Published:Updated:

கமல் நடிப்பு, கிரேஸி வசனம்... இறுகப் பற்றிக்கொண்டு இசையமைத்த ராஜா! #29YearsOfMichaelMadanaKamarajan

மைக்கேல் மதன காமராஜன்
மைக்கேல் மதன காமராஜன்

இந்த நால்வரில் பலருக்கும் ஃபேவரைட்டான கமல், காமேஷ்வரன். மதன், ராஜூ, மைக்கேல் ஆகிய மூன்று கமல்களில் அவர் மட்டுமே தனித்துத் தெரிவார். ஆனால், காமேஷ்வரின் காட்சியமைப்புகளில்தான் கமலும், கிரேஸியும் இளையராஜாவும் திரையில் சில விளையாட்டுகளை ஆடியிருப்பார்கள்.

'கத கேளு கத கேளு... நிஜமான கத கேளு... சுவையோடு சுகமாக உருவான கத கேளு...' என்ற இளையராஜாவின் கணீர் குரலோடு ஆரம்பித்தது, 'மைக்கேல் மதன காமராஜன்' படம். வசனங்களின்றி பாடலினாலே படத்தின் கதையை உணர்த்தியது இப்பாடல். நகைச்சுவைக்கான முழு அர்த்தத்தையும் நமக்குக் கற்பித்த இப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்படத்தைப் பற்றிய ஓர் சிறப்புக் கட்டுரை இது.

கிரேஸி மோகன், பி.ஜி வுட்ஹவுசின் தீவிர ரசிகர். குருவை விஞ்சிய சிஷ்யன் என்றுதான் கிரேஸியைச் சொல்லவேண்டும். எந்தவொரு நெகட்டிவ் எனர்ஜியையும் விரும்பாதவர், கிரேஸி மோகன். கமல் இதையொரு பேட்டியில் பெருமிதத்துடன் சொல்லியிருக்கிறார். தமிழ் சினிமாவின் சில படங்களில் நகமும் சதையுமாக ஒட்டிக்கொண்டு உலாவியவர்கள், கமல் - கிரேஸி. அப்படங்களை, இரண்டில் ஒருவர் இல்லாமல் யோசித்துக்கூட பார்க்க முடியவில்லை.

கமல் - கிரேஸி மோகன்
கமல் - கிரேஸி மோகன்

படத்தின் முதல் பாடலில் கதையின் அடிப்படையைப் பாடலாகவே பாடியிருப்பார், இளையராஜா. இவர் பாடப் பாட காட்சியமைப்பானது அங்கிருந்து விரிவடையும். அந்தப் பாடலைப் பார்க்கும்போது சார்லி சாப்ளினின் படங்களைப் பார்த்த உணர்வு. திசைக்கு ஒன்றென நான்கு குழந்தைகளும் வெவ்வேறு சூழலுக்குச் சென்றுவிடும். அந்தந்தக் குழந்தைகளின் வளர்ப்பு முறையும் வெவ்வேறாகவே இருந்தன. கேரளத்து ஆண்குட்டியான காமேஷ்வரன், போலி ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் மைக்கேல், பெத்த பிள்ளையாக இருப்பினும் தத்துப் பிள்ளையாக வளரும் மதனகோபால், தீயணைப்பு வீரனாக சுப்ரமணியம் ராஜூ. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும், அதன் தன்மையையும் பார்ப்போம். 

முதலில் மதன்கோபால். `தந்தைக்குத் தெரியாது, தன் பிள்ளை தன் கையில்' என இளையராஜா மதனின் நிஜ அப்பா யாரென்பதை பாடலில் சொல்லியிருப்பார். லண்டனில் பிசினஸ் மேனேஜ்மென்ட் முடித்த பெரிய படிப்புக்காரர் என்பதைத் தனது ஆங்கில உச்சரிப்பிலேயே தெரியப்படுத்தியிருப்பார். இவருடன் நகைச்சுவையின் தீர்க்கதரிசி, நாகேஷ். 30 வருடங்களாக அப்பா வேணுகோபாலுடன் பணியாற்றியவர். மதனகோபாலுடனும் தொடர நினைக்கும் அவினாஷி எனும் விஸ்வாசி. அவர் அடித்த 25 லட்சத்தைக் கண்டுபிடித்துவிடுவார். `நீங்க கம்ப்யூட்டர்ல அடிச்சது... அப்படித்தான் வரும்' என நாகேஷ் சொல்ல, `நான் அடிச்சது இல்லை. இது எங்க அப்பாகிட்டருந்து நீங்க அடிச்சது' எனச் சொல்வார், மதன். இப்படிச் சரவெடியான வசனங்கள் படம் முழுக்க இடம்பெற்றிருக்கும். 

மைக்கேல் மதன காமராஜன்
மைக்கேல் மதன காமராஜன்

தொடர்ந்து நாகேஷ் தனது அஷ்டலட்சுமிகளான 8 பெண் குழந்தைகளைப் பற்றிச் சொல்லி, 3-வது மகளுக்குத் திருமணம் என்பதைச் சொல்வார். `கல்யாணத்தை எப்படி நடத்தப்போறீங்க' என மதன் கேட்க, 'ஐயரை வெச்சுத்தான்' என நக்கலாகப் பதில் சொல்வார், நாகேஷ். கிரேஸியின் எழுத்து அழகியல், வசனங்களின் மூலம் இப்படிப் படம் முழுக்கப் படர்ந்திருக்கும். மற்ற கமல்களான காமேஷ்வரன், மைக்கேல், சுப்ரமணியம் ராஜூ ஆகிய மூவரையும் இணைக்கும் மையப் புள்ளியும், கதாநாயகனும் மதன்தான். இதனால்தான் முதலில் மதனுடைய கதை சொல்லப்பட்டது.

அடுத்ததாக, மைக்கேல். கரகர குரலுக்குச் சொந்தக்காரன், தங்கப் பல் வைத்திருக்கும் ஸ்மக்லர், போலி ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் கொள்ளைக்காரன். போலீஸ் வருவது தெரிந்து வீட்டுக்குப் பக்கத்திலிருந்து கார் வொர்க் ஷாப்பில் தனது வளர்ப்புத் தந்தையுடன் குதித்துவிடுகிறார். 'ஏன்யா காரை வாங்குறதுக்கு இப்படியா வருவீங்க' என மெக்கானிக் கேட்க, 'கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டுதான்யா வரும்... இந்தாப் பிடி' எனச் சொல்லி, ஒரு கட்டு கள்ளநோட்டைக் கொடுத்து கடைக்காரனின் வாயை அடைத்துவிடுவார். போலீஸுடன் ஏற்பட்ட மோதலில் ஒரு கட்டடத்தில் தீ விபத்தை ஏற்படுத்திவிடுவார், மைக்கேல். இதுதான் அடுத்த கமலுக்கான லீடு... திரைக்கதையை எழுதியது கமலாச்சே!  

You Naughty..!
குஷ்பு
ஐ... நீ மட்டும்... கம்மி நாட்டியா (Naughty)?!
கமல்

குஷ்புவின் அறிமுகமும் இங்கேதான். கிரேஸிக்கு வார்த்தை விளையாட்டுகளில் அதீத ஆர்வம். இவர் வசனம் எழுதியிருக்கும் அனைத்துப் படங்களிலும் இந்த வார்த்தை விளையாட்டு கட்டாயம் இருக்கும். அமைச்சரோடு ஒரு விழாவில் கலந்துகொண்டிருக்கும் குஷ்பு, `மாண்புமிகு குத்துவிளக்கை, அமைச்சர் ஏற்றிவைப்பார்' எனச் சொல்லிவிட்டு முழிப்பார். அதற்குப் பின்னான காட்சியில் மொத்த இடமும் தீப்பிடிக்க, 3-வது கமலான தீயணைப்பு வீரன் சுப்ரமணியம் ராஜூவின் என்ட்ரி. `Love at first sight' அடிப்படையில் ஷாலினியுடன் (குஷ்பு) காதல் வயப்படுகிறார், ராஜூ. விபத்தால் ஏற்பட்ட தீயை அணைத்தவுடன் காதல் தீ இவரைப் பற்றிக்கொள்கிறது. 

பட்டாணியுடன் (கடன் கொடுத்த சேட்டு) ஏற்படும் சிறு மோதலில் தட்டிலிருக்கும் கருவாடு, காமேஷ்வரின் பாக்கெட்டுக்குப் பறந்து விழுந்துவிடும். `யாராக்கும் அது... ஸ்கூட்டர்ல போயிட்டுருக்கும்போது வெஜிடபிள்ஸைத் தூக்கியடிக்கிறது...' என்றபடியே ஆரம்பிக்கிறது, காமேஷ்வரனின் அறிமுகம். பலக்காடு மணி ஐயராக, டெல்லி கணேஷ். தமிழ் சினிமா கொண்டாடத் தவறிய ஓர் கலைஞன். சாம்பாரில் மீன் விழுந்ததையடுத்து, `மீன் பிடிக்கத் தெரிஞ்ச யாரையாவது கூப்பிடலாமா' என்று சொல்லும்போதே, காமேஷ்வரனின் வெள்ளந்தித்தனமும், கிரேஸியின் எழுத்தறிவும் புரிந்திருக்கும். இந்த நால்வரில் பலருக்கும் ஃபேவரைட்டான கமல், காமேஷ்வரன். மதன், ராஜூ, மைக்கேல் ஆகிய மூன்று கமல்களில் அவர் மட்டுமே தனித்துத் தெரிவார். ஆனால், காமேஷ்வரின் காட்சியமைப்புகளில்தான் கமலும், கிரேஸியும் இளையராஜாவும் திரையில் சில விளையாட்டுகளை ஆடியிருப்பார்கள்.

நடுநடுவே ராஜாவின் பின்னணி இசையை நினைவில் கொள்க. சாம்பாரில் மீன் விழுந்ததிலிருந்து ஆரம்பிக்கிறது இந்தக் காட்சியின் காமெடி மாரத்தான். மீன் பிடிக்கும் முயற்சியிலும், சலசலப்பிலும் வழியில் இவர்களைக் கடக்கும் ஆங்கில 'Mean', `Chaplinesque' முறையில் சுற்றிச் சுற்றி வசனமின்றி அரங்கேறும் எஸ்.என்.லட்சுமியின், 'திருட்டுப் பாட்டி' காமெடி. செல்லாப்பெட்டி காணமல் போனதையடுத்து, `எங்க ஏன் செல்லாப்பெட்டி, உன்கிட்டதானே கொடுத்தேன்' என டெல்லி கணேஷ் கமலிடம் கேட்பார். `உன் செல்லாப்பெட்டியையும் சாம்பார்ல போட்டுட்டேன் கேட்டேளா' என்ற வசனத்தில் ஆரம்பித்து, `நீ சரியான தள்ளிபுளியாக்கும்...', `ஹான் நான் இதுன்னா நீ என்னவாக்கும்', `போடா இஞ்சி', `ஹான் நீ சுக்கு' எனத் திட்டிக்கொள்வதற்கு உவமைகூட அவர்களின் குலத்தொழிலான சமையல்தான்! இதற்கு நடுவே, ரங்கோலி மூலம் அறிமுகமாகும் திருபுரசுந்தரி. திருட்டுப் பொருள்களை மீட்டெடுத்துத் திருப்பி வைப்பதுதான், இந்தப் பேத்தியின் வேலை. `திருப்பி வெச்சாலும் நிமிர்த்து வெச்சாலும் திருட்டு திருட்டுதான்.'

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

அதற்குப் பின் மளிகைக் கடையில் காமேஷ்வரனின் அக்கவுன்டில் பாட்டி எல்லாப் பொருள்களையும் ப்ளஸ் 2-வாக வாங்கியிருப்பார். இதில் கடுப்பாகும் காமேஷ்வரன், திருபுரசுந்தரியின் வீட்டிற்கு, `பழிக்குப் பழி புளிக்குப் புளியாக்கும்' என வண்டியைத் திரிபுவின் வீட்டுத் திருப்புவார். ``ரோட்டுல நான் போனா, என் பெயரைச் சொல்லி யாரும் கூப்பிடுறது இல்லை. திருபுரசுந்தரி'ன்னு உன் பெயரைச் சொல்லித்தான் கூப்பிடுறா. இப்படித்தான் ஒருநாள் நான் ஸ்கூட்டர்ல போயிட்டிருக்கும்போது, `திருப்பு திருப்பு'ன்னான். ஸ்கூட்டரையாக்கும் சொல்றானான்னு திருப்பி, ஆட்டோ ரிக்‌ஷாவுல இடிச்சு..." என்ற வசனம்கூட இங்கு பொருந்தும்.

பிறகு, ஒவ்வொரு கமலும் தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்துக்கொள்வதுபோல பார்த்துக்கொள்வதையடுத்து படமும், கதையும் தன்னால் நகரும். படம் நெடுக இப்படியான காட்சியமைப்புகளாலும், வசனங்களாலும்தான் நிரம்பியிருக்கும். இதைப் போன்றதோர் சினிமா இனிமேல் வருமா தெரியாது. கமல் என்ற ஆளுமை நடிப்பு, கதை, திரைக்கதை என்ற ஆயுதத்தோடு திரையில் விளையாடியிருப்பார். அதே திரைக்குப் பின்னாலிருந்து விளையாடியது, கிரேஸி மோகனின் கூர்மையான எழுத்து. இப்படத்திற்கு எழுதப்பட்டிருக்கும் திரைமொழியே அழகியல் நிறைந்தது. பார்க்கும் பார்வையாளர்களைச் சற்றும் குழம்பச் செய்யாமல் படத்தின் ஒவ்வொரு காட்சியும் எளிமையின் உச்சம்.

`மைக்கேல் மதன காமராஜா'வில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் பாடகர்களில் ஜாம்பவர்களான இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா, மனோ, ஜானகி, மலேஷியா வாசுதேவன் என அனைவரும் இப்படத்திற்காகப் பாடியிருந்தார்கள். இந்த லிஸ்ட்டில் யேசுதாஸ் மட்டும் மிஸ்ஸிங். `சுந்தரி நீயும்' பாடலை முதலில் இவர்தான் பாடுவதாயிருந்தது. சில காரணங்களால் கமலே பாடிவிட்டார். கேரளத்து மொழியில் இடைவிடாமல் வசனம் பேசத் தெரிந்தவருக்குப் பாடுவது கஷ்டமாக இருக்காதே. விகடனின் சமீபத்திய பேட்டியில்கூட `சுந்தரி நீயும்' பாடலை மனதுக்கு நெருக்கமான பாடலென்பதைக் குறிப்பிட்டிருந்தார்.

மைக்கேல், மதன், காமேஷ்வரன், சுப்ரமணியம் ராஜூ எனக் கதாபாத்திரங்கள் நான்காக இருந்தாலும், அதையேற்று நடித்த கமல் என்பவர் ஒருவரே! மைக்கேல் இறுக்க மனமுடையவன். ரௌடி, கேங்ஸ்டர், ஸ்மக்லர். அதற்குத் தகுர்ந்த மாதிரி பிரென்ச் தாடி, கட்டைக் குரல் என நடிப்பிலும் ஒருவித இறுக்கத்தையே வெளிப்படுத்தியிருப்பார். மதன் நிறைய படித்தவர், அறிவாளி. அதனால், கண் பார்வைக் குறைபாடு இருப்பவராகக் காட்டியிருப்பார்கள். காமேஷ்வரனின் பூர்வீகம் தமிழ்நாடாக இருந்தாலும், கேரளத்தின் அரவணைப்பில் வாழ்ந்தவன். பேச்சில் பாலக்காட்டு மண் வாசனை. இவருக்குத் தெரிந்ததெல்லாம் அப்பா, சமையல், புகை, வரதுக்குட்டி, அடுப்படி, மளிகைக் கடை... கடைசியாக, திரிபுரசுந்தரி. சுப்ரமணியம் ராஜூ ஆதரவின்றி வாழும் அநாதை. தீயணைப்பு வீரன், பேச்சில் மெட்ராஸ் பாஷை.

மைக்கேல் மதன காமராஜன்
மைக்கேல் மதன காமராஜன்

இந்த நால்வரும் ஒரே தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் என்றாலும், நடிப்பது கமல். இப்படியொரு நல்ல படைப்புக்கு கமலின் நடிப்பு, கதை, திரைக்கதை, கிரேஸியின் வசனம், சிங்கீதம் சீனிவாசராவின் இயக்கம் என ஐந்துமே கைகொடுத்திருக்கும். அந்தக் கைகளையெல்லாம் இறுகப் பற்றிக்கொண்டு உறவு பாடியது, ராஜாவின் இசை. பாடல்கள் ஒவ்வொன்றும் ஹிட். படத்தின் உயிரை உணர்ந்து, ஜானரை மொத்தமாக மாற்றிக்கொண்டு இசையை எளிமைப்படுத்தியிருப்பார், இசையின் ராஜா. இப்படித் தவமின்றி கிடைத்த வரம், 'மைக்கேல் மதன காமராஜன்' படம். இனி எப்படித் தவமிருந்தாலும், இப்படி ஒரு படைப்பு வெளிவராது!

கேட்ச் மை பாயின்ட்!

அடுத்த கட்டுரைக்கு