Published:Updated:

சித்திக்கு எதிராக நடிகை அஞ்சலி வழக்கு: காவல்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!

Vikatan Correspondent
சித்திக்கு எதிராக நடிகை அஞ்சலி வழக்கு: காவல்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!
சித்திக்கு எதிராக நடிகை அஞ்சலி வழக்கு: காவல்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!
சித்திக்கு எதிராக நடிகை அஞ்சலி வழக்கு: காவல்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!

சென்னை: சொத்துக்களை சித்தி மற்றும் அவரது கணவர் பறித்துக்கொண்டதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க கோரி நடிகை அஞ்சலி தாக்கல் செய்துள்ள மனுவிற்கு இரண்டு வாரத்தில் பதில் அளிக்கும் படி தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகை அஞ்சலி தாக்கல் செய்த மனுவில், தென்னிந்திய திரைப்படங்களில் நான் நடிக்கிறேன். பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக ஹைதராபாத்தில் வசித்து வருகிறேன். எனது தாயார் ஆந்திராவில் எனது சகோதரனுடன் வசித்து வருகிறார். சினிமா படப்பிடிப்புக்காக பல இடங்களுக்கு நான் செல்ல வேண்டும் என்பதால் எனது தொழில், வீடு, சொத்துகள், வங்கி கணக்குகளை பராமரிப்பதற்காக எனது சித்தி பாரதிதேவி மற்றும் அவரது கணவர் சூரிபாபுவிடம் பொறுப்புகளை ஒப்படைத்திருந்தேன்.

சென்னை வளசரவாக்கம் பாத்திமாநகர் முல்லைத் தெரு அருணாச்சலா பார்க் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஒரு வீட்டை சண்முகம் என்பவரிடம் இருந்து 15.6.12 அன்று வாங்கினேன். அதன் பின்னர் அங்கு வசிக்கத் தொடங்கினேன். அந்த வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பையும் பாரதிதேவி மற்றும் சூரிபாபுவிடம் ஒப்படைத்திருந்தேன். தமிழ்ப்பட இயக்குனர் களஞ்சியம் என்பவர் என்னை சினிமாவில் அறிமுகம் செய்வதற்கு முயற்சி செய்தாலும், நிதி பிரச்னை காரணமாக அது வெற்றியாக அமையவில்லை.

அந்த வகையில் அறிமுகமான அவர், பின்னர் எனது தொழிலிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தலையிடத் தொடங்கினார். எனது வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என்று அவரை பலமுறை கேட்டுக்கொண்டேன். களஞ்சியத்தை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று பாரதிதேவி மற்றும் சூரிபாபுவிடம் கூறினேன். ஆனால் நான் வெளியே சென்றிருக்கும் நேரத்தில் அவரை இரண்டு பேரும் வீட்டுக்குள் அனுமதித்து வந்தனர்.

தினசரி செலவுக்கான தொகையை வங்கியில் இருந்து பெறுவதற்காக வெற்று காசோலையில் கையெழுத்து போட்டு பாரதிதேவியிடம் கொடுப்பது வழக்கம். நம்பிக்கையின் அடிப்படையில் அப்படி செய்து வந்தேன். வேறு பல செலவுகளைக் கூறி மேலும் பல வெற்று காசோலைகளில் கையெழுத்து போட்டு தரும்படி பாரதிதேவி மற்றும் சூரிபாபு கேட்பது வழக்கம். இந்த நிலையில் அவர்கள் மீது எனக்கு சந்தேகம் வந்தது. எனவே வங்கி கணக்கை பார்த்தேன்.

எனக்கு கடுமையான அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனென்றால், எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.57 லட்சத்து 30 ஆயிரம் தொகை அவர்களால் எடுக்கப்பட்டு இருந்தது. இவ்வளவு தொகை எடுக்கப்பட்டது பற்றி எனக்கு தெரியாது. இதுபற்றி அவர்களிடம் கேட்டேன். ஆனால் சினிமாத்துறையில் எனக்குள்ள பெயரை கெடுத்துவிடுவோம் என்று மிரட்டினர். கொலை மிரட்டலும் விடுத்தனர். எனவேதான் அவர்களிடம் இருந்து விடுபட்டு, பாதுகாப்புக்காக ஹைதராபாத்தில் தற்காலிகமாக தங்கி இருக்கிறேன்.

எனது பெயரில் கடன் வாங்கி போர்ட் பியஸ்டா கார் வாங்க வேண்டும் என்று பாரதிதேவி, சூரிபாபு கூறினர். அதை நம்பி கடனுக்காக சில தாள்களில் கையெழுத்து போட்டுக்கொடுத்தேன். ஆனால் அந்த கடன் தொகைக்காக எனது வங்கி கணக்கை காட்டி, சூரிபாபு தனது பெயரில் காரை வாங்கினார். நான் ஹைதராபாத்துக்கு சென்ற பிறகு களஞ்சியத்தின் தூண்டுதலின் பேரில், பாரதிதேவி, சூரிபாபு மற்றும் அவர்களின் மகன்கள் சதீஷ், சந்திரபாரத் ஆகியோர் எனது வீட்டை ஆக்கிரமித்துக்கொண்டு, அந்த வீட்டுக்கு நான் வரக்கூடாது என்று மிரட்டுகின்றனர்.

##~~##
எனது 50 சவரன் நகை உள்பட உடமைகள் அனைத்தும் அவர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டன. எனவே இது குறித்து சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தேன். அந்த புகார் வளசரவாக்கம் காவல்துறை ஆய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இவர்கள் மீது நான் கடந்த 22.9.13 அன்று கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ், இந்த மனுவுக்கு ஒரு வார காலத்துக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப காவல்துறைக்கு உத்தரவிட்டார்.