Published:Updated:

அழகியல் குறும்படம்: பேப்பர் மேன்!

அழகியல் குறும்படம்: பேப்பர் மேன்!
அழகியல் குறும்படம்: பேப்பர் மேன்!

1940களில் திரையில் காட்டப்பட்ட கறுப்பு வெள்ளை நிற நியூயார்க் நகரத்தில், அக்கவுன்டன்ட் ஆக பணிபுரியும் இளைஞன் ஜார்ஜ். வேலைக்கு செல்வதற்காக ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்கும்போது,  கையிலிருந்த பேப்பர் காற்றில் அலை அலையாக பறக்கிறது. பிடிக்க பின் தொடரும் ஜார்ஜ் எதிரே,  ஒல்லியான சிரித்தமுகத்துடன் மெக் கடக்கிறாள் . அவளின் முகத்தில் பேப்பர் மோதுகிறது. அவள் அந்த பேப்பரை எடுத்துக் கொடுக்க, அந்த பேப்பரில் அவளின் லிப்ஸ்டிக் சாயம் படிந்து விடுகிறது.  சிரித்துக் கொண்டே ரயிலில் ஏறிச் செல்கிறாள் மெக்.

அழகியல் குறும்படம்: பேப்பர் மேன்!

பிடித்தமே இல்லாமல் அலுவலகத்தில்,   லிப்ஸ்டிக் சாயம் படிந்த பேப்பரையே பார்த்துக் கொண்டிருக்கிறான் ஜார்ஜ். எதிர் கட்டடத்திற்கே அவள் வருவதை பார்த்த ஜார்ஜின் மனதிற்குள் ஒரு சந்தோஷம். எப்படியாவது அவளை பார்க்க வைக்க வேண்டும் என்ற ஆசையில், ஜன்னலின் வழியே கையசைக்கிறான். மேஜையில் இருக்கும் பேப்பரில் ராக்கெட் செய்து அடுத்த கட்டிடத்திற்கு பறக்க விடுகிறான். ஏவப்பட்ட ஒவ்வொரு ராக்கெட்டும் தோல்வியிலேயே முடிகிறது. கடைசியாக அவளின் லிப்ஸ்டிக் படிந்த பேப்பரில் ராக்கெட் செய்து பறக்க விடுகிறான். அதுவும் இலக்கை அடையாமல் தரையில் விழுகிறது.

அவளை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று நெரிசலான நகர சாலையில் ஓட ஆரம்பிக்கிறான். கடைசி வரைக்கும் அவளை பார்க்க முடியவில்லை. அடுத்த காட்சியிலேயே ஒரு மாயாஜாலம். அவன் முயற்சித்த அனைத்து ராக்கெட் பேப்பர்களும் சேர்ந்து காற்றில் பறந்து வந்து இவனை இழுத்துச் செல்கிறது. அந்த நேரத்தில் லிப்ஸ்டிக் படிந்த ராக்கெட் பேப்பர் அவளை கொண்டு வர,  இருவரையும் பேப்பர் ராக்கெட்டுகள் சந்திக்க வைக்கும் கடைசி காட்சி, இதுவே “பேப்பர் மேன்” என்ற குறும்படம்.

2012 ல் ஜோன் கர்ஸ் இயக்கத்தில், வால்ட் டிஸ்னியின் தயாரிப்பில் வெளியான முதல் அனிமேஷன் குறும்படம் இந்த பேப்பர் மேன். ஏழு நிமிடத்தில் ஒரு சிறந்த காதலும் சிரிப்பும் கலந்த ஒரு கலை உருவாக்கமாக படைக்கப்பட்ட இந்த பேப்பர் மேன், 2013 ஆம் ஆண்டு 85வது ஆஸ்கார் விருதில் சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருதினை தட்டிச் சென்றது.

இந்தத் திரைப்படம் காதலை மையப்படுத்தி இயந்திர வாழ்க்கையில் சிக்கி கிடக்கும் மனிதர்களை கண்முன் வெள்ளோட்டமாக விட்டுச் செல்கிறது. அலுவலத்தின் மிளகாய் தின்றது போல, எப்போதுமே காட்டமான  அதிகாரி. பக்கத்தில் என்ன நடக்கிறது என்றே கவனிக்காமல் மேனேஜருக்கு பயந்து வேலையில் மட்டும் கண்களை ஓட்டும்  உடன் வேலை செய்யும் இயந்திரத்தனமான வேலையாட்கள், எல்லா கதாப்பாத்திரத்தின் மனதிலும் ஒரு இறுக்கம்... என்று இயந்திரவாழ்க்கையையும்  மனதில் பதிய விட்டுச் செல்லும் இந்த குறும்படம். 

அழகியல் குறும்படம்: பேப்பர் மேன்!

வால்ட் டிஸ்னியின் அனிமேஷனில் தயாரான பேப்பர் மேன், வரையப்பட்ட 2டி அனிமேஷனும் 3டி மோஷன் அனிமேஷனில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸூம் இணைந்து தயாராகி இருக்கிறது. முதலில் 2டியில் படம் தயாரிக்கப்பட்டு பின்னர் அதில் பல அடுக்கு மோஷன் கலந்து தயாரிக்கப்பட்டது. மேண்டர் என்றழைக்கப்படும் வெக்டார் டிராயிங் மூலம் உருவாக்கப்பட்டது இந்த பேப்பர்மேன். 2டியில் ஒவ்வொரு ஃப்ரேமாக கம்ப்யூட்டரில் வரைந்து, பின்னர் அதற்கு மோஷன், ஷேடிங், ஷில்-அவுட், இறுதியாக 3டி டெப்த் என்று பல லேயராக ஒவ்வொரு கேரக்டரும் தனித் தனியாக தயாரிக்கப்பட்டு,  ஒரு சிறிய டீமால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான படைப்பே  பேப்பர் மேன்.

அழகியல் குறும்படம்: பேப்பர் மேன்!

மெல்லிசான பின்னனி இசை, முழுக்க முழுக்க ஷில் -அவுட் ஷேடிங்கில் கதாப்பாத்திர வடிவமைப்பு, இரண்டுமே படத்தில் புகுத்தப்பட்ட ஷார்ஃப் டெக்னிக்ஸ். டயலாக்ஸ் இல்லாமல் முகபாவத்தில் அனைத்தையுமே எளிதில் புரிய வைக்கிறார் ஜோன் கர்ஸ். எந்த ஒரு செயலில் நம் மனம் முழுதாக செயல்படுகிறதோ, அந்த விஷயமே நம்மை துரத்தி அந்த விஷயத்தில் நம்மை ஜெயிக்க வைக்கும் என்பதே ஃபைனல் டச்.

“ஒவ்வொரு நாள் காலையிலும்  கிராண்ட் சென்ட்ரல் ஸ்டேஷனில் ஏறி வேலைக்குச் செல்வேன். அப்போது எத்தனையோ மனிதர்களை நேருக்கு நேர் சந்திக்கிறோம். அதில் பல அழகான பெண்களும் உண்டு. அப்படி பார்த்தவர்களை மறுபடியும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? - இதுவே இந்த குறும்படத்திற்கான என்னுடைய இன்ஸ்பரேஷன். ஒரு முறை சந்தித்த பெண்ணை மறுபடியும் பார்த்தால் எப்படி இருக்கும்? அதற்கு சின்ன மாயம் கலந்த கற்பனையிலேயே பிறந்தது இந்த பேப்பர் மேன் ஸ்டோரி” என்கிறார் இந்த குறும்படத்தின் இயக்குனர் ஜோன் கர்ஸ்.

பி.எஸ்.முத்து