Published:Updated:

ஆதிபகவன்

ஆதிபகவன்

ஆதிபகவன்

ஆதிபகவன்

Published:Updated:

டம் தொடங்குவதற்கு முன்பு வரிசையாக அடுத்தடுத்து அறிவிப்புகள் வந்து விழுகின்றன. 'புகையிலையைப் பயன்படுத்துவது புற்றுநோயை ஏற்படுத்தும்’, 'இந்தப் படத்தில் இடம்பெறும் சம்பவங்களும் பாத்திரங்களும் எந்த மதத்தையோ, இனத்தையோ, குறிப்பிடுபவை அல்ல’, 'விலங்குகள் இந்தப் படத்தில் துன்புறுத்தப்படவில்லை’ ’சண்டைக் காட்சிகள் கிராஃபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டுள்ளன’ என்றெல்லாம் அடுத்தடுத்து அறிவிப்புகள். அதோடு இன்னோர் அறிவிப்பையும் போட்டிருக்கலாம், 'இந்தப் படத்தைப் பார்த்து ஏற்படும் சேதாரங்களுக்கு கம்பெனி பொறுப்பல்ல’ என்று.

ஆதிபகவன்

ஆதி, அதாவது ஜெயம் ரவி பாங்காங்கில் கடத்தல் மற்றும் மோசடித் தொழில்கள் செய்பவர். ஒரு பாரில் பணிப்பெண்ணாக வேலை பார்க்கும் நீது சந்திராவைப் பார்த்ததும், பரிதாபமும் காதலும் வருகிறது ஜெயம் ரவிக்கு. 'மும்பையில் இருக்கும் அப்பாவிடம் சம்மதம் வாங்க வேண்டும்’ என ஜெயம் ரவியை மும்பைக்கு அழைத்துவருகிறார் நீது. அங்கேதான் சஸ்பென்ஸ். மும்பையில் தாதாவான பெண்தன்மைகொண்ட, இன்னொரு ஜெயம் ரவிதான் பகவான். அவரின் காதலிதான் நீது. மத்திய அமைச்சருடனான மோதலில் என்கவுன்ட்டரில் சாக வேண்டியவர் 'பகவான்’ ரவி. அவருக்குப் பதிலாக உருவ ஒற்றுமை உள்ள 'ஆதி’ ரவியைப் பலிகடாவாக்க மும்பை அழைத்து வருகிறார். அப்புறம் என்ன ஆனது என்பதுதான் ஆப்பு.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், 'பில்லா’ படத்தில் தாதா ரஜினி, அவரைப் போல தோற்றம்கொண்ட பெண் தன்மையுடைய இன்னொரு ரஜினி, 'பில்லா’வுக்குப் பதிலாகப் பெண்தன்மைகொண்ட ரஜினியை பில்லாவாக மாற்றும் போலீஸ் அதிகாரி. இந்தக் கதையை அப்படியே தலைகீழாக உல்டா செய்தால் அதான் பாஸ் 'ஆதிபகவன்’. பேசாமல், 'பில்லா-2’ போல ’பில்லா 1/2’ என்று டைட்டில் வைத்திருந்தால், 'நாட்டாமை டைட்டிலை மாத்து’ என்று எதிர்ப்பும் வந்திருக்காது. அப்போ படத்தில் புதுமையே இல்லையா என்கிறீர்களா? இதோ...!

பொதுவாக டபுள் ஆக்ட் படங்கள் என்றால் ஒரு கேரக்டர் நல்லவன், இன்னொரு கேரக்டர் கெட்டவன் என்று இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் ஒரு கேரக்டர் ரொம்பக் கெட்டவன். இன்னொரு கேரக்டர் ரொம்ப ரொம்பக் கெட்டவன். அதாவது ஆதி மொள்ளமாரி, பகவான் முடிச்சவிக்கி!

ஹீரோ 'ஜெயம் ரவி’, வில்லன்...? அதுவும் ஜெயம் ரவிதான். ஹீரோயின் நீது சந்திரா. வில்லி...? அதுவும் நீதுதான். அப்போ காமெடியன்கள் இல்லையா? அதான் படம் பார்க்கப் போன நாம இருக்கிறோமே!

பொதுவாக கிளைமாக்ஸில் இரண்டு ஆண்களுக்கு இடையேதான் சண்டை நடக்கும். ஆனால், இந்தப் படத்திலோ ஜெயம் ரவிக்கும், நீது சந்திராவுக்கும் இடையில் பயங்கரமான சண்டை. நீது சந்திராவைப் போட்டுப் பொளக்கும் ஜெயம் ரவி, கத்தியால் குத்திக் கொலையும் செய்கிறார். நீது சந்திரா அடி வாங்கும்போது தியேட்டரில் கைதட்டல்கள். எல்லோருக்கும் வீட்டு ஞாபகம் வந்திருக்கும்போல!

ஆதியும் பகவானும் படத்தில் ஏகப்பட்ட துப்பாக்கிகள் வைத்திருந்தாலும் கிளைமாக்ஸில் 'நீரும் நெருப்பும்’ எம்.ஜி.ஆர். போல, கத்திச்சண்டை தான்!

பொதுவாக எம்.ஜி.ஆர். படங்களில் யாராவது துப்பாக்கியில் சுட்டுவிடுவார்கள். அவரும் யார் வீட்டிலாவது அடைக்கலம் ஆவார். அங்கே ஏதோ பர்த் டே கேக் வெட்டுவதுபோல நெஞ்சுக்குள் துளைத்த துப்பாக்கிக் குண்டைக் கத்தியை விட்டுக் குடைந்து எடுப்பார்கள். ரொம்ப நாளாக நாம் பார்க்காத இந்த அரிய காட்சி இந்தப் படத்தில் உண்டு. ஜெயம் ரவியைத் துளைத்த துப்பாக்கிக் குண்டை நீது சந்திரா எடுக்கிறார். ஒரு எம்.ஜி.ஆர். படம் எடுக்கத்தான் இத்தனை பில்ட்-அப்களா அமீர் சார்?

- தரை டிக்கெட்