Published:Updated:

கில்ட் தயாரிப்பாளர் சங்க விவகாரம்: தமிழர் எழுச்சி இயக்கம் ஆர்ப்பாட்டம்!

Vikatan Correspondent
கில்ட் தயாரிப்பாளர் சங்க விவகாரம்: தமிழர் எழுச்சி இயக்கம் ஆர்ப்பாட்டம்!
கில்ட் தயாரிப்பாளர் சங்க விவகாரம்: தமிழர் எழுச்சி இயக்கம் ஆர்ப்பாட்டம்!

சென்னை: கில்ட் தயாரிப்பாளர் சங்க தலைவர் கிரிதாரிலால் எல்.நாக்பாலை எதிர்த்து தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழ் திரைப்பட சங்கங்களில் அடிக்கடி மோதல் ஏற்படுவது சாதாரண விஷயமாகி விட்டது. இப்போதுதான் நடிகர் சங்க விவகாரம் சற்று ஓய்ந்து இருக்கும் நிலையில் தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் (கில்ட்) மோதல் ஏற்பட்டுள்ளது. வட இந்தியரான அதன் தலைவர் கிரிதாரிலால் எல்.நாக்பால் தமிழ் உறுப்பினர்களை அவமதிப்பதாகவும், சங்கக் கூட்டங்களில் தமிழில் பேச அனுமதி மறுப்பது, சங்கத்தின் மாத இதழ் புத்தகத்தை தமிழில் வெளியிட மறுப்பது, இதனை எதிர்த்துக் கேட்ட உறுப்பினர்களை நீக்குவது போன்ற முறையற்ற செயல்களில் ஈடுபடுவதைக் கண்டித்து சீமான், தொல்.திருமாவளவன், இயக்குனர் வி.சேகர் போன்ற தமிழ் உணர்வாளர்கள் ஒன்று சேர்ந்து தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் கடந்த வள்ளுவர்கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கில்ட் தயாரிப்பாளர் சங்க விவகாரம்: தமிழர் எழுச்சி இயக்கம் ஆர்ப்பாட்டம்!

இதில் தமிழ் அமைப்புகளைச் சார்ந்த பலர் கலந்து கொண்டனர். தமிழர் எழுச்சி இயக்கத்தின் தலைவர் வேலுமணி,  தமிழ் திரைப்பட பாதுகாப்பு இயக்கத்தைச் சார்ந்த கே.ராசன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ் தேசியப் பேரியக்கம், தமிழ் நாடு மீனவர் மக்கள் சங்கம், ரயில்வே பயிற்சிப் பள்ளி மாணவர் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் மற்றும் நாக்பாலின் தன்னிச்சையான போக்கைக் கண்டித்ததால் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட துணைத் தலைவர் கலைக்கோட்டுதயம், செயலாளர் ஜாக்குவார் தங்கம் மற்றும் இயக்குனர் ஆதிராம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். வட நாட்டினரின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் இனத்தின் குரலாக இந்த ஆர்ப்பாட்டம் இருந்தது.

தமிழர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த வேலுமணி பேசும்போது, “49 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த சங்கத்தில் இதுவரை 3000 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே மற்ற மொழிகளில் படம் தயாரிக்க முடியும். இந்தியா மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்படாததற்கு முன்பே இந்திராகாந்தியால் தொடங்கபட்ட இந்த அமைப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய தயாரிப்பாளர்களும் இந்த அமைப்பில் இருந்தனர். இதற்கு முக்கியக் காரணம் அந்த மொழிப்படங்கள் அனைத்தும் சென்னையில் தான் தயாரிக்கப்பட்டன. ஆனால், காலப்போக்கில் தமிழ் தவிர மற்ற மொழித் தயாரிப்பாளர்கள் தங்களது மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து அங்கே தனியாக சங்கம் ஏற்படுத்திக் கொண்டனர். இப்போது அந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து மொத்த எண்ணிக்கையில் 10 சதவிகிதம் மட்டுமே உள்ளது. ஆனால், தமிழ் உறுப்பினர்கள் 90 சதவிகிதம் பேர் உள்ளனர்.

இந்த உறுப்பினர்கள் பயனடையும் வகையில் திரைத்துரை சார்ந்த தகவல்கள், விழாக்கள், விருது தொடர்பான அறிவிப்புகள் அடங்கியப் புத்தகம் 19 வருடங்களாக மாதம்தோறும் 45 ஆயிரம் ரூபாய் செலவில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு வந்தது. தமிழ் தயாரிப்பாளர்களின் வசதிக்காக தமிழிலும் மொழிமாற்றம் செய்து அதனை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த இரண்டு வருடங்களாக பொதுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டும் செயல்படுத்தப்படாமல் உள்ளது.  இதனை வலியுறுத்தியதற்காக  துணைத் தலைவர் கலைக்கோட்டுதயம், செயலாளர் ஜாக்குவார் தங்கம் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆதிராம் ஆகியோரை நீக்குகிறோம் என தைரியமாக குறிப்பிட்டுள்ளனர். கேட்டால் தமிழில் பேசினார்கள் என்று காரணம் சொல்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இன்னும் 15 நாட்களுக்குள் தீர்வு காணப்படவில்லை எனில் சங்கத்தைக் கைப்பற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்” என்றார்.

கில்ட் தயாரிப்பாளர் சங்க விவகாரம்: தமிழர் எழுச்சி இயக்கம் ஆர்ப்பாட்டம்!

சீமான் பேசுகையில், ''இந்த சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் நான் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். இன்று நம் இடத்தில் வட நாட்டானின் ஆதிக்கம் எங்கும் வந்துவிட்டது. பெருந்தன்மையோடு வந்தாரை வாழவத்தால், இன்று அவனே நம்மை ஆளப்பார்க்கிறான், அடக்கப்பார்க்கிறான். தமிழர்களிடம் இருந்து தமிழ் மிகவும் அன்னியப்பட்டு போய்விட்டது. இலங்கையில் ஒரு இனம் அழிக்கப்பட்ட போது ஒரு வட இந்தியத் தலைவனும் தமிழனுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. மாற்றாக அவர்களுடன் சேர்ந்து விருந்து உண்டு கொண்டிருந்தனர். தமிழனுக்கு யாரும் ஆதரவில்லை. நமக்கு நாமே பலம்.

இந்த சங்கம் டெல்லியிலோ, மும்பையிலோ இல்லை, சென்னையில்தான் உள்ளது. அதனால் தமிழில் பேச சொல்வது கோரிக்கையல்ல, நம் உரிமை. என்னை எல்லோரும் தமிழ் வெறியன், இன வெறியன் என்கிறார்கள். என்னை அப்படிச் சொல்லும் யாராக இருந்தாலும் இன்னொரு மொழி மீது வெறிகொண்ட காரணத்தாலேயே அப்படி கூறுகிறார்கள். நான் நல்லதொரு தமிழ்தாய்க்கும், தந்தைக்கும் பிறந்தவன் அதனால் நான் அப்படிதான் இருப்பேன். ஒரு புத்தகத்தை தமிழில் வெளியிட என்ன கஷ்டம்? தமிழ் உறுப்பினர்கள் அதிகம் உள்ள இந்த சங்கத்திற்கு ’தென்னிந்திய’ என்ற பெயரை மாற்றவேண்டும். அப்படி இல்லாவிட்டால் தமிழனின் சுயரூபத்தைப் பார்க்க வேண்டியது இருக்கும். தமிழ் மக்கள் வந்தவனை வாழவைப்பார்கள் ஆனால், தங்கள் சொந்தவனை மட்டுமே ஆளவைப்பார்கள்'' என்றார்.

தொல்.திருமாவளவன் பேசுகையில், ''தமிழன் பக்குவட்ட முறையில் இருக்கிறான். அதற்காக அவமதித்தால் வாங்கிக் கொள்வான் என்று பொருளில்லை. நானும், சீமானும் ஒரே மேடையில் இருப்பதைக் கண்ட பலர் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர். தமிழனுக்கு ஒரு பிரச்னை என்றால் நாங்கள் தான் இணைந்து வருவோம். மற்ற மாநிலத்தார்களின் மொழிவெறி, மொழிப்பற்று நம்மிடம் இல்லை. கர்நாடகத்தில் ஒரு கிராமத்தில் நுழைய எனக்கு அவர்கள் அனுமதி தரவில்லை. கேட்டால் நான் தமிழர் பிரச்னைக்காக போராடுபவன் என்று காரணம் சொன்னார்கள். ஆனால், இதுவே நம் மாநிலத்தில் எங்காவது நடக்க வாய்ப்புண்டா? அதுதான் நமது பெருந்தன்மை. அந்தப் பெருந்தன்மையை கோமாளித்தனம் என்று நினைத்து மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நாம் யார் என்பதைக் காட்ட வேண்டியது இருக்கும். சங்கக் கூட்டத்தில் தமிழில் பேச அனுமதிக்க வேண்டும். உடனடியாக சங்கப் பொறுப்பைத் தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றார்.

கில்ட் தயாரிப்பாளர் சங்க விவகாரம்: தமிழர் எழுச்சி இயக்கம் ஆர்ப்பாட்டம்!

இறுதியாக நம்மிடம் பேசிய ஜாக்குவார் தங்கம், “ நான் படிக்காதவன். எனக்கு தமிழ் தவிர வேறு மொழி தெரியாது. என்னைப் போலவே படிக்காத உறுப்பினர்கள் பலர் உள்ளனர். அதற்காக அந்த புத்தகத்தை தமிழிலும் மொழிமாற்றம் செய்யலாமே? என்று கேட்டதற்கு தான் இப்படி நடந்துள்ளது. தற்போது தலைவராக இருக்கும் நாக்பால், துணைத்தலைவராக இருக்கும் தேவராஜ் குணசேகரன், சிம்மம் ரகு, செயற்குழு உறுப்பினர் லோதா மற்றும் இதன் மேனேஜர் ஆகியோர்  12  ஆண்டுகளுக்கு மேல் கூட்டாக இருந்துகொண்டு இதுபோன்ற பிரச்னைகளில் ஈடுபட்டு வருகின்றனர். படத்தலைப்பை பதிவு செய்ய வரும் தயாரிப்பாளர்களிடம் அதற்கான கட்டணமான 500 ரூபாயை விடுத்து, பேரம் பேசி லட்சக்கணக்கில் கொள்ளையடிக்கின்றனர். நான் எதோ காழ்ப்புணர்ச்சியில் செயல்படுவதாகவும், அடிப்பதாகவும் என்மீது புகார் கூறி என்னை நீக்கியுள்ளார்கள். தமிழில் பேசியதால் நீக்க்கினோம் என்று குறிப்பிட்டுள்ளனர். எப்படி ஒரு வட இந்தியக்காரன் தைரியமாக திமிரோடு இப்படி சொல்கிறான் பாருங்கள். 2012ம் ஆண்டு பொதுக்குழுவில் விவாதித்து தமிழில் புத்தகம் வெளியிட தீர்மானம் கொண்டுவந்தும் இன்னமும் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. கேட்டால், அப்படியெல்லாம் வெளியிட முடியாது என்கிறார்கள். இதுபோன்ற தமிழின விரோதிகள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமில்லாமல், வருடத்திற்கு நான்கு முறை மட்டுமே நடைபெறும் இந்திய திரைப்பட சம்மேளத்தின் கூட்டத்திற்கு 10 முறை சென்று வந்ததாகக் கணக்குக் காட்டி அதிக அளவில் பணம் பெற்றுள்ளார். ஆனால், அந்தப் பணத்தில் பல இடங்களுக்குச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். ஒரு சிறிய கழிப்பறைக் கட்ட ஒரு லட்ச ரூபாய் கணக்கு காட்டியுள்ளார். இதனைக் கேட்டால் எங்களை நீக்குகிறார்கள். எங்களை நீக்கும் முடிவை நாக்பாலே தன்னிச்சையாக செயற்குழுவைக் கூட்டாமல் எடுத்துள்ளார். நாங்கள் அதிகபட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு அவர்களை நீக்கியுள்ளோம். அதற்கான ஆதரமும் எங்களிடம் உண்டு. எனவே, எங்கள் நீக்கத்தை திரும்பப் பெற வேண்டும், சங்கத்தின் நிர்வாகமும், அதன் நடவடிக்கைகளும் தமிழ் நாட்டளவிலும், தமிழிலும் நடைபெற வழிவகுக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் சங்கத்தைக் கைப்பற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம். வட இந்திய கைக்கூலிகளை சும்மா விடமாட்டோம். தமிழனைச் சீண்டினால் திருப்பி அடிப்போம். பார்த்துக் கொண்டு இருக்கமாட்டோம் என்பதை நிரூபிப்போம். இது நிச்சயம்” என்றார்.

கில்ட் தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து அதன் செயலாளர் தேவராஜ் குணசேகரனைத் தொடர்பு கொண்டோம். ''தமிழில் பத்திரிகை கொண்டுவர மாட்டோம் என்று சொல்லவில்லை. ஒரு பத்திரிகை தொடங்க நிறைய சட்டதிட்டங்கள் இருக்கிறது. அதன் வழிமுறைகள்படிதான் போக முடியும். இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ள் நிலையில் அவர்கள் இந்தப் பிரச்னையை கிளப்பியுள்ளார்கள். நான் இந்த துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறேன். தமிழ் உணர்வு இல்லாமல் நாங்கள் இவ்வாறு செயல்படுகிறோம் என்று சொல்கிறார்கள். அப்படி தமிழ் உணர்வு இருந்தால் அவர்கள் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் இணைந்துகொள்ளலாமே. அதனைவிட்டு விட்டு பிலிம் சேம்பர் மற்றும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து கொண்டு எங்களை ஜாக்குவார் தங்கம், கலைக்கோட்டுதயம் மற்றும் ஆதிராம் ஆகியோரின் துணைகொண்டு அழிக்கப்பார்கிறார்கள். எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அதை மறுக்கிறேன். முடிந்தால் ஜாக்குவார் தங்கம் அதை நிரூபிக்கட்டும். இத்தனை காலமாக ஊழல் நடக்கிறது என்றால் அப்போதே அவர் எங்கள் செயற்குழுவில் கேட்டிருக்கலாமே? இவ்வுளவு காலம் ஒழுங்காக நடந்துகொண்டிருந்த சங்கத்தில் தேவையில்லாமல் அடியாட்களை வைத்துக் கொண்டு பிரச்னை செய்து வருகிறார்கள். இதனை நாங்கள் முதல்வருக்கு புகாராக அனுப்பியுள்ளோம்”  என்றார்.

 தமிழ் நாட்டில், தமிழ் உறுப்பினர்களைப் பிரதானமாகக் கொண்டு இயங்கும் ஓர் அமைப்பு, தமிழர்களின் மொழியையும் உணர்வையும் மதித்து நடந்துகொள்வதே நியாயமான செயல்பாடாக இருக்க முடியும்.

-மா.அ.மோகன் பிரபாகரன்


படங்கள் : ர.சதானந்த்