Published:Updated:

தமிழ் சினிமாவின் எல்லையை மாற்றியமைத்த கலைஞர்கள்!

தமிழ் சினிமாவின் எல்லையை மாற்றியமைத்த கலைஞர்கள்!
தமிழ் சினிமாவின் எல்லையை மாற்றியமைத்த கலைஞர்கள்!

தமிழ் சினிமாவின் எல்லையை மாற்றியமைத்த கலைஞர்கள்!

தமிழ் சினிமாவின் எல்லையை மாற்றியமைத்த கலைஞர்கள்!

சினிமா குறித்த பல்வேறு விவாதங்கள் தொடர்ச்சியாக உலகம் முழுக்க இன்னமும் நடந்துக கொண்டே இருந்தாலும், சினிமா என்பது காட்சி மொழி என்கிற அடிப்படை சார்ந்து வேறெங்கும் இத்தனை விவாதங்கள் நடந்ததே இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் தொடர்ந்து அத்தகைய விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், இங்கே நாடகத்தின் நீட்சிதான் சினிமா, இலக்கியத்தின் நீட்சிதான் சினிமா என்கிற கட்டமைப்பு தொடர்ந்து உருவாக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றால், 70 களின் பிற்பகுதியும், எண்பதுகளின் பெரும்பாலான பகுதிகளும்தான். அப்போதுதான், தமிழ் சினிமாவில் உருப்படியான பல்வேறு மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. குறிப்பாக, இயக்குனர் மகேந்திரனும், பாலு மகேந்திராவும் சினிமா சார்ந்த தங்களின் அத்தனை ஆளுமையையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. எப்போதும் வசனங்களால் நிரப்பபட்டுக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை, காட்சிப் பூர்வமாக அணுகியவர் மகேந்திரன். ஆனால் அதற்கான களத்தை இலக்கியத்தில் இருந்து தேர்ந்தெடுத்தார். இது அத்தனை எளிதான காரியமல்ல. இலக்கியத்தை சினிமாவாக, வரி வடிவத்தை, காட்சி வடிவமாக மாற்றுவது என்பது பெரும் சவால் நிறைந்த பணி.

  

மேற்கு வங்கத்தில் நடந்து கொண்டிருந்த இந்த நாவலில் இருந்து சினிமா என்கிற முயற்சி, தமிழில் கே. ராம்நாத் காலத்திலேயே தொடங்கிவிட்டாலும், அதை தொடர்ச்சியாக செய்து, வெற்றியடைந்தவர் மகேந்திரன். 'உதிரிப்பூக்கள்' (சிற்றன்னை), 'முள்ளும் மலரும்' (உமாச்சந்திரனின் நாவல்), 'பூட்டாத பூட்டுகள்' (பொன்னீலன்), 'சாசனம்' (கந்தர்வன்) என்று தொடர்ச்சியாக இலக்கியத்தை சினிமாவாக பெரும் ஆளுமையோடு உருவாக்கியவர்.

முப்பது ஆண்டுகளில் பனிரெண்டு படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும், அதில் பெரும்பாலான படங்கள், தமிழின் ஆகச் சிறந்த படங்களளின் பட்டியலில் இருப்பவை. குறிப்பாக 'உதிரிப்பூக்கள்', தமிழ் சினிமாவின் தரத்தை, உலகத் தரத்திற்கு உயர்த்தியது. ஒரு நாவலை அல்லது சிறுகதையை சினிமாவாக எடுக்கலாம் என்று இயக்குனர் தேர்ந்தெடுக்கும்போதே, அதில் எந்தெந்த பகுதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுப்பதை விட, எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்கிற தெளிவு இருப்பது மிக அவசியம்.

பஷீரின் 'மதிலுகள்' நாவலைத் திரைப்படமாக்க, அடூர் அவரை அணுகியபோது, பஷீர் அடூரிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறார். ''இந்த கேள்விக்கு நீங்கள் சரியான விடை சொன்னால், இந்தக் கதையைப் படமாக்க உங்களுக்குக் கொடுத்துவிடுகிறேன்'' என்று வாக்களிக்கிறார். அவர் கேட்ட வினா, 'இந்த நாவலில் மதிலுக்கு இந்தப் புறம் இருக்கும் ஆண், எதிப்புறம் இருக்கும் பெண்ணை அவளின் வாசத்தை வைத்தே கண்டுபிடிக்கிறான், இதை நீங்கள் எப்படி காட்சிப்படுத்துவீர்கள்?' என்று கேட்கிறார், அதற்கு அடூர், இந்த காட்சி என் படத்தில் வரவே வராது என்கிறார். காரணம், இந்த காட்சி இலக்கியத்திற்கே உரியதே. அதை காட்சிப்படுத்தாமல் இருப்பதே அந்த இலக்கியத்திற்கு நாம் செய்யும் மரியாதை என்கிறார். பஷீர் உடனே தன்னுடைய நாவலை படமாக்கும் உரிமையை அடூருக்கு கொடுக்கிறார் (நன்றி. எஸ். ராமகிருஷ்ணன்)

 

தமிழ் சினிமாவின் எல்லையை மாற்றியமைத்த கலைஞர்கள்!

  தமிழில் இப்படியான அற்புதங்களை மகேந்திரன் மட்டுமே நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். 'முள்ளும் மலரும்" திரைப்படம் நாவலாக எழுதப்பட்டபோது, அதில் தன்னைக் கவர்ந்த, சுய கவுரவம் கொண்ட விஞ்ச் ஆப்ரேட்டர் காளி கதாபாத்திரத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு, திரைப்படத்திற்கு தேவையான, சில காட்சிகளையும், நாவலில் இருந்து மாற்றியமைக்கிறார் மகேந்திரன். அதில் மிக முக்கியமான காட்சி, நாவலில் காட்டுக்குள் புலி அடித்துதான், காளி கதாபாத்திரத்திற்கு கை போனது என்று இருக்கும். ஆனால் மகேந்திரன், அதை லாரி ஏறி, அவனுக்கு கைபோனது என்று மாற்றியிருப்பார். சினிமாவின் சாத்தியக்கூறுகளையும், இலக்கியத்தின் சாத்தியக்கூறுகளையும், முழுமையாக அறிந்திருக்கவில்லை என்றால், இந்த நாவலை படமாக எடுப்பதற்கு மகேந்திரனுக்கு யோசனையே வந்திருக்காது. ஆனால் இரண்டிற்குமான, வேறுபாட்டை, நாவல் ஒரு மொழியின் ஆளுமையை காட்டுமிடம், சினிமா, காட்சிமொழியின் ஆளுமையைக் காட்டுமிடம் என்று தெரிந்து வைத்திருந்ததால் மட்டும்தான், அவரால் தொடர்ச்சியாக நாவலை படமாகக் கொடுக்க முடிந்தது.

இதற்கு இன்னும் ஓர் உதாரணத்தை 'முள்ளும் மலரும்' படத்திலேயே சுட்டிக் காட்டலாம். காளி கதாபாத்திரத்திற்கு கை போன பிறகு, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் அந்த காட்சி, தமிழ் சினிமா அதுவரை கண்டிராத காட்சி ஆளுமை என்றே சொல்லலாம். காளியின் தங்கைக்கு, இந்த உண்மை தெரியாது, காளியின் கைகளை அவள் தடவிப்பார்க்கும்போதுதன், அவனுக்கு கை இல்லை என்கிற உண்மை அவளுக்குத் தெரியும். அதுவரை இந்த மாதிரியான காட்சிகள் தமிழ் சினிமாவில் வரும்போது, பார்வையாளன் உட்பட எல்லாரும் அழுது தீர்த்து, திரையரங்கமே இழவு வீடு போல் காட்சியளிக்கும். தவிர வசனங்களால் பார்வையாளனின் நெஞ்சை துளைத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில், அந்த இடத்தை, அந்த இழப்பை, அனாயசமாக படம் கடந்து போகும். ஆனால் அந்தக் காட்சி ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தை, காட்சி பிம்பங்களால் இயக்குனர் ஏற்படுத்தியிருப்பார். அதுதான் மகேந்திரனின் ஆளுமை.

 

தமிழ் சினிமாவின் எல்லையை மாற்றியமைத்த கலைஞர்கள்!

'உதிரிப்பூக்கள்' படத்தை, வேறுவிதமாகவும் அன்றைய தமிழ் சினிமா சூழலுக்கு ஏற்றமாதிரி மாற்றி திரைக்கதை அமைத்திருக்க மகேந்திரன் முயற்சித்திருக்கலாம். ஆனால் மகேந்திரன், 'சிற்றன்னை' என்கிற சிறுகதையை மிக நேர்மையாக காட்சிப்படுத்தியிருப்பார். கதையின் நாயகனாக நடித்திருப்பவரை, கொடூர வில்லனாகக் காட்டாமல், ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதிற்குள்ளும் இருக்கும், இன்னொரு பக்கத்தைக் காட்டியிருப்பார்.

வன்முறை, ஆபாசம், குத்துப்பாட்டு என்று எல்லா மோசமான விசயங்களையும் இந்தப் படத்தின் கதையோடு தொடர்புபடுத்தி மகேந்திரன் எடுத்திருக்கலாம். ஆனால் மகேந்திரன் அதைத் தவிர்த்து, சினிமாவிற்கு மிக நேர்மையாக நடந்து கொண்டார். ஓர் இலக்கியம், காட்சிப் பூர்வமாக விரிந்து, ஆகப் பெரிய தாக்கத்தை, சினிமா அனுபவத்தை ஏற்படுத்திருக்கிறது என்றால் அது மகேந்திரனின் படங்களில் நிகழ்ந்த அருமையான ரசவாதம். மகேந்திரனின் பெரும்பாலான படங்களில் மிக மெல்லிய ஒரு எதிர்கேள்வியை கட்டமைத்துக் கொண்டேயிருப்பார். குடும்ப உறவுகளை மிக பிரம்மாண்டமாக காட்சிப்படுத்திக் கொண்டே, அதன் போலியான கட்டமைப்பை எதிர்கேள்வி கேட்ட வேறெந்த இயக்குனரையும், தமிழில் பார்க்க முடியாது. அது தமிழில் இரண்டு பேருக்கு மட்டுமே கைவைந்த கலை, அதில் ஒருவர் மகேந்திரன், இன்னொருவர் பாலு மகேந்திரா.

பாலு மகேந்திரா புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு தொழில்நுட்பத்தைப் படித்துவிட்டு, சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து, அதற்கான தேசிய, மாநில விருதுகளையும் பெற்று, பின்னர் திரைப்பட இயக்குனராக அவதாரம் எடுத்தவர். உலக சினிமாவிற்கு தமிழ் சினிமா கொடுத்த கொடை என்றாரல், இரண்டு படங்களை கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். ஒன்று 'உதிரிப்பூக்கள்', இன்னொன்று 'வீடு'.

'வீடு' திரைப்படம், இந்தியாவில் வாழும், நடுத்தர வர்க்கத்தின் பிரச்னைகளையும், இந்த நாட்டின் அரசியலையும் மிக அனாயசமாக சாடிய படம். எந்த ஒரு படைப்பிற்கும் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை, ஒன்று அதன் வடிவம், இன்னொன்று அதன் உள்ளடக்கம். உள்ளடக்கம் எத்தனை சிறப்பாக இருந்தாலும், அதனை சிறப்பான வடிவத்தில் வெளிப்படுத்தவில்லை என்றால், அந்தப் படைப்பு வாசகனை, பார்வையாளனை அத்தனை வீரியத்தோடு சென்று சேராது.
 
பாலு மகேந்திராவின் 'வீடு' திரைப்படம், இந்த வடிவம், உள்ளடக்கம் இரண்டையும் எப்படி சிறப்பாக ஒரு படத்தில் கையாளலாம் என்பதற்கு சிறந்த உதாரணம். சினிமா என்பது ஒரு காட்சி மொழி என்பதை தமிழில் மிக சிறப்பாக உணர்ந்தவர் பாலு மகேந்திரா.

'வீடு' திரைப்படத்தில் ஒரு காட்சியை அதற்கு உதாரணமாக சொல்லலாம். வீட்டில், பெரியவர் நுழைந்தவுடன், துண்டால் தன்னுடைய முகத்தை துடைத்துக் கொள்வார், அவருடைய பேத்தி ஓடிச் சென்று அவருக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கும். இந்த இடத்தில் பாலு மகேந்திர நினைத்திருந்தால் நிறைய வசனத்தைப் பயன்படுத்தியிருக்கலாம். அதுவரை தமிழ் சினிமாவில் காட்சியாகக் காட்டிவிட்டு இப்படி வசனத்தின் மூலம் பார்வையாளனுக்கு சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஸ்ஸ்ஸ்ஸ்...ப்பா... என்ன வெயில், ஓடிப் போய் கொஞ்சம் தண்ணி கொண்டு வாம்மா, என்று இந்த இடத்தில் எந்த வசனமும் வராது, காட்சிகளால் பார்வையாளனுக்கு ஒரு சம்பவத்தை புரியவைக்க முடியுமென்றால் அங்கே வசனத்திற்கு என்ன வேலை. காரணம் இது காட்சிப் பிம்பங்களால் கதைசொல்லும் உத்தியை அடிப்படையாகக் கொண்ட கலை. இங்கே வசனங்கள் ஒதுங்கி நின்றி கைக்கட்டி வேடிக்கை பார்க்க வேண்டும், எப்போது தவிர்க்க முடியாமல், அதன் பங்களிப்பு தேவைப்படுகிறதோ, அப்போது வசனம் உள்ளே வந்தால் போதுமானது.

இதே 'வீடு' திரைப்படத்தில் இன்னுமொரு காட்சியும், வெளியில் வரும் பெரியவர், மேகத் திரளைப் பார்த்துவிட்டு, உள்ளே சென்று குடையை எடுத்துக் கொண்டு வெளியில் செல்வார். இதெல்லாம் சினிமாவை, அதன் அடிப்படையை தெரிந்தவர்கள் நிகழ்த்திக் காட்டக் கூடிய மாயாஜாலங்கள். வெறும் வடிவத்திற்காக மட்டுமல்ல, இந்த திரைப்படம் இன்னமும் பேசப்படுவது, நடுத்தரவர்க்கத்தின் ஆசைகளை, வாழ்வாதாரத்தை எப்படி அரசு என்றும் எந்திரமும், அதன் பணியாளர்களும் தங்களுடைய கோரப்பற்களால் சீரழிக்கிறார்கள் என்பதை மிக எதார்த்தமாக இயக்குனர் காட்சிப்படுத்தியிருப்பார்.

 

தமிழ் சினிமாவின் எல்லையை மாற்றியமைத்த கலைஞர்கள்!

மகேந்திரனும், பாலு மகேந்திராவும் தமிழ் சினிமாவின் வரையறுக்கப்பட்ட எல்லையை மறு பரிசீலனைக்குட்படுத்தி அதன் எல்லைகளை விரிவுபடுத்தியவர்கள். சினிமாவின் அடிப்படை எது, எது உண்மையாகவே சினிமா என்கிற அடைமொழிக்குள் வருவதற்கான தகுதி படைத்தது என்கிற வரையறையை, பேசிக்கொண்டிருக்காமல், தங்கள் படங்களின் வழியே கட்டமைத்தவர்கள். எல்லா கலைகளும் சங்கமிக்கும் இடம் இது, இதன் ஆகச்சிறந்த சாத்தியக்கூறுகளை, எந்தவித சமரசங்களும் இல்லாமல் மக்களிடையே எடுத்துச் சென்றவர்கள் இந்த இரண்டு இயக்குனர்களும்.

பேசும் படங்கள் வந்தபிறகுதான், சினிமாவில் சப்தங்களும், வசனங்களும் அதிகமாக இடம்பெறத் தொடங்கின. வார்த்தைகள் இல்லாமல் படங்களே இல்லை, இசையில்லாமல், பாடல்கள் இல்லாமல் சினிமா முழுமை பெறுவதே இல்லை என்கிற மாயநிலையை தங்களின் சினிமா மொழியாளுமையால் எதிர்கேள்வி கேட்டவர்கள், மகேந்திரனும், பாலு மகேந்திராவும்.

குறிப்பாக இந்த இருவரின் படங்களிலும் பயன்படுத்தப்படும் இசை குறித்த பார்வை மிக முக்கியமானது. மௌனமே எல்லா சப்தங்களையும் விட, வாத்தியக் கருவிகளில் இருந்து இருந்து சன்னமான ஒளியை விட, ஆக சிறந்த இசை என்பதை தமிழ் சினிமாவிற்கு உணர்த்தியவர்கள் இவர்கள். பாலு மகேந்திராவின் எல்லா படங்களிலும், இசை ஏதோ வெகு சில இடங்களில் தான் ஒலிக்கும். அதுவும், அந்த காட்சியை அழகுபடுத்த, அதன் தாக்கத்தை பார்வையாளனுக்கு சரியாகக் கொண்டு சேர்க்க மட்டுமே இசை பயன்படுத்தப்பட்டிருக்கும். எத்தனை பெரிய அளவில் இசையின் சாத்தியக்கூறுகளை அறிந்திருந்தாலும், பாலு மகேந்திரா 'வீடு' திரைப்படத்தில் இளையராஜாவின் 'ஹவ் டு நேம் இட்' என்கிற இசைத் தொகுப்பிற்கு மயங்கி, அதைத் தன்னுடைய படத்தில் பயன்படுத்திக் கொள்ள விழைந்தார். ஆனால், இந்த இசை தவிர்த்த 'வீடு' திரைப்படம்தான் உண்மையாகவே ஆகச் சிறந்ததாகவே இருக்கும். வீடு திரைப்படத்திற்கு திருஷ்டிப் போட்டு என்றால், அது இசைதான். இதுதான் கலைஞர்களின், சினிமா மொழியின் முரண்பாடுகள். இசையின் ஆளுகையை மிக நேர்த்தியாக தெரிந்திருந்த பாலு மகேந்திரா, தன்னுடைய மாஸ்டர் பீஸ் திரைப்படத்தில் அதைக் கொஞ்சம் தவறவிட்டிருந்தார்.

மகேந்திரன், பாலு மகேந்திராவை தவிர்த்து தமிழ் சினிமாவை கட்டமைக்க முடியாது. அதன் வரலாற்றைப் பூர்த்தி செய்ய முடியாது. உலக அரங்கில் யாராவது நீங்கள் என்ன சினிமா எடுத்துக் கிழித்தீர்கள் என்று கேட்டால், அதற்கு நம்மிடையே இருக்கும் பதில்களில் ஒன்று, மகேந்திரனும், பாலு மகேந்திராவும். இவர்கள் இருவரையும், சினிமாவின் நூற்றாண்டைக் கொண்டாடும் இந்த வேளையில் தமிழ் சினிமா கலைஞர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருக்க வேண்டும். இல்லையென்றால்,  இது நூற்றாண்டுக் கொண்டாட்டமா? இல்லை வெற்று அரசியல் கொண்டாட்டமா என்கிற கேள்வியை எதிர்கால திரைப்பட ரசிகன், கலைஞர்கள் என எல்லார் மனத்திலும் ஆழமாக பதியவைத்துவிடும்.

- அருண் மோ.
    

அடுத்த கட்டுரைக்கு