ஸ்பெஷல்
Published:Updated:

கோடம்பாக்கத்துக்குக் கிளம்பிட்டாங்கப்பா!

கோடம்பாக்கத்துக்குக் கிளம்பிட்டாங்கப்பா!

சினிமா பலருக்கு எனிமா. ஆமா பாஸ், இன்னும் கூட்டம் கூட்டமா மஞ்சக் கொடியேந்தி ஒரு பெரும்படை ஊரிலிருந்து கிளம்பி வந்து, அவிய்ங்க போதைக்கு உங்களை ஊறுகாயாக்கி விட்டுப்போகும். அடப்பாவி ஆத்மாக்களால் நொந்து நூடுல்ஸான அப்பாவி ஆத்மாக் களுக்கு இக்கட்டுரை சமர்ப் பணம்.

கொஞ்சம் சிவப்பாய் இருக்கும் நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் கவனம். இந்த 'விருச்சிக காந்த்’கள் நிறையப் பேர் கிளம்பி வருவார்கள். 'விஜய்க்கு இருக்கிற மாதிரி மேலுதட்டுல எனக்கும் மீசை முடி படிஞ்சிருக்கு பார்த்தீங்களா?’ என்பான் ஒருவன். 'என் ஆளு என்னை 'அமராவதி’ அஜீத் மாதிரி இருக்கிறதாலதான் லவ் பண்ணுனேன்னு சொல்லுது பாஸ். உங்களுக்குத் தெரிஞ்ச புரொடியூஸர், டைரக்டர்களுக்கு ரெக்கமென்ட் பண்ணுங்களேன்’ என்பான் இன்னொருவன். கவனம் கய்ஸ்!

கோடம்பாக்கத்துக்குக் கிளம்பிட்டாங்கப்பா!

'ஃபேஸ்புக்ல சீனு ராமசாமி என் ஸ்டேட்டஸுக்கு லைக் கொடுத்துருக்கார், ஆன்ட்ரியா என் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்டை அக்செப்ட் பண்ணிருச்சு’ என்பதையெல்லாம் சிறப்புத் தகுதியாக்கி உங்களிடம் பேசுபவர்களிடம், அதிகம் எச்சரிக்கையாக இருங்கள். 'கமலுக்குக் கதை சொல்லணும்னா, ஆழ்வார்பேட் போனாப் போதும்ல’ என திகீர் யோசனையில் திடுக்கிடவைப்பார்கள்.

'இந்த விமல் பய டாக்டர் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான் பார்த்தியா?’, 'நம்ம சிவகார்த்திகேயன் இருக்கானே... அத்தைப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான் தெரியுமா?’, 'நம்ம தம்பி ராமையாவோட மகனும் நடிக்கப் போறான் தெரியுமா? நல்ல மனுஷன்யா... இத்தனை வயசுக்கப்புறம் நேஷனல் அவார்டு வாங்கிட்டாப்ல’ என பேப்பரில் வந்த பிட் செய்திகளுக்கே கொஞ்சம் ஃபெவிகால் சேர்த்து, சம்பந்தம் இல்லாமல் உங்கள் ஹாலில் பாய் விரித்துக் கால் ஆட்டியபடியே தோரணம் கட்டுபவர்களிடம் உஷாராக இருந்துக்கோங்க. அவர்கள் ஐந்தாண்டு (டார்ச்சர்) திட்டத்தோடு அங்கு வந்திருக்கக்கூடும்!

கோடம்பாக்கத்துக்குக் கிளம்பிட்டாங்கப்பா!

'ஏனெனில்’ என்ற வார்த்தையை அதிகமாகப் போட்டு கவிதைகள் எழுதுபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். கோடு போட்ட தடி நோட்டு பூரா காதல் கவிதைகள் என்ற பெயரில் 'காதல் தெய்வீகமானதுதான் ஏனெனில்...’ போன்ற டைப் கவிதை டார்ச்சர் கொடுத்து, யுகபாரதி, நா.முத்துக் குமார் வகையறாவுக்கு டஃப் கொடுக்கும் நோக்கில் உங்களை வாகனமாக்கி கோடம் பாக்கம் வாசல் கதவைத் தட்டிவிடலாம் என யோசனையில் லேண்ட் ஆவார்கள். பார்த்து சூதானமா இருக்கோணும்!  

'ஓப்பன் பண்ணா ரயிலு ஒண்ணு ஃபாஸ்ட்டா மலைக்கு நடுவுலே வந்துக்கிட்டு இருக்கு. ஒரு புறா வானத்துல இருந்து பறந்து வருது. அந்த ரயிலுக்கு ஈக்குவலா பறக்குது. அப்படியே புறாவும் ரயிலும் குகைப் பாதைக்குள்ள போகுதுங்க. அங்கே ஃப்ரீஸ் பண்ணி டார்க் பேக்ட்ராப் இருட்டுல டைட்டில் போடுறோம்... எப்பூடி?’ என ஓவர் பில்ட்-அப்போடு யாரேனும் கதை சொன்னால் அபசகுனமாய், 'இது தேறாது’ என முகத்தில் அடித்தாற்போலச் சொல்லி நட்பைத் துண்டித்துக்கொள்ளுங்கள். நண்பனாச்சே என விட்டுவிட்டால் விருட்சமாய் வளர்ந்து மொக்கை சீன்களாலேயே உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கி, உங்கள் பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் வீழ்ச்சிப் பாதையில் வீழ்த்திவிடுவார்கள்!

- ஆர்.சரண்