
''சீக்கிரமே சொந்த வீடு கட்டுங்க!'' ரஜினி சொன்ன அட்வைஸ்
##~## |
''எங்க ஏரியாவின் அடையாளமே வள்ளுவர் கோட்டம்தான். சின்ன வயசுல அந்தப் பகுதியில் வள்ளுவர் கோட்டத்தைத் தவிர பெரிய கட்டடங்கள் எதுவும் கிடையாது. அப்போ நாங்க நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் குடியிருந்தோம். அந்தத் தெருவே மிக அகலமா, அழகா இருக்கும். வீடுகள் நல்ல இடைவெளியோட இருக்கும். எங்க வீட்டுக்கு ஒருநாள் சூப்பர் ஸ்டார் ரஜினி வந்து இருந்தார். எங்க அம்மாகிட்ட 'இன்னும் ஏன் சொந்த வீடு கட்டாம இருக்கீங்க? அடுத்த முறை நாங்க

உங்க வீட்டுக்கு வரும்போது சொந்த வீட்டுக்குத்தான் வரணும். சீக்கிரம் வீடு கட்டுற வேலையைப் பாருங்க’னு கோபமாச் சொல்லிட்டுப் போனாரு. அதுக்குப் பிறகுதான், அதே ஏரியாவில் நிலம் வாங்கி எங்க அப்பா குட்லக் தியேட்டரும் அதுக்குப் பக்கத்துலேயே வீடும் கட்டினார். குட்லக் தியேட்டரை சூப்பர் ஸ்டாரே திறந்தும் வெச்சாரு.'' தான் வாழும் நுங்கம்பாக்கம் பற்றி அத்தனை ஆசையாகப் பேசுகிறார் நடிகர் அருண் விஜய்.
''நான் ஸ்கூல் படிக்கிற வரைக்குமே எங்க ஏரியாவுல தண்ணீர் பிரச்னை அதிகமா இருந்துச்சு. தண்ணீர் வரும்போது எங்க அம்மாதான் வரிசையில் நின்னு பிடிப்பாங்க. எங்க தெருவில் ஒரு அம்மா நூத்துக்கணக்கான பூனைகளை வளர்த்தாங்க. அதனால எங்க தெருவுக்குள் நுழைஞ்சாலே, 'மியாவ்... மியாவ்’னு சத்தம் கேட்டுகிட்டே இருக்கும். பூனைகளைப் பார்க்குறதுக்காகவே வேற ஏரியாக்காரங்கள்லாம் வந்துட்டுப் போவாங்க.
எங்க வீட்டுக்குப் பக்கத்துல அரை கிலோ மீட்டர் தூரம் நீளத்துக்கு எக்மோர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் வரைக் கும் வண்டி ஓட்டுற குதிரை வண்டிக்காரங்க, வண்டிகளை வரிசையா நிறுத்தி வெச்சிருப்பாங்க. அந்த வயசுல குதிரைன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். குதிரைகளைப் பார்க்குறதுக்காகவே அடிக்கடி அந்த வழியில் நண்பர்களோடப் போவேன். குட்லக் தியேட்டர்ல புதுப் படம் ஓடும்போது, நண்பர்களோட ஆபரேட்டர் ரூம்ல நின்னு படம் பார்ப்பேன். அந்த தியேட்டர்தான் இப்போ 'ஃபோர் ஃபிரேம்ஸ்’ தியேட்டரா மாறி இருக்கு.
லயோலா காலேஜ்லதான் நான் படிச்சேன். சூர்யா எனக்கு காலேஜ்ல சீனியர். எங்க காலேஜ் கேன்டீன்லதான் நண்பர்களோடு பெரும்பாலான நேரம் போகும். கேன்டீனை ஒட்டி இருக்கும் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி ரயில்வே லெவல் கிராஸிங் இருக்கும். காலேஜ்ல நான்கு கேட் இருந்தாலும் எங்கப் பசங்களுக்கு அந்த காம்பவுண்ட்டைத் தாண்டி குதிக்கிறதுதான் த்ரில்லா இருக்கும். நான்கூட சில நாட்கள்ல அந்தச் சுவரைத் தாண்டி இருக்கேன். சுத்திலும் மரங்களா இருக்கும் காலேஜ் ரோட்டை என் வாழ்க்கையில மறக்கவே முடியாதுங்க. எவ்வளவு வெயில் அடிச்சாலும் ஏ.சி. போட்ட மாதிரி அந்த ரோடு மட்டும் அவ்வளவு ஜில்லுனு இருக்கும். நடக்க ரம்மியமா இருக்கும்.

நாங்க உருண்டு புரண்டு விளையாடிட்டு இருந்த கார்ப்பரேஷன் கிரவுண்டுதான் பிற்காலத்தில் டென்னிஸ் ஸ்டேடியமா ஆச்சு.
எங்க தெருவுக்குப் பக்கத்துல முத்து மாரியம்மன் கோயில் இருக்கு. வருஷத்துக்கு ஒரு தடவை மாரி யம்மனுக்குப் பொங்கல் வெச்சு பெருசா விழா எடுப் பாங்க. ஒட்டுமொத்தத் தெருவே கூடி நின்னு மாரி யம்மனுக்குப் பொங்கல்வெக்கிறதைப் பார்க்க அவ்வளவு அழகா இருக்கும். அப்பல்லாம் காலைலேர்ந்து சாயந்தரம் வரைக்கும் கோயிலையே சுத்தி சுத்தி வருவோம்.

அதே மாதிரி 'ஓப்பல் இன்’னு ஒரு ஹோட்டல் இருந்திச்சு. 'தந்தூரி சிக்கன்’னு ஒரு நான்வெஜ் சாப் பாடு இருக்குதுங்கிறதை அந்த ஹோட்டல்ல பார்த்து தான் முதன்முதலா நான் தெரிஞ்சுக்கிட்டேன். வரிசையா சிக்கனைக் கம்பியில குத்தி டிஸ்பிளே செஞ்சு வெச்சிருப்பாங்க. எனக்கு அந்த ஹோட்டல் தந்தூரி சிக்கன் அவ்வளவு பிடிக்கும். இப்போ நினைச்சா கூட நாக்குல எச்சில் ஊறுது சார்.
நான் இடையில ரெண்டு வருஷம் அமெரிக்காவுல இருந்தேன். ஆனா, சென்னை வந்து நுங்கம்பாக்கம் மண்ணை மிதிச்சதும் கிடைச்சச் சந்தோஷம் வேற எங்கேயும் கிடைக்காது. ஐ லவ் நுங்கம்பாக்கம்!''

சந்திப்பு: பொ.ச.கீதன்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்