ஸ்பெஷல்
Published:Updated:

நித்தியானந்தா... இதில் சத்தியானந்தா!

நித்தியானந்தா... இதில் சத்தியானந்தா!

டைரக்டர் மதன் படேலைப் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால்... கன்னட சினிமாவின் டி.ஆர்!

நடிப்பு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு, சவுண்ட் சிஸ்டம், மைக் செட், மேக்கப் ஆர்ட்டிஸ்ட், டப்பிங் ஆர்ட் டிஸ்ட் என அத்தனையிலும் புகுந்து விளையாடும் செம டெரர் கில்லாடி. நம்ம டி.ஆர். போலவே இவருடைய மகனும் ஹீரோ(!). தனிக் கட்சி ஆரம்பித்து போணி ஆகாததால் இப்போது எடியூரப்பா கட்சியில் சீட் கேட்டு லட்சியக் கனவோடு காத்திருந்தவரை, ஒரு மாலை வேளையில் பெங்களூருவில் சந்தித்தேன். எதுக்குன்னு கேட்கறீங்களா? நித்யானந்தாவின் 'வரலாற்றை’ச் சித்தரித்து 'சத்யானந்தா’ என்று ஒரு படம் இயக்கி இருக்கிறார்.

நித்தியானந்தா... இதில் சத்தியானந்தா!
நித்தியானந்தா... இதில் சத்தியானந்தா!

''அவர் மேல உங்களுக்கு அப்படி என்ன கொலவெறி?''

''குட் கொஸ்டீன். இன்னைக்கு உலகம் முழுக்கக் கடவுள் பேரைச் சொல்லி ஏதோ ஒரு விதத்தில எவனோ ஒரு போலி சாமியார்கிட்ட நாம எல்லாம் மாட்டிக்கிட்டு சிக்கிச் சீரழியுறோம். நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்படறோம். அதனாலதான் நான் பார்த்த, கேட்ட, தீர விசாரிச்ச நித்தியானந்தா பத்திய விஷயங்களை வெச்சி 'சத்தியானந்தா'னு படம் எடுத்தேன். ராத்திரி பகலா உழைச்சாக்கூட மாசக் கடைசில 100 ருபாய்க்கு அல்லாடுறோம். ஆனால், நித்தியானந்தா மாதிரியான சாமியார்கள் மக்கள் பணத்தில சொகுசா வாழுறாங்க. என்னுடைய சமூகக் கோபம்தான் சத்தியானந்தா. மற்றபடி நித்திக்கும் எனக்கும் எந்தத் தனிப்பட்ட விரோதமும் இல்லை.''

''படம் வெளிவர முடியாதவாறு நித்தியானந்தா வழக்கு போட்டு இருக்கிறாரே. அப்படி என்னதான் படத்தில வெச்சிருக்கீங்க?"

நித்தியானந்தா... இதில் சத்தியானந்தா!

"அவரோட நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கிற மாதிரி படம் எடுத்திருக்கேனாம். நீங்களே சொல்லுங்க... நித்திக்கு என்னங்க நல்ல பேரு இருக்கு? வழக்குப் போடுறதுக்கு முன்னாடி எனக்கு பணம் கொடுத்து 'ஆஃப்' பண்ணிரலாம்னு ட்ரை பண்ணினார். நான் மசியலை. இப்போ பெங்களூர் கோர்ட்ல மனு மேல மனு போட்டு படத்துக்கு 'ஸ்டே' வாங்கி இருக்கார். அதை எப்படி சட்டப்படி உடைத்து ரிலீஸ் பண்ணனும்னு எனக்குத் தெரியும். 'அந்த செக்ஸ் வீடியோவில இருக்கிறது நான் இல்லை'ன்னு சத்தியம் பண்ற நித்தி என் படத்தை ஏன் தடுக்கணும்? மீடியாக்களில் வந்த செய்திகளை மட்டுமே நம்பாமல், நித்தியைச் சிக்கவெச்ச லெனின் கருப்பன், கேமரா செட் பண்ணின ஆர்த்தி ராவ்னு பலரைச் சந்திச்சுப் பேசுனேன். அவங்க வெளியே சொல்லாத பல விஷயங்களைச் சொன்னாங்க. ரொம்ப அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. அது மட்டும் இல்லாம நித்தியால பாதிக்கப்பட்ட 41 பேரை தேடிக் கண்டுபிடிச்சி விஷயத்தைச் சேகரிச்சேன். நித்தியோட சொந்த ஊர்ல அவரோட சின்ன வயசு நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரங்க எனப் பல விஷயங்களை ஸ்கிரீன்ல கொண்டு வந்து இருக்கேன். கோர்ட்ல கேஸ் இருக்கிறதால எல்லாத்தையும் வெளிப்படையாகப் பேச முடியாது. ஆனால், மக்கள் எதிர்பார்க்கிறதைவிட பல மடங்கு அதிர்ச்சி காத்திருக்கு. போதுமா?"

"முதலில் இப்படத்தில் நடிப்பதற்காக  நடிகை ரஞ்சிதாவிடமே பேசுனீங்களாமே?"

"ஆமாம். அவங்களே நடிச்சா நல்லா இருக்கும்னு பேசினேன்.அவங்க முதலில் இன்ட்ரஸ்ட் காட்டினாங்க. அப்புறம் இந்த நித்தி ஆளுங்களோட பேச்சைக் கேட்டுக்கிட்டு 'நோ' சொல்லிட்டாங்க.''

அது சரி, கோர்ட் கதவைத் திறக்குமா?

- இரா.வினோத்