Published:Updated:

'திருமணம் எனும் நிக்காஹ்' படத்துக்கு தடை கோரி வழக்கு!

Vikatan Correspondent
'திருமணம் எனும் நிக்காஹ்' படத்துக்கு தடை கோரி வழக்கு!
'திருமணம் எனும் நிக்காஹ்' படத்துக்கு தடை கோரி வழக்கு!
'திருமணம் எனும் நிக்காஹ்' படத்துக்கு தடை கோரி வழக்கு!

சென்னை: 'திருமணம் எனும் நிக்காஹ்' படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத்தின் துணை தலைவர் டப்ளஸ் அலிகான் தாக்கல் செய்துள்ள மனுவில், ''ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வி.ரவிசந்திரன், ‘திருமணம் எனும் நிக்காஹ்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் முஸ்லிம் சமுதாயத்தை குறிப்பாக ஷியா முஸ்லிம் சமுதாயத்தின் மத நம்பிக்கையை தவறாக சித்தரித்துள்ளனர்.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள், ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதால், முஸ்லிம் மதத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகளின் மனது புண்பட்டுள்ளது. எனவே, முஸ்லிம் மதத்தின் கொள்கையை அவமதிக்கும் விதமான இந்த செயல் இந்திய தண்டனை சட்டத்தின்படி குற்றமாகும்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த 20 ஆம் தேதி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். எங்களது புகார் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மனுவுக்கு ஜூன் 4 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.