Published:Updated:

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு கடத்தல் மிரட்டல்: 3 பேர் கைது!

Vikatan Correspondent
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு கடத்தல் மிரட்டல்: 3 பேர் கைது!
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு கடத்தல் மிரட்டல்: 3 பேர் கைது!
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு கடத்தல் மிரட்டல்: 3 பேர் கைது!

சென்னை: தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை கடத்த போவதாக மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

‘மின்னலே’ படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் தொடர்ந்து மஜ்னு, துப்பாக்கி, ஏழாம் அறிவு உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது மனைவி பெயர் சுமா. இவர்கள் வளசரவாக்கம் சவுத்திரி நகரில் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் மனைவி சுமாவை நேற்று முன்தினம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், ''உனது கணவரை நாங்கள் கடத்தப்போகிறோம். எனவே எங்களுக்கு உடனடியாக 20 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். பணத்தை எந்த இடத்தில் எப்படி கொடுக்க வேண்டும் என்பதை பிறகு தெரிவிக்கிறோம்" என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

மர்ம ஆசாமி போனில் பேசியபோது ஹாரிஸ் ஜெயராஜ் வீட்டில் இருந்ததால், இது ஏமாற்று வேலை என்று கருதிய சுமா, இந்த தகவலை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். மேலும், நேற்று காலை சுமாவுக்கு அதே எண்ணில் இருந்து மீண்டும் அழைப்பு வந்திருக்கிறது. அப்போது பேசிய அதே மர்ம நபர், ''இன்னும் பணத்தை ‘ரெடி’ பண்ணலையா? பார் உனது கணவரை சிறிது நேரத்தில் கடத்தி விடுகிறோம்" என்று மிரட்டியுள்ளார்.

இதில் பயந்துபோன சுமா, போன் மிரட்டல் குறித்து வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில், துணை கமிஷனர் பகலவன், உதவி கமிஷனர் ஜான் அருமைராஜ், இன்ஸ்பெக்டர் சேட்டு ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

மிரட்டல் ஆசாமிகள் பேசிய அழைப்புகளை வைத்து துப்பு துலக்கிய தனிப்படையினர், திரிசூலம் மலைப்பகுதியில் பதுங்கியிருந்த 3 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பிடிபட்டவர்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த அருணாசல பாண்டியன் (வயது 25), முத்துகிருஷ்ணன் (32), திருமலை (30) ஆகியோர் ஆவர்.

இதில், திருமலை என்பவர் ஹாரிஸ் ஜெயராஜின் தந்தையிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் டிரைவராக வேலை செய்துள்ளார். இந்த மிரட்டலுக்கு மூளையாக செயல்பட்ட திருமலை, சுமாவின் செல்போன் நம்பரை கூட்டாளிகளிடம் கொடுத்து பேச செய்துள்ளார். அவர்களிடமிருந்து கார் ஒன்றை பறிமுதல் செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.