Published:Updated:

ரோபோ யுத்தம்!

Vikatan Correspondent
ரோபோ யுத்தம்!
ரோபோ யுத்தம்!

கார்ட்டூன் ரசிகரா நீங்கள்? உங்களுக்குள் ஒளிந்து கொண்டு டாம் ஜெர்ரியைத் துரத்துவதையும் ரசிக்கும் குழந்தையை மனதில் சுமப்பவரா நீங்கள்? உங்களுக்கான ஒரு படம்தான் 'பிக் ஹீரோ 6'.

காமிக்ஸ் புக்காக வெளிவந்த 'பிக் ஹீரோ 6'ன் செல்லுலாய்டு வடிவம்தான் இந்தப் படம். கார்ட்டூன் நெட்வொர்க்கில் கோடி லைக்ஸ் குவித்த கார்ட்டூன் தொடர் பென் டென். அதனை எழுதிய மேன் ஆஃப் ஆக்‌ஷன் குழுவுடைய எழுத்து வடிவமைப்பில் உருவானவை இந்த 'பிக் ஹீரோ 6'ன் கதாபாத்திரங்கள்.
 

ரோபோ யுத்தம்!

முழுக்க ரோபாட்டிக்ஸ், மைக்ரோபாட், சூப்பர் ஹீரோ போன்ற சங்கதிகளை எடுத்துக்கொண்டு அதில் காமெடி கலந்து குழந்தைகளுக்கான விஷுவல் ட்ரீட் குதூகலத்துடன் உருவாகியுள்ளது.

கதைப்படி தொழிநுட்பத்தில் முன்னேறிய ரோபோக்கள், சேவல் சண்டை போல ரோபோ சண்டை விடும் காலத்தில் தொடங்குகிறது படம். தான் கண்டுபிடித்த மைக்ரோபாட்டை வைத்து அந்த சண்டையில் கலந்து வெல்கிறான் ஹீரோ. தன் தம்பி தனது திறமையை அர்ப்ப காரியங்களில் பயன்படுத்துகிறானே எனக் கவலை கொள்கிறான் டடாசி. தன் நண்பர்களுக்கு தன் தம்பி ஹீரோவை அறிமுகம் செய்கிறான். பின் டடாசி தான் கண்டுபித்த 'பேமேக்ஸ்' எனும் மருத்துவப் பயன்பாட்டுக்காக உருவாக்கிய ரோபோவை ஹீரோவிடம் காட்டுகிறான். அவனையும் ரோபாட்டிக்ஸ் படிக்கும் கல்லூரியில் சேர சொல்கிறான். ஒரு கட்டத்தில் ஹீரோவுக்கும் அதில் விருப்பம் ஏற்படுகிறது.

ரோபோ யுத்தம்!

அங்கு சேர எதாவது ஒரு கண்டுபிடிப்பை பார்வைக்கு வைக்கவேண்டும். ஹீரோ தான் கண்டுபிடித்த மைக்ரோபாட்டை காண்பித்து அட்மிஷன் பெறுகிறான். அதைப் பார்க்கும் கெரிடெக் மைக்ரோபாட்ஸை விலைக்கு கேட்கிறான் ஆனால் ஹீரோ தர மறுக்கிறான். அன்று இரவு தன் அண்ணனுடன் பேசிக் கொண்டிருக்கும்போது கண்காட்சி நடந்த இடத்தில் தீ விபத்து ஏற்படுகிறது. உள்ளே மாட்டிக்கொண்ட புரொஃபசரை காப்பாற்ற டடாசி உள்ளே செல்கிறான். மறு நொடியே அந்த இடம் வெடித்துச் சிதறுகிறது. டடாசி இறந்து விடுகிறான்.

ஹீரோ கண்டுபிடித்த மைக்ரோபாட் ஒரு திசைநோக்கி நகர்ந்து கொண்டே இருக்க அந்த திசையில் என்னதான் இருக்கிறது என பார்க்கச் செல்கின்றனர் பேமேக்ஸும், ஹீரோவும். அங்கு தான் கண்டுபிடித்த மைக்ரோபாட்ஸை அதிக அளவில் யாரோ உற்பத்தி செய்து கொண்டிருப்பதைப் பார்க்கிறான். இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. தன் அண்ணனைக் அந்த விபத்தில் சிக்க வைத்தது கூட சதியாக இருக்கலாம் என சந்தேகப்படும் ஹீரோ, அதைக் கண்டுபிடிக்க தன் அண்ணனின் ரோபோ மற்றும் 4 நண்பர்களுடன் இணைந்து 'பிக் ஹீரோ 6'ஆக சூப்பர் ஹீரோ பயணத்துக்கு கிளம்புகிறான். அதன் பின் அவன் அந்த மர்மத்தைக் கண்டுபிடித்தானா? ஏன் அது நடந்தது? என்பதைச் சொல்கிறது மீதிக்கதை.

காயம் பட்டால் ஸ்பிரே செய்யவும், சின்னதாக தும்மினாலும் உங்களுக்கு உடம்பு சரியில்லையா? நான் செக் பண்ணட்டுமா? என்று சொல்லும் நர்ஸ் ரோபோவை வைத்துக்கொண்டு ஹீரோ படும் பாடு, அதற்குப் பயிற்சியளித்து சூப்பர் ரோபோவாக மாற்றும் காமெடி எபிசோடு முழுக்க ஆரவராம்தான்.

படம் 'டோக்கியோ ஃபிலிம் ஃபெஸ்டிவெல்', 'அபுதாபி ஃபிலிம் செஸ்டிவல்' என பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது! 

- பா.ஜான்ஸன்