
காதல் பாட்டுகள்ல கலக்கி எடுக்கும் நம்ம ஊரு கவிஞர்களோட டைரிகள் உள்ள பை ஒண்ணு என் கையில கிடச்சுது. தொறந்து உள்ளே இருந்த காதல் கவிதை முயற்சிகளைப் பார்த்தேன். ப்ப்ப்ப்பா... யாருடா இவரு... இப்படி எழுதி இருக்காருனு டவுட். அது எந்தெந்த கவிஞர்களோட முயற்சிகள்னு கண்டுபிடிச்சு இருக்கேன். நீங்களும் கரெக்டானு பாத்துச் சொல்லுங்களேன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'என் அப்பத்தா சுட்டுப் போட்ட அதிரசமே’னு டெரரா ஆரம்பித்தவர்,
'கள்ளிக்காட்டு சப்பாத்திக் கள்ளிப் பால் நீ’னு சைடுல ரூட் விட்டிருந்தார்.
'செத்துச் செத்துப் பிழைத்தேன் காதலில்’னு எழுதிட்டு, 'தவணை முறையில் சாகிறேன். வட்டி மட்டும் கட்டிவிடு, கடனாக இதயம் கொடு’னு போட்டிருந்தார். ஒருவேளை, கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்டு இருப்பாரோனு நினைச்சுக்கிட்டு தொடர்ந்து பக்கங்களைத் திருப்பியபோது 'என் கண்ணுக்குள்ள மொளகாத் தொவயலைப் பூசிப் போறியே...
நீருக்கும் தாகம் எடுக்குமே... போர்வைக்கும் குளிருமே... நெருப்புக்கும் சுடுமே... தங்கத் திரவம் பூசிய தேகம் உனது... கருப்பட்டிப் பாலில் செய்த கூந்தல் உனது’னு புகுந்து விளையாடி இருந்தார் கவிஞர்.
இப்படி கிராமத்து சைடு-டிஷ் தடவி, கம்பீர வரிகளைக் கொடுப்பவர் யாரு?
வேற யாரு, நம்ம வைரமுத்தேதான்!

அடுத்த பைக்குள்ள இருந்தது டைரி இல்லே. அது ஒரு ஐ-பாட். அதில் இருந்த கவிதைகள்...
'லைக்ஸ் இல்லாத ஸ்டேட்டஸ் போல நீ இல்லாத நான்...
என்னைக் கொஞ்சம் லைக் செய்... உன் காதலைக் கொஞ்சம் ஷேர் செய்... உன் அப்பன் வந்தால் ப்ளாக் செய்’னு ஒரே ஃபேஸ்புக் மயம்.
'ட்விட்டர் ட்வீட்டிங்கில் சொல்லாடல் செய்தேன்...
உன் டிஜிட்டல் குரல்களை ஸ்கைப்பில் பதிவுசெய்தேன்...
சிலிக்கான் பிளேட்டில் காதல் கடிதம் எழுதினேன்...
ஜாவா ப்ரொக்ராமில் கிரீட்டிங் கார்டு கொடுத்தேன்...’

யாருடா இது? இவரு கவிஞரா? இல்ல பாண்டிபஜார் டிஜிட்டல் கடை ஓனரானு ஒரு டவுட்டு. நீங்க கண்டுபிடிச்சு சொல்லுங்களேன் இது யாருன்னு... யெஸ், டெக்னோ கவிஞர் மதன் கார்க்கியேதான்!

அடுத்த டைரியைப் புரட்டிப் பார்ப்போமா?
'கன்னிப்பொண்ணு மனசுக்குள்ளே கசமுசா...
கியூபா தீவா நீ? மலாய் தீவா நான்? ஹவாய் தீவு சிற்பமே...
இதயங்கள் மோத... பின் காதல் ஓத...
பொன்மகளே... தங்க ரதமே... ஆசைக்கிளியே...
எண்பது வயதிலும் எட்டி நின்னு காதல் செய்வேனே’னு இளமை துள்ளலாட, 'யாருடா இவர்?’னு யோசிக்கவைத்தார், வாலிபக் கவிஞர் வாலி!

அடுத்த டைரியைப் புரட்டிப் பார்த்தா, கொஞ்சம் கிராமத்துப் புழுதி, மயிலிறகு, திருநீறுப் பொட்டலம், செங்கல் சூளை மண்ணு எல்லாம் ஒட்டி இருந்தன.
'அவளோட கிறக்கப் பேச்சுல நான் கிறுக்குப் பிடிச்சு அலையுறேனே...
ஒன்னோட நெனப்பு இப்படி உசுர அறுத்து எடுக்குதே புள்ள...
நான் முடிவெட்டலை... தலை சீவலை... ஷேவ் பண்ணலை... எல்லாம் உன்னால புள்ள’
'காட்டு யானைக் கூட்டங்கள்கிட்ட காதல் கத்துக்குவோம் வா...
நரிகள் தந்திரம் கத்துக்கிட்டு உன்னைக் கூட்டிப் போவேன் வா...
ஈர மண்ணுல எழுதிவச்சேன் நம்ம காதல...
நண்டு நரி வந்து சொல்லுச்சா அதை உன் காதுல?’
என்று காடு, காட்டு விலங்குகள், மரம், அடர்ந்த அமேஸான் காடுகள், பள்ளத்தாக்குன்னு திகில் ஏரியாக்களில் ரவுண்டு கட்டி இருந்தவரை யாருன்னு என்னோட ஷேவ் பண்ணாத தாடியைச் சொறிஞ்சு யோசிச்சேன். அட, நம்ம யுகபாரதி!

ஆப்பச் சட்டியில காரக் கொழம்பு வைக்கட்டுமா? ஆட்டுக்கறியை பிச்சு உனக்கு ஊட்டட்டுமா ? உன்னோட பொறுக்கிப் பய நான்... என்னோட களவாணிச் சிறுக்கி நீ... எந்திருச்சு வா, ஒரு குத்தாட்டம் போடுவோம்... குத்தம் இல்ல... தப்பாட்டம் ஆடுவோம்... தப்பே இல்ல...
நீ சைவக்கடை தோசை... நான் பொன்னுச்சாமி குருமா... நமக்குள்ள காதல் வருமா?’ இப்படியே வரிகள் போக, 'என்னடா இது, முனியாண்டி விலாஸ் கொத்துப் புரோட்டா மாதிரி வரிகள் குதறிப் போட்டு இருக்கு, யாருப்பா இந்த ஊர் பேர் தெரியாத புள்ளைன்னு யோசிச்சா, பே...பே...பேரரசு!
- மோ.கிஷோர் குமார்