Published:Updated:

ரஜினி நலமாக இருக்கிறார் : மனைவி லதா தகவல்

Vikatan Correspondent

சென்னை, மே 19,2011

ரஜினி நலமாக இருக்கிறார் : மனைவி லதா தகவல்

நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக, அவருடைய மனைவி லதா தெரிவித்தார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் ரஜினிகாந்த் மாற்றப்பட்ட தகவல் வெளியானதால் அவரது ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். அத்துடன், அவர்களுக்கு குழப்பங்களும் அதிகமாகின.

இந்த நிலையில், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நிருபர்களிடம் லதா ரஜினிகாந்த் கூறியது:

உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அவர் பூரண நலமுடன் இருக்கிறார் என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். யாரும் தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம்.

செரிமானக் கோளாறு மற்றும் நோய்த் தொற்று காரணமாக மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டார்.

நோய்த்தொற்று காரணமாக சுகவீனம் ஏற்பட்டது. அனைத்து உறுப்புகளும் நன்றாகவே இருக்கிறது. எனவே, எதையும் மிகைப்படுத்தி எழுத வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தேவைக்கு அதிகமாக யாரும் எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நோய்த் தொற்றுக்கு அடிப்படையான காரணம் எல்லாம் பெரிதானதல்ல. இதன் காரணமாக சுகவீனம் ஏற்பட்டுள்ளது.

நோய்த் தொற்று காரணமாக, அதிகபட்ச பாதுகாப்புக்காக தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டியதாகிவிட்டது. அங்கு தான் முழுமையான சிகிச்சை அளிக்க முடியும், அவருக்கும் வசதியாக இருக்கும் என்பதால், ஐ.சி.யு.வுக்கு மாற்றப்பட்டார். மற்றபடி, அவர் நன்றாகவே இருக்கிறார். மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

எல்லா ரசிக பெருமக்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும், எத்தனையோ பேர் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறீர். பலர் தியானம் செய்துகொண்டிருக்கிறீர்கள். நாங்களும் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறோம். அவர் நன்றாக இருக்கிறார். ," என்றார் லதா ரஜினி.

அப்போது அருகில் இருந்த நடிகர் தனுஷ், "ரஜினி உடல்நிலைப் பற்றிய எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம். அவர் நன்றாகவே இருக்கிறார். எல்லோரும் தங்களது சொந்த வேலைகளில் கவனம் செலுத்துங்கள்," என்றார்.