Published:Updated:

இயக்குநர்கள் என்ன நினைக்கிறாங்கனே புரியலை!

இயக்குநர்கள் என்ன நினைக்கிறாங்கனே புரியலை!
இயக்குநர்கள் என்ன நினைக்கிறாங்கனே புரியலை!

நாலு சீன் நடித்தாலும், நச்சென நடித்து மனதில் பதியும் நடிகர்களில் ஒருவர் 'ஆடுகளம்’ முருகதாஸ். 'குக்கூ’வைத் தொடர்ந்து 'அஞ்சல’, 'ஈட்டி’, இயக்குநர் வெற்றிமாறனின் படம் என பிஸியாக இருந்தவரிடம், 'என்ட்ரி முதல் இன்று வரை’ பேசினேன்.

 

இயக்குநர்கள் என்ன நினைக்கிறாங்கனே புரியலை!

''பாண்டிச்சேரிக்குப் பக்கத்தில்  அரியாங்குப்பம்தான் சொந்த ஊர். ஸ்கூல் படிக்கிறப்பவே நாடகத்துல நடிக்கிறது, ஊர்த் திருவிழாவில் 'ஆடலும் பாடலும்’ நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடுறதுமா இருந்துட்டேன். இப்படி நடிப்பு மேல இருந்த ஆர்வத்திலேயே படிப்பு ஏறலைனு பத்தாவதோட நின்னுட்டேன். ஊர்ல பிளம்பர், வயரிங்னு கிடைக்கிற எல்லா வேலையும் பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்புறம் பாண்டிச்சேரியிலேயே குழந்தைகளுக்கான நாடக ட்ரூப்புல சேர்ந்து, நடிச்சுட்டு இருந்தேன். 'அப்படியே சினிமாவிலேயும் ஒரு ரவுண்டு அடிப்போமே?’னு சென்னைக்கு வண்டி ஏறிட்டேன். இங்கே வந்து, ரெண்டே மாசம்தான் கூத்துப்பட்டறையில இருந்தேன். அப்போ 'படுகளம்’கிற நாடகத்தைப் பார்க்க இயக்குநர் தரணி சார் வந்திருந்தார். அந்த நாடகத்தைப் பொருத்தவரைக்கும் ஒரே நடிகர்தான் ரெண்டு, மூணு கேரக்டரா மேக்கப் மாத்தி நடிப்பாங்க. நாடகத்துல நான் பார்வை இல்லாதவரா, நரிக்குறவரா, வேலைக்காரனா மூணு கேரக்டர்ல நடிச்சேன். அதுல நான் நரிக்குறவரா நடிச்சது தரணி சாருக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. 'கில்லி’ படத்துல 'ஆதிவாசி’ கேரக்டர்ல நடிக்கவெச்சார். சினிமாவில் என்னுடைய முதல் என்ட்ரி அதுதான்.

இயக்குநர்கள் என்ன நினைக்கிறாங்கனே புரியலை!

'கில்லி’ படத்துக்கு அப்புறம் ரெண்டு வருஷம் வாய்ப்பே இல்லை. அப்புறம் 'புதுப்பேட்டை’யில சின்ன ரோல்... அந்தச் சமயத்துல சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாம பொட்டுக்கடலையைத் தின்னுட்டுப் பொழுதை ஓட்டிடுவேன். ஆனா, 'இப்படியே வாழ்க்கை போயிடுமோ?’னு நினைச்சுட்டு இருந்த சமயத்துலதான் 'ஆடுகளம்’ படமும், அடுத்து வெளியான 'மௌனகுரு’ படமும் எனக்கு திருப்பத்தைக் கொடுத்துச்சு. ஆனாலும் பாருங்களேன். 2004-ல இருந்து, இப்போ வரைக்கும் 15 படங்களில்தான் நடிச்சிருக்கேன். எனக்கும் நிறையப் படங்களில் நடிக்கணும், நல்ல நடிகன்னு பெயர் வாங்கணும்னு ஆசைதான். ஆனா, இங்கே இருக்கிற இயக்குநர்கள் என்னை எப்படி பார்க்குறாங்கனு புரிய மாட்டேங்குது. வெற்றிமாறன், சாந்தகுமார்னு நான் நல்லா பழகின இயக்குநர்கள் பணம், புகழுக்கு ஆசைப்படாம வருஷத்துக்கு ஒண்ணு, ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம்னு எடுக்குறாங்க. அவங்களுக்குத்தான் என்னை எப்படிப் பயன்படுத்திக்கலாம்னு புரியுதே தவிர, மத்த இயக்குநர்கள் ஒரு கேரக்டரை ஃபிக்ஸ் பண்ணி, அதுல 'முடிஞ்ச அளவு காமெடி பண்ணுங்க’னு சொல்லிடுறாங்க. கடைசி வரைக்கும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாவோ, காமெடி நடிகனாவோ நடிச்சுட்டுப் போற ஐடியா எனக்கு இல்ல. ஹீரோ, ஹீரோயினுக்கு அப்பாவா, தாத்தாவா நடிக்கவும் நான் ரெடியாதான் இருக்கேன். மற்றபடி, ஒரு முக்கியமான விஷயத்தை உங்களுக்குச் சொல்றேன். வர்ற ஏப்ரல் 27-ம் தேதி எனக்குக் கல்யாணம். அரேஞ்சுடு மேரேஜ்தான். இப்போதான் மேடம்கிட்ட கொஞ்ச கொஞ்சமாப் பேசி லவ்வை டெவலப் பண்ணிக்கிட்டு இருக்கேன். அவங்க ரொம்ப அப்பாவி. என்னுடைய படங்களைப் பார்க்கும்போது 'என்னங்க தண்ணி அடிக்கிறீங்க? இப்படி அடி வாங்கிக்கிட்டு இருக்கிறீங்க?’னு எல்லாமே நிஜமா நடக்கிறதாகவே நினைச்சுடுறாங்க!''

வாழ்த்துகள் பாஸ்!

- கே.ஜி.மணிகண்டன்