25 காட்சிகள் நீக்கம்? - மறுதணிக்கைக்கு அனுப்பும் `பாரிஸ் பாரிஸ்' படக்குழு!

சில நாள்களுக்கு முன்னால் இந்தப் படத்தைக் கண்ட தணிக்கைக் குழு, படத்திலிருக்கும் பல காட்சிகளையும் வசனங்களையும் நீக்க வேண்டும் எனக் கண்டிப்புடன் கூறியதாகத் தெரிகிறது.
தமிழ் சினிமாவுக்கும் சென்சார் போர்டுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். மண்ணின் வாழ்வியலையும் கலாசாரக் கூறுகளையும், விழுமியங்களையும் பெரும்பாலும் தணிக்கைக் குழு புரிந்துகொள்ளுவதில்லை என்ற குற்றச்சாட்டு இங்கே பல இயக்குநர்களால் முன்வைக்கப்படுகிறது. அந்த வரிசையில், தற்போது ரமேஷ் அரவிந்த் இயக்கி, காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியிருக்கும் 'பாரிஸ் பாரிஸ்' படமும் சேர்ந்திருக்கிறது.

சில நாள்களுக்கு முன்னால் இந்தப் படத்தைக் கண்ட தணிக்கைக் குழு, படத்திலிருக்கும் பல காட்சிகளையும் வசனங்களையும் நீக்க வேண்டும் எனக் கண்டிப்புடன் கூறியதாகத் தெரிகிறது. அப்படிச் செய்தால், படத்திலிருந்து கிட்டத்தட்ட 25 காட்சிகள் வரை முழுமையாகவோ, பகுதியாகவோ நீக்கப்பட வேண்டி வரும் என்று சொல்லப்படுகிறது. அதனால், படத்தை மறுபரிசீலனைக் குழுவுக்கு மீண்டும் அனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளது.
கங்கனா ரணாவத் நடிப்பில், இந்தியில் வெளியாகி பெரும் வசூலைக் குவித்த 'குயின்' படத்தின் தமிழ் ரீமேக்தான் 'பாரிஸ் பாரிஸ்.' தமிழ் மட்டுமன்றி 'குயின்' படத்தைத் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் எனத் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரே நேரத்தில் ரீமேக் செய்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், படத்துக்கு தமிழைத் தவிர மற்ற மூன்று மொழிகளிலுமே 'U/A' சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைக்குழு.