Published:Updated:

மறுபடியும் பிரச்னையில் மங்காத்தா?

மறுபடியும் பிரச்னையில் மங்காத்தா?

அஜீத்தின் 50வது படமான 'மங்காத்தா'விற்கு இந்த அளவிற்கு சிக்கல் இருக்கும் என்று நினைத்து கூட பார்த்து இருக்க மாட்டார் அஜீத்.

முதலில் தயாநிதி அழகிரி தனது க்ளவுட் நைன் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிடப்படும் என்று அறிவித்தார். வெளிநாட்டு உரிமையை மட்டும் ஐங்கரன் நிறுவனத்திடம் ஒப்படைத்து இருந்தார்.

நேற்று (ஆகஸ்ட் 23) காலை வந்த பேப்பர் விளம்பரங்களில் ஸ்டூடியோ 'க்ரீன் பெருமையுடன் வழங்கும் மங்காத்தா' என்று விளம்பரப்படுத்தினர். இதனால் 'மங்காத்தா' பிரச்னை முடிந்துவிட்டது என்றும் இனிமேல் படத்திற்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை என்றும்  பேச்சுகள் நிலவின.

இன்று (ஆகஸ்ட் 24)  ஒரு சில நாளேடுகளைத்  தவிர வேறு எதிலும் விளம்பரம் வரவில்லை. மறுபடியும் பிரச்னையா என்று கேள்வி எழுந்துள்ளது.

படத்தின் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரி தனது டிவிட்டர் இணையத்தில் " மங்காத்தா திரைப்படம் ஸ்டூடியோ க்ரீன் பேனரின் கீழ் வராது. இன்று அதிகாலை நாங்கள் சொல்வதற்குள் பேப்பரில் விளம்பரத்தை நீக்கும் நேரம் தாண்டிவிட்டது.  ஆனால் கண்டிப்பாக எதிர்ப்பார்த்தபடி மங்காத்தா படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் " என்று தெரிவித்துள்ளார்.

ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவும் இனிமே தனது நிறுவனத்திற்கும் 'மங்காத்தா' படத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் படத்தை பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்துள்ள தயாநிதி அழகிரி, படத்தை சன் டி.வி நிறுவனத்திடம் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இன்னும் ஓரிரு மணி நேரங்களில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம்.

அடுத்த கட்டுரைக்கு