Published:Updated:

“மகளிர் மட்டும்” சினிமாக்கள்!

“மகளிர் மட்டும்” சினிமாக்கள்!
“மகளிர் மட்டும்” சினிமாக்கள்!

பாலிவுட்டில் இப்போது பெண்களைக் கொண்டாடும் டிரெண்ட் போல. பாலிவுட்டின் டாப் இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் தயாரிப்பில் விகாஷ் பால் இயக்கத்தில் வந்திருக்கும் படம் 'க்வீன்’. நடிப்பழகி கங்கனா ரணாவத்... அதிரடி.

“மகளிர் மட்டும்” சினிமாக்கள்!

கட்டுப்பெட்டியான பஞ்சாபிக் குடும்பத்துப் பெண்ணான கங்கனாவைப் பெண் பார்த்து, பெற்றோருக்காக ஓகே சொல்கிறார் ராஜ்குமார் ராவ். (போன வருடம் வசூலில் கலக்கிய 'கய் போ சே’ படத்தின் மூன்று ஹீரோக்களில் அம்மாஞ்சியாய் வருவாரே... அவரேதான்!) திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னார் கங்கனாவை காபி ஷாப்புக்கு வரவழைத்து, 'உன்னை எனக்குப் பிடிக்கவில்லை’ என்கிறார். பக்குவமாய் இருவரின் லைஃப்ஸ்டைலும் ஒத்துப்போகாது என எடுத்துச் சொல்லி கல்யாணத்தை நிறுத்தியும்விடுகிறார்.  கங்கனா ஒரு முடிவெடுக்கிறார்.  திருமணம் நடந்திருந்தால் ஹனிமூனுக்குச் செல்வதாகத் திட்டமிட்டிருந்த பாரீஸுக்கும் ராஜ்குமாருக்கு பிடித்த ஃபாரின் லொக்கேஷனான ஆம்ஸ்டர்டம் நகருக்கும் பெற்றோரிடம் போராடி அனுமதி வாங்கிப் புறப்பட்டுச் செல்கிறார். அங்கே சிறகு விரிக்கத் தொடங்குகிறது அவருக்கான உலகம். மன ஆறுதலுக்காகக் கிளம்பியவரின் வாழ்க்கையை அந்த டூர் மாற்றிப்போடுகிறது. தன்னம்பிக்கை மிக்க பெண்ணாக அந்தப் பயணம் அவரது வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப்போடுவது எப்படி என்பதே படத்தின் பிற்பாதிக் கதை. படம் 11 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மார்ச் 7-ல் ரிலீஸானது. இந்த வார கலெக்ஷன் நிலவரம் 50 கோடியை நெருங்கிவிட்டது.

போன வாரம் 'குலாபி கேங்’ மற்றும் 'குலாப் கேங்’ என இரண்டு படங்கள் ரிலீஸாகின. 'குலாபி கேங்’ படம் வடக்கில் கலக்கிய 'குலாபி கேங்’ என்ற நிஜமான பெண்கள் அமைப்பைப் பற்றியும் அதன் தலைவியான சம்பத் பால் தேவியைப் பற்றியும் பேசிய டாக்குமென்ட்ரி. 'குலாப் கேங்’ படமானது மாதுரி தீட்சித்- ஜூஹி சாவ்லா நடிப்பில் வெளியான ஆக்ஷன் படம். எதிர்பார்த்த அளவுக்குப் படம் பேசப்படாவிட்டாலும் முன்னாள் கனவுக்கன்னிகள் மாதுரி-ஜூஹிக்காக கலெக்ஷன் காட்டியது.

“மகளிர் மட்டும்” சினிமாக்கள்!
“மகளிர் மட்டும்” சினிமாக்கள்!

'பேரலல் சினிமா’ புகழ் நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸான 'லட்சுமி’ படம் இந்தியாவில் அதிகம் பேசப்படாத பெண் குழந்தைகள் கடத்தல் பற்றிப் பேசியது. உண்மைக்கு அருகிலிருந்து காட்சிப்படுத்துகிறேன் பேர்வழி எனப் படத்தை எதார்த்தமாக காட்ட நினைத்ததன் விளைவாக சென்ஸார் போர்டில் ஏகப்பட்ட கட்கள் வாங்கிய பிறகே படம் ரிலீஸ் ஆனது. நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் மல்ட்டிஃபிளெக்ஸ் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனாலும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ஆனாலும் கலிஃபோர்னியாவில் நடந்த சர்வதேசப் படவிழாவில் பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற படமாக விருதினை அள்ளியது. 'அதற்கு முக்கியக் காரணம் படத்தை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தன் 'பீயிங் ஹியூமன்’ என்ற தன் சொந்த என்.ஜி.ஓ மூலம் புரொமோட் செய்திருந்ததுதான்’ என்றும் சிலர் சொல்கிறார்கள்.

சந்தடி சாக்கில் 2012-ல் பல உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படமான 'தி வேர்ல்டு பிஃபோர் ஹெர்’ (அவள் முன்னால் இருக்கும் உலகம்) படத்தை பி.வி.ஆர் தூசு தட்டி நாடெங்கிலும் உள்ள தங்கள் தியேட்டர்களில் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் செய்தது. ஃபெமினா அழகிப் போட்டிக்குத் தயாராகும் பெண்களையும் விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்தும் பெண்களுக்கான 'துர்க்க வாஹினி பெண்கள் முகாம்’ இடத்தில் பயிற்சி பெறும் பெண்களையும் மாறி மாறிக் காட்சிப்படுத்தி இருக்கிறது. 'காந்திஜியை முற்றிலும் வெறுக்கிறேன்’ என்ற இந்தப் படத்தின் கோபமான பேச்சு டாக்குமென்ட்ரி படத்தை பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. இந்த ஒரு படத்தின் டீஸர் மற்றும் விமர்சனங்களை மட்டுமே பார்க்க முடிந்தது. மொத்தத்தில் மார்ச் மாதம் பெண்களுக்கான ஸ்பெஷலாக பாலிவுட் கொண்டாடியதாகவே தோன்றுகிறது!

- ஆர்.சரண்