ஸ்பெஷல்
Published:Updated:

ஆனா அண்ணனின் பாசக்கார பயலுவ!

ஆனா அண்ணனின் பாசக்கார பயலுவ!

மு.க.அழகிரியின் பிறந்த நாள் என்றால் மதுரையே அலறும், பதறும், கதறும் என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். நேரில் பார்த்திருக்கிறீர்களா? இதோ என் கண்கள் கண்ட காட்சியை உங்கள் விழித் திரையில் படமாகக் காட்ட முயற்சிக்கிறேன்.

சத்யசாய் நகரில் உள்ள தன்னுடைய வீட்டில் கேக் வெட்டப் போகிறார் அழகிரி என்று தெரிந்து, அங்கே போனேன். போகிற வழியெல்லாம் தப்புத் தப்பான ஆங்கிலத்தில் அண்ணனை வாழ்த்தி போஸ்டர் ஒட்டி இருந்தார்கள். சரியாக எழுதினால் மட்டும் புரிந்துவிடவா போகிறது என்கிற மெத்தனம். போஸ்டர்களால் அசிங்கப்படுத்தப்பட்ட அந்த ஏரியாவில், திடீரென்று ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் படு சுத்தமாகக் காட்சியளித்தது. ஆமாம்... அழகிரி வீடு வந்துவிட்டது. தெருவையே பார்க்கிங் ஏரியாவாக்கிவிட்டதால், தன்னுடைய வீட்டின் போர்ட்டிகோவைக் கட்சியினரைச் சந்திக்கும் இடமாக மாற்றி இருக்கிறார் அழகிரி. அங்கேதான் ஆண்டுதோறும் பிறந்த நாள் கேக் வெட்டுவாராம்.

ஆனா அண்ணனின் பாசக்கார பயலுவ!

"அழகிரி பிறந்த நாளைக்குப் போகிற பத்திரிகையாளர்கள் எல்லாம் தங்களை பவர் ஸ்டாராக நினைத்துக்கொள்ள வேண்டும். நிறைய அசிங்கப்படுத்துவார்கள். கீழே தள்ளிவிடுவார்கள். ஆனாலும், சிரித்துக்கொண்டே இருந்தால்தான் உள்ளே போய் செய்தி சேகரிக்க முடியும்" என்று சீனியர் நிருபர் ஒருவர் எனக்குப் பாடம் எடுத்திருந்தார். அவர் சொன்னதைவிட நிறைய அசிங்கப்பட்டு, உள்ளே போனேன்.

ஆனா அண்ணனின் பாசக்கார பயலுவ!

தி.மு.க-வில் அர்ச்சகர்  அணியைத் தொடங்கிவிட்டார்களோ என்று சந்தேகப்படும் அளவுக்கு நீண்ட வரிசையில் அர்ச்சகர்கள் நின்றனர். இந்த 'பகுத்தறிவு' வாரிசுக்காக மதுரை மீனாட்சி, கூடல் அழகர் பெருமாள், அழகர்கோயில், நரசிங்கம் பெருமாள் கோயில், அரசரடிப் பிள்ளையார் கோயில், சத்யசாய் நகர் நலம்புரி விநாயகர் கோவில் என்று கோயில் கோயிலாக அர்ச்சனை செய்து, பிரசாதத்துடன் வந்திருந்தவர்கள் அவர்கள். கல்யாண வீடு போல ஓர் ஓரமாக உட்கார்ந்து, நாதஸ்வரம் வாசித்துக்கொண்டிருந்தார்கள் இரண்டு பெண்கள். அவர்கள் முன்னால் நின்றபடி, பெரிய இசையமைப்பாளர் போல கையை ஆட்டி, ஆட்டி கம்போஸ் செய்துகொண்டிருந்தார் ஒரு தொண்டர். அவர் மீது டாஸ்மாக் வாசம்.

வீட்டின் பிரதான வாசல் வழியாக வராமல் இன்னொரு வாசல் வழியாக அண்ணன் வர, பின்னாலேயே மனைவி, மகன் , மருமகள்  ஆகியோர் செல்ல நாயுடன் வந்தார்கள். தொண்டர்களின் தோற்றத்தைப் பார்த்துப் பதறி அந்த நாய் பம்மிக்கொள்ள, 'வருங்கால முதல்வர் மு.க. அழகிரி வாழ்க’ கோஷம் காதுகளைப் பிளந்தது. அவர் வெட்டிய கேக்கை, கண் இமைக்கும் முன் காலி செய்தார்கள் உடன்பிறப்புகள். செயல்வீரர்கள் ஆயிற்றே!

அடுத்து, ராஜா முத்தையா மன்றத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. மண்டபத்தை நெருங்க நெருங்க, பிரியாணி வாசம். வாசலில் நாட்டியக் குதிரைகள் இரண்டு, 'கும்கி’ படப் பாடல்களுக்கும், அண்ணன் புகழ் பாடல்களுக்கும் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தன.

ஆனா அண்ணனின் பாசக்கார பயலுவ!

10 மணிக்கு மண்டபத்துக்கு வந்த அழகிரி, 62 அடி நீள கேக்கை வெட்டி, நலத்திட்ட உதவிகளைத் தொடங்கிவைத்தார். அண்ணனைப் பார்த்த சந்தோஷத்தில் சிலர், கையைப் பிடுங்குவது போல வேகமாகக் கை குலுக்க, அதற்குப் பிறகு வந்தவர்களுக்குக் கை குலுக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டது. அதற்குள்ளாக ராட்சஷக் கத்தியால் 62 அடி நீள கேக்கையும் பெரும் பெரும் துண்டுகளாகக் கூறு போட்டார்கள் சில நிர்வாகிகள். ஒவ்வொரு பீஸ¨ம் பெரிய செங்கல் சைஸில். "யோவ் வட்டம்... இதப் பிடிய்யா..." என்று  மேடையில் இருந்து ஒருவர் தூக்கி வீச, அதை லாவகமாக கேட்ச் பிடித்தார் வட்டச் செயலாளர். இதே பாணியில் 62 கிலோ கேக்கும் அரை மணி நேரத்தில் 'விநியோகிக்கப்பட்டது'.

அண்ணனை எப்படியாவது 'இம்ப்ரெஸ்' பண்ணிவிட வேண்டும் என்கிற 'கலை வெறி' ஒவ்வொரு தொண்டனின் கண்களிலும் தெரிந்தது. திடீரென ஒருவர் ஐந்து லிட்டர் பெட்ரோல் கேனுடன் மேடையேற, பதறிப்போய் தடுத்து நிறுத்தினார்கள் நிர்வாகிகள். "இதெல்லாம் நயம் தேனுண்ணே..." என்று அவர் சொல்ல, சந்தேகத்துடன் மூடியைத் திறந்து மோப்பம் பிடித்தார்கள் நிர்வாகிகள். அப்புறம் "ஆமா... தேன்தான்" என்று அவர்கள் கிளியரன்ஸ் கொடுக்க, தேன் அண்ணனின் கைக்குப் போனது.  மேடையில் இப்படி ஒரு விழா நடக்கிற பிரக்ஞையே இல்லாமல், சீட்டில் உட்கார்ந்தபடி சிலர் பிரியாணியை மொக்கிக்கொண்டு இருந்தார்கள்.

ஒரு கவுன்சிலர் தயாநிதியை கிருஷ்ணராகவும், அழகிரியை அர்ச்சுனராகவும் சிலை வடித்து, தயா ஓட்டுகிற தேரில் அழகிரி உட்கார்ந்து வருவதுபோல பிரமாண்டமான பல்லக்கு செய்து அதை 15 பேர் உதவியுடன் மேடைக்கே தூக்கி வந்துவிட்டார். அதைப் பார்த்ததும் அழகிரிக்கு சின்ன அதிர்ச்சி. ஆனா லும் ரசித்துச் சிரித்தார். " போன வருஷம் அழகிரி சாமி வீதி ஊர்வலம் நடத்தினோம். இந்த வருஷம் கிருஷ்ணன், அர்ச்சுனன் தேர். இதைச் செய்ய 48 நாள் ஆச்சுண்ணே" என்று அந்த கவுன்சிலர் பெருமை யாகச் சொல்ல, 'இன்னும் உங்ககிட்டே இருந்து எதிர்பார்க்கிறேன் தம்பி’ என்பதுபோல் ஒரு பார்வை பார்த்தார் அழகிரி.

ஆக, இன்னும் இந்த ஊரு இவரை நம்புது!

-சூனியக்குமார்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பா.காளிமுத்து