Published:Updated:

''பவர் ஸ்டாருக்கு நான்தான் ஓனரு!''

''பவர் ஸ்டாருக்கு நான்தான் ஓனரு!''

'பவர்ஸ்டார் மூவீஸ் பெருமையுடன் வழங்கும் '4’ படத்தின் இசை வெளியீட்டு விழா' என நாளிதழில் விளம்பரம் வந்திருந்தது. 'அடடா, பவர் ஸ்டார் புதுசா ஒரு சினிமா கம்பெனி ஆரம்பிச்சிட்டாரா’ என்று நினைத்து போனை போட்ட எனக்கு செம ஷாக். காரணம், தயாரிப்பாளர் பவர் ஸ்டார் இல்லை. பவர்ஸ்டார் பார்ட் 2. இதோ அந்தக் கண்ணைக் கட்டும் கான்வெர்சேஷன்!

"வணக்கம், டைம்பாஸ்ல இருந்து பேசுறேன், '4’ படத்தோட தயாரிப்பாளர் நீங்கதானே, உங்களை ஒரு பேட்டி எடுக்கணும்"

''பவர் ஸ்டாருக்கு நான்தான் ஓனரு!''

"நான் இப்போ மீட்டிங்ல இருக்கேன், தொந்தரவு பண்ணாதீங்க, ஆமா உங்களுக்கு போட்டி வேணும்னா, ஹோட்டல்ல போய்க் கேட்கலாம்ல. என்கிட்ட ஏன் கேட்குறீங்க?"

"சார், நான் பத்திரிகையில இருந்து பேசுறேன். நான் மட்டன் போட்டி கேட்கலீங்க. பேட்டி, அதாவது இன்டர்வியூ..."

(அருகில் இருந்த இன்னொருவர் போனை வாங்கிப் பேசுகிறார்)

"நான்தான் இந்தப் படத்தோட டைரக்டர், உங்களுக்கு என்ன வேணும்?"

"சார், நான் டைம்பாஸ்ல இருந்து பேசுறேன், எனக்கு உங்களோட பேட்டி வேணும்."

''உடனே வாங்க சார்.''

கிளம்பிச் சென்றால், அங்கே எம்.ஜி.ஆர். கெட்-அப்பில் ஃபுல் மேக்கப்புடன் ஒருவர் அமர்ந்திருந் தார்.

''நான்தான் இந்தப் படத்தோட புரொடியூசர். இது எனக்கு முதல் படம், அதனாலதான் நீங்க யாருன்னு சொன்னப்போ, என்னால சரியா பதில் சொல்ல முடியலை.''

''பவர் ஸ்டாருக்கு நான்தான் ஓனரு!''

''பரவாயில்லை சார், ஆமா, உங்க விளம்பரத்துல சேலம் ஆத்தூர் பால் வெங்கடேஷ்னு போட்டுருக்கே, அது ஏன்?''

''என் பேரு வெங்கடேஷ், எங்க பட கம்பெனி பேரு பவர்ஸ்டார் மூவிஸ், டைரக்டர் பேரு பகவதி பாலா, ஹீரோ பேரு பாலாஜி, நான் ஊருல பால் வியாபாரம் பண்ணிக்கிட்டு இருந்தேன், அதுனால என் பேரும் 'ப'னாவுல இருக்கட்டும்னு பாலைச் சேர்த்துக்கிட்டேன், அப்புறம் சேலம் எங்க மாவட்டம், ஆத்தூர் எங்க டிஸ்ட்ரிக்ட். அதனாலத்தான் எல்லாத்தையும் சேர்த்து அப்படிப் பேரு வெச்சிருக்கேன். நல்லாயிருக்குல்ல?''

''பவர் ஸ்டாருக்கு நான்தான் ஓனரு!''

''சூப்பர் ஸார். பால் வியாபாரம் செஞ்சுட்டு இருந்த நீங்க, சினிமா எடுக்க வந்தது எப்படி?''

''விடியக்காலம் ரெண்டு மணிக்கு எந்திரிச்சு பால் கறந்து வித்து, கூலி வேலை செஞ்சு, குருவி மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக் காசு சேர்த்து இந்தப் படத்தை எடுத்திருக்கேன். டைரக்டர் இந்தக் கதையை என்கிட்ட சொன்னவுடனே, லாபத்துக்காக இல்லேன்னாலும் மக்களுக்கு ஒரு நல்ல சேதியைக் கொண்டுபோய்ச் சேர்த்தோம்கிற பேராவது கிடைக்கணும்னுதான் இந்தப் படத்தை ஆரம்பிச்சேன். என்னோட படத்தை மக்கள் நல்லபடியா ஓடவைக்கணும். அப்புடி செஞ்சுட்டாங்கன்னா, நான் இன்னும் நிறையப் படம் எடுப்பேன், இன்னும் மக்களுக்கு நிறைய நல்ல நல்ல சேதியா சொல்லுவேன்!''

''அது என்ன சார் பவர்ஸ்டார் மூவிஸ்?''

''சூப்பர்ஸ்டாருக்கு ஒரே ஒரு போட்டினா, அது பவர்ஸ்டாருதான். அந்த பவர்ஸ்டாருக்கு போட்டினா, அது நான்தான். அதுக்குத்தான் 'பவர்ஸ்டார் மூவிஸ்’னே பேரு வெச்சுருக்கேன். நியாயமாப் பார்த்தா இப்போ நான்தான் பவர்ஸ்டார்ங்கிற பேருக்கு ஒரே ஒரு ஓனரு. படத்துக்கு இப்பவே வினியோகஸ்தர்கிட்ட நல்ல வரவேற்பு. சன்லைட் ரைட்ஸையும் பேசிக்கிட்டிருக்கோம்'' (சாட்டிலைட் ரைட்ஸைத்தான் அப்படிச் சொல்கிறார் மிஸ்டர் பானா.)

''படத்தோட கதை என்ன சார்?''

''படிக்கிற பிள்ளைங்க எச்சாமுல (எக்ஸாம்ல) ஃபெயிலாயிட்டா எடுக்குற தப்பான முடிவைப் பத்தின கதை சார் இது!''

''நல்ல கதை சார். ஆனா, இந்தக் கதைக்கும் உங்க எம்.ஜி.ஆர். கெட்- அப்புக்கும் என்ன சம்பந்தம்?''

''நான் படத்துல இன்ஸ்பெக்டரா நடிக்கிறேன். பரீட்சையில ஃபெயிலாகி வீட்டை விட்டு ஓடிப்போற பிள்ளைங்களைக் காப்பாத்துற இன்ஸ்பெக்டர் வேஷம். இந்த வேஷத்தை நான் பண்ணாத்தான் நல்லா இருக்கும்னு டைரக்டர் கப்புல் (கம்பெல்) பண்ணினாரு. அப்புறம் எனக்குப் புரட்சித்தலைவர்னா உயிரு. அவரை மாதிரியே சினிமாவிலேயும் வரணும்னுதான் அவரோட வேஷத்தையே போட்டுருக்கேன்.''

'' தனுஷ் நடிச்ச '3’ படத்துக்கும் உங்களோட '4’ படத்துக்கும் 5 வித்தியாசம் சொல்லுங்க, பார்ப்போம்''

''அது பெரிய பட்ஜெட்டுங்க, நம்ம படம் சின்ன பட்ஜெட். அந்தப் படம் அவ்ளோ பெரிய ஹிட் இல்லீங்க. ஆனா இது நல்லா ஹிட் ஆகுங்க. நம்ம படத்துனால நாலு பேருக்கு நல்லது நடக்கும். அதுக்காகத்தான் படத்துக்கே நாலுன்னு பேரு வெச்சிருக்கேன். ஆமாம் தம்பி, வந்ததுல இருந்து சவசவன்னு பேசிக்கிட்டே இருக்கீங்களே,  பேட்டினு சொன்னீங்களே... அதை எப்ப எடுப்பீங்க?''

- சீலன்