென தெலுங்குத் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. இந்த விவகாரம் பேசுபொருளானதையடுத்து தமிழ்த் திரையுலகைச் சார்ந்த பலரும் தெலுங்குத் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்து வந்தனர். இதனிடையே சென்னையில் உள்ள பனையூரில் நடிகர் விஜய் தடபுடலான பிரியாணி விருந்துடன் தனது ரசிகர் மன்றத்தினரை இரண்டு முறை கூட்டிச் சந்தித்துப் பேசியிருந்தார். இந்த விவகாரம் தமிழ் vs தெலுங்குத் திரையுலகம் என பிரச்னைகளை வளர்க்க இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ மற்றும் இயக்குநர் வம்சியும் இருவருமே தெலுங்குத் திரையிலகைச் சேர்ந்தவர்கள் என்பதால் இப்பிரச்சனை சுமூகமாகத் தீர்ந்தது. படம் பொங்கலன்று அங்கும் வெளியாவது உறுதியானது.

இதற்கிடையில் இப்படத்தின் தமிழ்நாட்டுத் திரையரங்க விநியோக உரிமம், அஜித்தின் 'துணிவு' விநியோக உரிமையைப் பெற்றுள்ள ரெட் ஜெயண்ட்டுக்கு வருமா என்ற கேள்விகள் எழுந்த நிலையில் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ அந்த உரிமத்தைப் பெற்றது. பிறகு, தமிழ் நாட்டியின் நான்கு பகுதிகளின் திரையரங்க விநியோக உரிமம் மட்டும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட்டுக்கு வந்தது. இதையடுத்து விஜய்யின் குட்டி ஸ்டோரியுடன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா டிசம்பர் 24ம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. ரசிகர்கள் பொங்கலுக்காகக் காத்திருக்கின்றனர்.

இதுதவிர, இந்த ஆண்டு நடந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சில இடங்களில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

காவி பிகினியில் தீபிகா படுகோன் - பதான் சர்ச்சை

பதான் பாடல் காட்சி
பதான் பாடல் காட்சி
பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நடிப்பில் உருவாகி இருக்கும் `பதான்’ திரைப்படத்தின் முதல் பாடல் சில நாள்களுக்கு முன்பு வெளியானது.

இப்பாடலில் தீபிகா படுகோன் சாஃப்ரான் நிற உடையனிந்து கவர்ச்சியாக நடமாடியிருந்தார். இது இந்து மத உணர்வுகளுக்கு எதிராக இருப்பதாகச் சில இந்து அமைப்பினர் குற்றம்சாட்டியிருந்தனர். மேலும் இப்படத்திற்குத் தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து ஷாருக் கான், படத்தின் நாயகி தீபிகா படுகோன் ஆகியோரின் கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பெரும் பேசுபொருளாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து அந்த மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா அளித்த பேட்டியில், "'பதான்’ படத்தின் பாடலில் ஷாருக் கான், தீபிகா படுகோனேயின் ஆடைகள் முகம் சுளிக்கும் வகையில் இருக்கின்றன. இதைச் சரிசெய்ய வேண்டும். ஆட்சேபத்துக்குரிய பகுதியை நீக்க வேண்டும். அப்படிச் சரி செய்யவில்லையெனில் படத்தைத் தடை செய்வது குறித்து மாநில அரசு பரிசீலிக்கும்" என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த 28வது சர்வதேச திரைப்பட விழாவில் ஷாருக்கான் கலந்து கொண்டு பேசுகையில், "சோசியல் மீடியா பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட குறுகிய கண்ணோட்டத்தினால் மட்டுமே பார்க்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் எதிர்மறை சோசியல் மீடியா பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் வர்த்தக மதிப்பும் அதிகரிக்கிறது. உலகம் என்ன செய்தாலும், நானும், நீங்களும் மற்றும் உலகில் உள்ள அனைத்து நேர்மையான மனிதர்களும் உயிருடன் இருக்கிறோம் என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது. சினிமா மூலம் எதிர்கால சந்ததிக்கு புதிய உலகத்தை உருவாக்க நாம் அனைவரும் இணைவோம்" என்றார்.

இந்த சர்ச்சை பாலிவுட்டில் மட்டுமின்றி அரசியல் கட்சிகள் வரை சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

தென்னிந்தியப் படங்களின் வெற்றியும் ‘Boycott Bollywood’ சர்ச்சையும்

Boycott Bollywood
Boycott Bollywood

பாலிவுட் வட்டராங்களின் கடந்த கால பேச்சுகள், குட்கா விளம்பரங்கள் மற்றும் பல அரசியல் காரணங்களால் ‘Boycott Bollywood’ சர்ச்சை பாலிவுட்டை ஆட்டிவருகிறது. குறிப்பாக ஆமிர்கான், ரன்பீர் கபூர், ஷாருக்கான் போன்ற முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களில் அல்லது நேர்காணல்களில் இந்து மதத்தைப் புண்படுத்தும் வகையில் பேசிவாருவதாகக் கூறி சம்பந்தப்பட்ட நடிகர்களின் உருவபொம்மைகளை எரித்து அவர்களது திரைப்படங்களைப் புறக்கணிக்க வேண்டும் (Boycott Bollywood) என்று கோஷமிட்டு வருகின்றனர் பல இந்து அமைப்பினர். இது சமூக வலைதளங்கள் வரை நீண்டு பாலிவுட் திரையுலகில் பெரும் சலசலைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் பல பாலிவுட் திரைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டு பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதற்கு நேரெதிராக தென்னிந்தியத் திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பைப் பெற்றுள்ளன.

இவை தவிர, இந்த ஆண்டு திரையுலகில் நடந்த வேறு சில தரமான சம்பவங்களையும், சர்ச்சைகளையும் கமென்ட்டில் பதிவிடவும்.