சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வைரமுத்து 40: இன்னும் அந்த வானம் சேதி சொல்கிறது!

வைரமுத்து 40
பிரீமியம் ஸ்டோரி
News
வைரமுத்து 40

படம்: ஸ்டில்ஸ் ரவி

1980, மார்ச் 10. ‘நிழல்கள்’ படத்தில் ‘பொன்மாலைப்பொழுது’ பாடலை எழுதினார் வைரமுத்து.

‘வானம் எனக்கொரு போதிமரம் / நாளும் எனக்கது சேதி தரும்’ என்று தன் முதல் பாடலை வைரமுத்து எழுதி 40 ஆண்டுகள் ஆகின்றன. நாற்பது ஆண்டுகளாக வானம் வைரமுத்துவுக்குச் சேதி தந்துகொண்டுதானிருக்கிறது. ‘பொன்மாலைப் பொழுது’க்குப் பிறகு வைரமுத்து வானத்தில் மழைதான். அந்த வானத்தில் இளையநிலாவும் பொழிந்தது; அந்திமழையும் பொழிந்தது.

இன்னும் அந்த வானம் சேதி சொல்கிறது!
இன்னும் அந்த வானம் சேதி சொல்கிறது!

தமிழ் இலக்கியம் கற்றவர் வைரமுத்து. பழந்தமிழ் இலக்கியச் செழுமை, கிராமத்து வாழ்க்கையனுபவம், திராவிட இயக்கம் - குறிப்பாகக் கருணாநிதி எழுத்தின் மீதான ஈர்ப்பு - இவைதான் வைரமுத்து பாடல்வரிகளுக்கு அடிப்படை என்று சொல்லலாம். ‘கலிங்கத்துப்பரணியை மறைக்கவந்த காரிருளே, புறநானூற்றை மறைக்க வந்த புழுதிக்காற்றே’ என்ற கருணாநிதியின் ‘மனோகரா’ வசனங்களைக் கேட்டுவிட்டு, அரசு நூலகத்துக்குச் சென்று கலிங்கத்துப்பரணியையும் புறநானூற்றையும் தேடியதாக ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’ நூலில் எழுதியிருப்பார் வைரமுத்து.

ஒரு பாடலின் கதையோட்டத்தையும் பாத்திர வார்ப்பையும் தன் பாடல்வரிகளில் கொண்டுவந்துவிடுவார் வைரமுத்து. ‘வேதம் புதிது’ நாயகனும் நாயகியும் வைதீக சனாதனக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

‘கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா / கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா /நாணம் விடவில்லை... தொடவில்லை / ஏனோ விடை இன்னும் வரவில்லை... /அய்யர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா?’ என்று எழுதுவார். ‘அலைகள் ஓய்வதில்லை’யிலோ அதே வைதீகக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனுக்கும் மரபான கிறிஸ்துவப் பெண்ணுக்கும் காதல். ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’வில் ‘கள்வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்’ என்று சாதி, மத அடையாளங்கள் தாண்டிய காதலை எழுதினார்.

இளையராஜா - வைரமுத்து கூட்டணியில் இணையற்ற இரு படப்பாடல்கள் ஆல்பம் என்றால் ‘சிந்துபைரவி’யையும் ‘முதல்மரியாதை’யையும் சொல்லலாம். ஒருவரிக்கதையாகச் சொன்னால் ஓர் ஆணின் குடும்ப உறவுக்கு வெளியே இன்னொரு பெண்ணுடனான நேசம் என்பது இரு படங்களுக்கும் பொது. ‘சிந்துபைரவி’யில் கர்னாடக இசைக்கலைஞன்; ‘முதல் மரியாதை’யிலோ கிராமத்துப் பெரிய மனிதர். கர்னாடக இசைக்கலைஞரின் கலைக்கர்வம், பெண்ணுடனான காதல், வீழ்ச்சி, மீண்டும் எழுச்சி ஆகியவற்றை உணர்ந்துகொள்ள படம் பார்க்கவேண்டியதில்லை; பாடல்களைக் கேட்டாலே போதும்.

‘அம்மி அரைச்சவ கும்மி அடிச்சவ நாட்டுப்புறத்தில சொன்னதப்பா’ என்று தமிழிசைக்கு ஆதரவாக எழும் சிந்துவின் குரல், ‘என்னைப் பார்த்து கோப்பை தள்ளாடும்’ என்ற போதையாட்டப் பாடல், ‘இசைக்கொரு குயில் என்று பேரெடுத்தான் / இருமலைத்தான் இன்று சுரம் பிரித்தான்/மனிதர்கள் இருப்பதை மறந்துவிட்டான் / மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான்’ என்று கலைஞனின் வீழ்ச்சியைச் சொன்ன பாடல் என்று எல்லாம் கவித்துவ உச்சங்கள். ‘மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை’ என்று ஒரே வரியில் ‘முதல் மரியாதை’ கிராமத்துப் பெரிய மனிதரின் வாழ்க்கை வலியைச் சொன்னது வைரமுத்து பாடல்.

பாரதிராஜா தமிழ் சினிமாவை ஸ்டூடியோவில் இருந்து கிராமத்துக்குக் கைப்பிடித்து அழைத்துச் சென்றவர் என்றால், வைரமுத்து கிராமத்து வாழ்க்கையைத் தமிழ் சினிமாப் பாடல்களில் பதியவைத்தவர். ‘காத்தடிச்சா தாங்காதடி மல்லிகைப்பூ மாராப்பு / கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு / அட போடி புள்ள எல்லாம் டூப்பு’ என்பதில் கவித்துவத்தில் இழைந்த கிராமத்துக்குசும்பு இருக்கிறது.

‘பனி விழும் மலர்வனம்’ பாடலுக்கான மெட்டைத் தன்னிடம் இளையராஜா சொன்னபோது தன்மீது தேவதை பூச்சொரிந்ததைப்போல் இருந்ததாக எழுதியிருப்பார் வைரமுத்து.

‘எனக்குச் சம்மதம்

மாலையாய் இருந்தால்

மலராய் இருக்கவும்

பாலையாய் இருந்தால்

மணலாய்க் கிடக்கவும்’

- வைரமுத்துவின் புகழ்பெற்ற கவிதை. அது ‘நினைவெல்லாம் நித்யா’வில் இப்படி மாறியிருக்கும்.

‘வசந்தங்கள் வாழ்த்தும்போது உனது கிளையில் பூவாவேன் / இலையுதிர்காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்.’

இளையராஜா - வைரமுத்து கூட்டணி இணைந்து இயங்கியது ஆறு ஆண்டுகள்தான். ஆனால் பல ஆண்டுகளாய்ப் பாடல்கள் கேட்ட பிரமை தமிழர்களுக்கு. ‘நிழல்களி’ல் ஆரம்பித்த பயணம் 1986, ‘புன்னகை மன்னனி’ல் கடைசிப் புன்னகை உதிர்த்து விடைபெற்றுக்கொண்டது. ஆனால் இந்த ஆறு ஆண்டுகளில் ‘அந்திமழை பொழிகிறது’, ‘விழியில் விழுந்து’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ஈரமான ரோஜாவே’, ‘மௌனமான நேரம்’, ‘பூங்காற்று திரும்புமா’, ‘பூவே பூச்சூடவா’, ‘என்ன சத்தம் இந்த நேரம்’ என்று இசையும் மொழியும் இயைந்து கொடுத்த பாடல்கள் அத்தனையும் ஆன்மாக்குள் ஊடுருவுபவை. இந்தக் கூட்டணி எப்படியாவது மீண்டும் இணையவேண்டும் என்பது இன்றுவரை நிறைவேறாத நிராசையாகவே இருக்கிறது. இளையராஜா - வைரமுத்து இணைய வேண்டும் என்பது தமிழர்களுக்கு எப்போதும் இருக்கும் பேராசை. ஆனால் வைரமுத்துவின் மீள்வருகை நிகழ்ந்தது ‘சின்னச் சின்ன ஆசைகள்’ மூலமாக.

எளிய வரிகள்தான். ஆனால் ‘மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை’, ‘வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை’ என்று தமிழகத்தின் திசையெங்கும் ஆசைகள் பரவின. இப்படி எளிய பாடல்வரிகள் மூலம் கவித்துவ விளையாட்டு நடத்துவது வைரமுத்துவின் இன்னொரு பலம்.

‘மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை’ என்று ஒரே வரியில் ‘முதல் மரியாதை’ கிராமத்துப் பெரிய மனிதரின் வாழ்க்கை வலியைச் சொன்னது வைரமுத்து பாடல்.
வைரமுத்து

எளிமை என்பது வேறு; சாதாரணம் என்பது வேறு. வைரமுத்துவின் எளிமையான பாடல் வரிகள் சாதாரண வரிகளாக இருக்காது. அதில் கவித்துவப் பூச்சு கட்டாயமிருக்கும். ‘சின்னச் சின்ன ஆசை’, ‘கண்ணுக்கு மையழகு’ போன்ற பாடல்கள் கேட்கும்போது எளிய வரிகளாக இருந்தாலும் கவித்துவ ஆழம் கொண்டவை. கூழாங்கற்கள் எளியவைதான். ஆனால் அவை ஆற்றின் ஆழத்தில் திளைப்பவை.

வைரமுத்து, ஏ.ஆர். ரஹ்மான்
வைரமுத்து, ஏ.ஆர். ரஹ்மான்

92-ல் ‘ரோஜா’ வெளியானது. வானத்தில் பொன்மாலைப்பொழுதை இளையராஜா தொடங்கிவைத்தார் என்றால், வனத்தின் ரோஜா நறுமணத்தை ரஹ்மான் தொடர்ந்துவைத்தார். வைரமுத்துவின் மறு உச்சத்தின்போது களமும் காலமும் மாறியிருந்தன. தமிழ் சினிமாவின் வணிகச்சந்தை விரிந்திருந்தது. புதிய புதிய தொழில்நுட்பம், புதிய புதிய இசைக்கருவிகள். உலகமயமாக்கலால் புதிய தொழில்வாய்ப்புகள், புதிய மதிப்பீடுகள் உருவாயின. வைரமுத்துவின் சமகாலப் பாடலாசிரியர்கள் இதை எதிர்கொள்வதற்கு ஆங்கில வார்த்தைகளையும் புரியாத வார்த்தைகளையும் பாடல்களில் நிரப்பினர். வைரமுத்துவோ முடிந்தவரை ஆங்கில வார்த்தைகளைத் தவிர்த்தார். கிட்டத்தட்ட முற்றிலுமாகப் புரியாத வார்த்தைகளைப் புறக்கணித்தார். இந்தக் கால மாற்றத்தை இருவழிகளில் அவர் எதிர்கொண்டார்.

இது அறிவியல் - தொழில்நுட்பகாலம் என்பதை உணர்ந்தவர் அறிவியல் தமிழைப் பாடல்களுக்குள் கொண்டுவந்தார். ‘வாராயோ வெண்ணிலா’வில் இருந்து ‘இளையநிலா பொழிகிறது’ வரை தமிழ்ப்பாடல்களுக்குள் ‘அழகியல் நிலா’ இருந்தது. அதை ‘அறிவியல் நிலா’ ஆக்கினார் வைரமுத்து.

‘அழகிய நிலவில் ஆக்சிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன்’ என்று எழுதினார் (ஜீன்ஸ்). ‘வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும்’, ‘பட்டாம்பூச்சி கால்களைக் கொண்டுதான் ருசி அறியும்’, பூகம்ப வேளையிலும் இரு வான்கோழி கலவிகொள்ளும்’ என்று அறியாத அறிவியல் தகவல்களைப் பாடல்களுக்குள் கொண்டுவந்ததன் மூலம் நவீனமொழியை உருவாக்கினார்.

90களில் வாழ்க்கையின் பழைய மதிப்பீடுகளும் தன் சட்டையுரித்திருந்தன. கல்வியும் வேலைவாய்ப்பும் பெண்களுக்கான சுதந்திர வெளியை அதிகரித்திருந்தன. தன் ஆழ்மனக்கிடக்கைகளைப் பெண்கள் வெளிப்படையாக வெளிப்படுத்தக் காலம் கனிந்திருந்தது. 80களின் காதல் பாடல்களை இரண்டு வரிகளுக்குள் அடக்கிவிடலாம். நாயகன் புணர்ச்சிக்கு அழைப்பான். நாயகியோ ‘எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்’ என்பாள். ஆனால் 90களின் நிலை வேறு. ‘உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே, பூவெடுத்து மலர் மாலையிடு, விழிநீர் தெளித்து வண்ணக்கோலமிடு’ என்று இப்போது எழுத முடியாது என்பதைப் புரிந்துகொண்டார் வைரமுத்து.

ஒரு பாடலின் கதையோட்டத்தையும் பாத்திர வார்ப்பையும் தன் பாடல்வரிகளில் கொண்டுவந்துவிடுவார் வைரமுத்து.

‘நெஞ்சமெல்லாம் காதல் / தேகமெங்கும் காமம் / உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா /காதல் கொஞ்சம் கம்மி / காமம் கொஞ்சம் தூக்கல் / மஞ்சத்தின் மேல் என்னை மன்னிப்பாயா?’ (ஆய்த எழுத்து) என்றும், ‘இன்டர்நெட்டில் ஏ ஜோக் கேட்டால் சரியா தவறா? மாப்பிள்ளை தேர்ந்தெடுத்து சிலநாள் வாழ்ந்து திருமணம் செய்தால் சரியா தவறா?’ (12 பி) என்றும் எழுதினார். காலத்துக்கேற்றவாறு தன்னைப் புதுப்பித்துக்கொள்வதுதான் வைரமுத்துவின் இருப்புக்கான பலம்.

ஷங்கர், மணிரத்னம் சினிமாக்களில் அவர்கள் முன்வைத்த அரசியல், தொடக்கக்கால இடதுசாரி, திராவிட இயக்க சினிமா அரசியலுக்கு நேர்மாறானது. எதிர்முகாமிலிருந்து வந்தவர் என்றாலும் இந்த அரசியலுக்குள் சிக்கிக்கொள்ளாமல் அகப்பாடல்களில் ஆழம் சேர்த்துப் படங்களுக்கு பலம் சேர்த்தார் வைரமுத்து. ‘இருவர்’ படத்தையே உதாரணம் சொல்லலாம். எம்.ஜி.ஆருக்குப் பாடல் எழுத முடியவில்லை என்ற குறையை ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு - இதை உரக்கச் சொல்வோம் உலகுக்கு’ என்றெழுதி ஏக்கத்தைத் தீர்த்துக் கொண்டார். ‘உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே’ - தான் ரசித்த, நேசித்த வசனங்களை எழுதிய கருணாநிதி பாத்திரத்துக்கு வைரமுத்து எழுதிய வசனகவிதை இது.

‘உன்னைப் பார்த்துத் தாய்மொழி மறந்தேன்’, ‘ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை வாராமல் போய்விடுமா? ஒருகண்ணில் கொஞ்சம் வலி வந்தபோது மறுகண்ணும் தூங்கிடுமா?’, ‘என்னவளே என் இதயத்தைத் தொலைத்துவிட்டேன்’, ‘எங்கே எனது கவிதை’, ‘எவனோ ஒருவன் வாசிக்கிறான்’, ‘தெய்வம் தந்த பூவே’ என்று வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் தன் கவித்துவ ஆற்றலை வைரமுத்து நிரூபிக்கத் தவறவில்லை. கிராமத்துப் படங்கள் குறைந்துபோயின என்றாலும் ‘கிழக்குச்சீமையிலே’ என்னும் பட்டிக்காட்டுப் பாசமலரில்

‘அணில்வால் மீசை கொண்ட அண்ணே உன்னை விட்டு, புலிவால் மீசை கொண்ட புருசனோட போய் வரவா’ என்றும் ‘கருத்தம்மா’வில் ‘போறாளே பொன்னுத்தாயி, பொலபொலவென்று கண்ணீர்விட்டு’ என்றும் எழுதி அவ்வப்போது தன் கிராமத்து மொழியைப் புதுப்பித்துக்கொண்டார். கிராமத்துப் பாடல்கள் எழுதுவது என்றால் வைரமுத்துவுக்குள் இருக்கும் சிறுவன் நழுவும் டவுசரைப் பிடித்துக்கொண்டு டயர் ஓட்டக் கிளம்பிவிடுவான்.

வைரமுத்து எழுத வந்த காலகட்டம், அரசியல் அலைகள் ஓய்ந்த காலகட்டம். உடுமலை நாராயணகவிக்கும் பட்டுக்கோட்டைக்கும் கம்யூனிசப் பாடல்கள் எழுதும் வாய்ப்பிருந்தது. திராவிட இயக்க கலை எழுச்சிக் காலகட்டத்தில் பாடல்கள் எழுதிய கண்ணதாசனுக்கும் வாலிக்கும் திராவிடம், பகுத்தறிவு, தமிழுணர்வு ஆகியவற்றை எழுதும் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் தி.மு.க ஆட்சியைப் பிடித்தபிறகு தமிழ் சினிமாவில் திராவிட இயக்கத்தின் குறுக்கீடுகள் குறைந்து, ஒருகட்டத்தில் முற்றிலும் இல்லாமல் போயின. பொதுவுடமைப் படங்களும் எப்போதாவதுதான் வந்தன என்பதால் வைரமுத்துவுக்கு அந்த வாய்ப்புகள் அமையவில்லை. ‘எரிமலை எப்படிப் பொறுக்கும்’, ‘கூவுங்கள் சேவல்களே’, ‘மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்’ என்று கிடைத்த வாய்ப்புகளில் சிவப்பை நிரப்பினார்.

தத்துவம் என்பதற்கு விரிவான அர்த்தம் உண்டு. இந்திய மெய்யியல் தொடங்கி மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம் வரை தத்துவம்தான். ஆனால் தமிழர்கள் தத்துவப் பாடல்கள் என்று புரிந்துவைத்தவை நிலையாமையையும் பற்றறுத்தலையும் சொன்ன ‘போனால் போகட்டும் போடா’, ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா’ பாடல்களை. வைரமுத்துவும் ‘கனவு காணும் வாழ்க்கை யாவும்’, ‘ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்’ என்று குறைந்தளவிலேனும் ‘தத்துவப் பாடல்கள்’ எழுதியிருக்கிறார். இரண்டாம் சுற்றிலோ ‘டேக் இட் ஈஸி’ என்று மாறிய வாழ்க்கை மதிப்பீட்டுக்கேற்பவும் எழுதியிருக்கிறார்.

வைரமுத்து 40: இன்னும் அந்த வானம் சேதி சொல்கிறது!

ராஜா, ரஹ்மான் இருவருடனான வைரமுத்துவின் பயணம்தான் அடையாளத்துக் குரியது என்றாலும் சங்கர் கணேஷ், சந்திரபோஸ், வித்யாசாகர், பரத்வாஜ், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், சந்தோஷ் நாராயணன் என்று கிட்டத்தட்ட எல்லா இசையமைப் பாளர்களுடனும் பயணித்திருக்கிறார். ஏழு தேசிய விருதுகள், ஆறு தமிழக அரசு விருதுகள் அவர் பாடல்களுக்குக் கிடைத்த அங்கீகாரங்கள்.

நாற்பது ஆண்டுகள் கடந்தாலும் நரைக்காத தமிழ் வைரமுத்துவுடையது. வைரமுத்து எழுதியவை பெரும்பாலும் காதல் பாடல்கள். பெரும்பாலான பாடல்களுக்குக் கிட்டத்தட்ட ஒரே சூழல்தான். ஆனால் ஒவ்வொருமுறை பாடலுக்கும் வைரமுத்து புதிதாய்க் காதலித்துப் புதிதாய் எழுதியிருக்கிறார். கற்பனை வளமும் தீராத மொழிக்கிட்டங்கியும் அவருடைய பாடல்களின் பலம். மூன்று தலைமுறை நடிகர்களையும் மூன்று தலைமுறை இயக்குநர்களையும் பார்த்திருக்கிறார். இப்போது அவர் மகன் மதன் கார்க்கியே சக போட்டியாளர். ஆனால் இன்னமும் அவர் களத்தில் இருக்கிறார். சமீபத்திய உதாரணம் ‘செக்கச் சிவந்த வான’த்தில் ‘நீலமலைச்சாரல்.’

வைரமுத்து கவிதைகளுக்கு
இலக்கியத்தில் என்ன இடம் என்பது குறித்த மதிப்பீடுகள் மாறலாம்.

வைரமுத்து கவிதைகளுக்கு இலக்கியத்தில் என்ன இடம் என்பது குறித்த மதிப்பீடுகள் மாறலாம். அவர் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அரசியல் குறித்தும் பலருக்கும் விமர்சன மிருக்கலாம்; வெறுப்பும் இருக்கலாம். ‘செந்தமிழ்நாட்டுத் தமிழச்சியே சேலை உடுத்த தயங்குறியே’ என்று சில பாடல்களில் ஆணாதிக்க அதிகாரமும் ‘திருப்பாச்சி அருவாளைத் தீட்டிக்கிட்டு வாடா வாடா’ என்று சில பாடல்களில் சாதியத்தின் சாயலும் உண்டு என்ற குற்றச்சாட்டுகளைப் பரிசீலிக்கலாம். எப்படியிருந்தபோதும் தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமை வைரமுத்து. மொழியின் அழகுணர்ச்சியைத் தமிழர்கள் முழுதாய் உணர உதவியவை அவர் பாடல்கள். நாற்பது ஆண்டுகளைக் கடந்தும் தமிழர்கள் வைரமுத்துவின் வரிகளுக்காகக் காத்திருக்கிறார்கள் என்பது வரலாறு.