Published:Updated:

தரை டிக்கெட் விமர்சனம் - பரதேசி

தரை டிக்கெட் விமர்சனம் - பரதேசி

பாலா படம்னா கொறவளையைக் கடிச்சுத் துப்புற ஹீரோ... கொடூரத்தின் உச்சத்தை அசால்ட்டா செய்யுற‌ வில்லன்கள்னு கதையே ஒரு மார்க்கமா இருக்கும்ல, அப்படி எதுவும் இல்லாத ஒரு படம்கிறதுதான் ஆச்சரியம்.

ஏங்க... டீஸர்லயே நடிகர்களை அடி வெளுத்துக் கட்டுனாரேனு நீங்க கேட்கிறது நல்லாவே கேட்குது. ஆனா படம் வேற பேசுதுங்க!

இது பாலாவோட சிறந்த படம்.

கதைதான் எல்லோருக்குமே தெரியுமே... சுதந்திரத்துக்குலாம் முன்னாடி 1939 வாக்கில் சாலூர் கிராம மக்கள் கங்காணியின் பசப்பல் வார்த்தையை நம்பி பஞ்சம் பொழைக்குப் பச்சைமலை தேயிலை எஸ்டேட்டுக்குப் போறாங்க. அங்கே இவங்களை எப்படில்லாம் முதலாளி வர்க்கம் உழைப்பையும் மானத்தையும் சுரண்டி காலாகாலத்துக்கும் அடிமையாவே வெச்சிருக்கானுங்கனு கதை போகுது. பி.ஹெச்.டேனியலோட 'ரெட் டீ'ங்கிற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதா டைட்டில்ல காட்டுறாங்க. அது என்னமோ தெரியலை. படம் முடிஞ்சு வர்றப்போ மனசு லைட்டா வலிக்குது! 'இதுல்லாம் நெசமாலுமே ஒரு காலத்துல நடந்துருக்கே...இப்பவும் கண்ணுக்குத் தெரியாம அங்கொண்ணு இங்கொண்ணுமா நடக்குதே'னு ஆதங்கமா இருக்கு. அதுதான் பாலாவுக்கு வெற்றி.

கேமராமேன் செழியனுக்கு இது உலக சினிமாதான். ஜி.வி.பிரகாஷ் தன்னால‌ முடிஞ்ச அளவு சிறப்பா செஞ்சிருக்காரு. அதர்வா,தன்ஷிகா, வேதிகா மட்டும் இல்லை...சின்னச்சின்ன கேரக்டருங்ககூட நல்லாப் பண்ணி இருக்காங்க. அதிலயும் அதர்வாவுக்குப் பாட்டியா வர்ற அந்தக் கருப்பு அப்பத்தா, இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கு. டயலாக் சூப்பரு. 'கடுசுனு பார்த்தா மூலவியாதிக்காரன் பேள்றதுகூட கஷ்டம்தான்!'னு கங்காணி காமெடியாப் பேசியே கவுத்துறதைச் சொல்லலாம்.

பாலாவோட டீஸரைப் பார்த்துட்டு 'பாலாவோட‌ டவுசரைக் கழட்டணும்ரா'னு இணையத்துல கரிச்சுக்கொட்டின நியாயமாரே... முதல்ல‌ படத்தைப் பாருங்க. அப்புறமா உங்க பின்நவீனத்துவ, முன்நவீனத்துவ விமர்சனத்தை பக்கம் பக்கமா எழுதுங்க. தரை டிக்கெட்டு நான் சொல்றேன்யா... பாலாவுக்கு இன்னொரு தேசிய விருது பார்சேல்!