Published:Updated:

கதை கதையாம் காரணமாம்....

Vikatan Correspondent
கதை கதையாம் காரணமாம்....
கதை கதையாம் காரணமாம்....

திருட்டு வி.சி.டி என்றாலே பஞ்சாயத்துதான். ஆனால் இப்போது திருட்டு வி.சி.டி பற்றிய ஒரு படம் பஞ்சாயத்தைக் கிளப்பியுள்ளது. கவிஞர் பா.விஜய் தனது ட்விட்டர் அக்கவுன்ட்டில் 'ஒரு சி.டி 30 ரூபாய்’ என்கிற புதுப் படத்தின் ஸ்டில்களை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து பத்திரிக்கையாளர் யுவகிருஷ்ணா, 'இந்தப் படத்தின் கதை தனது 'அழிக்கப் பிறந்தவன்’ என்ற நாவல்’ என்றும் 'தனக்குத் தெரிவிக்காமல் இந்தக் கதையைப் படமாக்கியுள்ளனர்’ என்றும் அவரது வலைதளத்தில் எழுதியிருந்தார். பா.விஜயிடம் இது குறித்துக் கேட்டபோது...

 

கதை கதையாம் காரணமாம்....

''இந்தப் படத்தின் கதையை ராகேஷ் என்பவர் எழுதி இயக்கியிருக்கிறார். கோவிந்த் என்ற எனது நண்பர்தான் தயாரிப்பாளர். மே மாதம் படம் ரிலீஸ். திருட்டு வி.சி.டி தொடர்பான உலகம் ஒரு தனி உலகம். அந்த உலகம் எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதைக் காட்டும் படமாக இது இருக்கும். இப்போது நீங்கள் வரும்போதுதான் நண்பர் யுவகிருஷ்ணாவிற்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தேன்'' என்றவரிடம்,

''அந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் போலவேதானே நீங்கள் வெளியிட்ட படத்தின் ஸ்டில்கள் இருக்கின்றன?'' என்றேன்.

''ஒரு படத்தின் ஸ்டில்ஸைப் பார்த்துக் கதையை முடிவு செய்ய முடிந்தால், யாரும் சினிமாவே எடுக்க முடியாது. நான் யுவகிருஷ்ணாவின் அந்த நாவல் வெளிவந்தபோதே படித்துவிட்டு அவருக்கு போன் போட்டுப் பாராட்டினேன். ஆனால் இது அந்தக் கதை அல்ல.

கதை கதையாம் காரணமாம்....

இயக்குநர் ராகேஷ் 30-க்கும் மேற்பட்ட கதைகளைச் சொன்னார். இந்தக் கதை எனக்குப் பிடித்ததால் ஒப்புக்கொண்டேன். யுவகிருஷ்ணாவின் நாவலைத் தெரியாதவன் என்றால்கூட, இயக்குநர் சொன்னதை நம்பி ஒப்புக்கொண்டேன் என்று சொல்லலாம். நான் நாவலை ஏற்கெனவே படித்தவன் என்பதால், அந்தக் கேள்வியும் அடிபட்டுப்போகிறது. ஜெயமோகனின் 'உலோகம்’ நாவலைப் படம் ஆக்குவதற்கான உரிமையை வாங்கிவைத்துள்ளேன். அப்படி இருக்கும்போது 'அழிக்கப் பிறந்தவன்’ நாவலைப் படமாக்குவது என்று முடிவு செய்தால், யுவகிருஷ்ணாவிடம் பேசி ரைட்ஸ் வாங்க மாட்டேனா? இதற்கு மேலும் அவர் சந்தேகப்பட்டார் என்றால், ஃபர்ஸ்ட் காப்பி ரெடியானதும் அவருக்குப் போட்டுக் காட்டுகிறேன். அதற்குப் பிறகு அவர் சொல்லட்டும்'' என்றார்.

யுவகிருஷ்ணாவிடம் கேட்டபோது, '' அவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் 'இந்தப் படத்தின் கதை உங்கள் கதை அல்ல’ என்று சொல்லியிருக்கிறார். ஒரே கதைக் களம் என்றால், என் நாவலில் வரும் கேரக்டர்களுக்கு பென்சில் ஆர்ட் செய்ததைப்போல எப்படி வரும் என்று கேள்வி எழுப்பி நானும் பதில் அனுப்பியுள்ளேன்'' என்றவர் ''பத்திரிக்கையாளராக உள்ள எனது கதைக்கே இப்படியென்றால், எந்தப் பின்னணியும் இல்லாத எளிய இளம் உதவி இயக்குநர்களை நினைத்தால் கவலையாக உள்ளது'' என்று முடித்தார்.

திருட்டு வி.சி.டி பற்றிய கதையிலேயே காப்பி சர்ச்சையா? அவ்வ்வ்வ்!

- செந்தில்குமார்