கதை எழுதறான் விக்கி...!
இன்னைக்கு எப்படியும் ஒரு கதை எழுதிடணும். கட்டுப்படுத்த முடியாத ஆசைகளுடன் கையில் பேனாவைப் பிடித்தபடி எழுதத் தொடங்கினான் விக்கி.

'காரிலிருந்து இறங்கியவளைப் பார்க்க அப்படியே அனுஷ்கா மாதிரியே இருந்தாள். மெதுவாக நடந்தவள் அருகிலிருந்த செல்போன் கடைக்குச் சென்றாள். ''ஹலோ 100 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்யுங்க!''
ச்சே... இந்தக் கதை வேணாம். அனுஷ்கா எதுக்கு ரீ-சார்ஜ் செய்ய கடைக்குப் போகணும். வேற கதை எழுதுவோம்!
''ஒரே கும்மிருட்டு... தொலைவில் எங்கேயோ ஓநாய்கள்... இல்லை இல்லை... நாய்கள் ஊளையிடும் சப்தம். ஆந்தை வேறு அலறியது...'' - அடடேய், தமிழ்நாடே பவர்கட்ல கும்மிருட்டாத்தான் இருக்கு. இதுல இருட்டுக் கதை வேறயா? அடுத்த கதையை எழுது. ஆறாம் அறிவு சொறிந்துவிட்டது!
''பச்சைப் பசேல்னு வயல்... வயல் முழுக்க நெற் கதிர்கள்... நெற்கதிர்கள் எல்லாம் தலை சாய்ந்திருக்கின்றன... தலை சாய்த்து கதிரை அறுக்கிறாள் பச்சையம்மாள்... பச்சையம்மாளின் பிள்ளை அழுகிறது... அழும் குரல் கேட்டு ஓடியவள் குழந்தையைப் பார்க்கிறாள்...''

ஆமா இவரு பெரிய புலவரு... அப்படியே தமிழ் இலக்கணப்படி கதை எழுதுறாரு... இன்னைக்கு எங்கடா வயல்வெளி இருக்கு. எல்லாந்தான் ரியல் எஸ்டேட் ஆகிடுச்சே... உருப்படியா எழுதுடா இவனே. மனசாட்சி கொக்கரித்தது!
''அம்மா... தாயே... பிச்சை போடுங்க... சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு... குழந்தைக்குப் பால் வாங்கிக் கொடுக்கக்கூட காசு இல்லை... சாமி ஏதாவது தர்மம் செய்யுங்க.''
சிக்னலில் நின்றிருந்த காரின் கதவைத் தட்டிப் பிச்சை கேட்டவளுக்கு 20 வயதுக்குள் இருக்கும். வெயிலுக்குப் பயந்து தன் தலையைச் சேலையால் மூடியிருந்தவள் கையில் டிரெஸ் எதுவும் போடாமல் மெலிந்த தேகத்தில் குழந்தை (என்னா ஃபீலிங்!). ஏ.சி. காரின் கண்ணாடியை இறக்கி ஐந்து ரூபாய் நாணயத்தைத் தூக்கிப் போட்டவனின் முகத்தைப் பார்த்து அதிர்ந்தாள். ''டேய் நீ...?'' வார்த்தையை முடிக்கும் முன் கண்ணாடியை ஏற்றிவிட்ட வனின் கார் சிக்னலின் பச்சை விளக்குக்குப் பணிந்து பறந்தது!
டவுசர்... ட்விஸ்ட் வெச்சு கதை எழுதுறாராம்.... அடுத்த வரியில உடனே ஒரு ஃப்ளாஷ்பேக்கைத் தொடங்கிடுவியே... போதும்டா உன் கதை!
சார், இந்த மனசாட்சியோட தொல்லை தாங்கலை. அதைக் கொலை பண்றமாதிரி ஒரு சஸ்பென்ஸ் கதை எழுதவா? ஹலோ, அதுக்குள்ள எங்க எந்திரிச்சுப் போறீங்க? ஹலோ...ஹலோ...உங்களைத்தான்...!
- எம்.செய்யது முகம்மது ஆசாத்