Election bannerElection banner
Published:Updated:

நீ எங்கே என் அன்பே - சினிமா விமர்சனம்

நீ எங்கே என் அன்பே - சினிமா விமர்சனம்
நீ எங்கே என் அன்பே - சினிமா விமர்சனம்

நீ எங்கே என் அன்பே - சினிமா விமர்சனம்

'நீ எங்கே என் அன்பே?’ என கணவனைத் தேடி அலையும் ஒரு பெண்ணின் கதை!

அமெரிக்காவில் இருந்து ஹைதராபாத்துக்கு வருகிறார் நயன்தாரா. இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து ஹைதராபாத் வந்த தன் கணவனைக் காணவில்லை என்று புகார் கொடுக்கிறார். தன் கணவரை யாரோ கடத்திச் சென்றுவிட்டார்கள் என்று அறிந்து, முஸ்லிம் இமாமிடம் உதவி கேட்கிறார். அவருக்கு உதவ முன்வரும் இமாமும், சபல இன்ஸ்பெக்டரும் கொல்லப்படுகிறார்கள். நயனைக் கொல்லவும் சதி நடக்கிறது. நயனின் கணவர் யார், எதற்காகக் கடத்தப் பட்டார், யார் கடத்தினார்கள்? என்பது திக்... திக்... க்ளைமாக்ஸ்!

நீ எங்கே என் அன்பே - சினிமா விமர்சனம்

இந்தியில் ஹிட்டடித்த 'கஹானி’ படத்தை சில மாற்றங்களோடு தெலுங்கிலும் தமிழிலும் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் சேகர் கமூலா. ஹீரோயினை மட்டுமே சுற்றிச் சுழலும் கதை. துளியும் கிளாமர் இல்லாமல், திக்... திக்... த்ரில்லராக டென்ஷன் ஏற்றிய வகையில் இயக்குநருக்கு, ஒரு வெல்கம் லைக்!

'அனாமிகா’ கேரக்டருக்கு நயன்தாரா கச்சிதம். கணவனைக் காணவில்லை என்று கலங்குவதும், அலட்சியமாக இருக்கும் போலீஸாரிடம் ஆத்திரமாக வெடிப்பதும், கரப்பான்பூச்சிக்கே அசூயைப்படுபவர், ஆக்ரோஷ அவதாரம் எடுப்பதுமாக நடிப்பில் நயன்...  லேடி லயன்.

வைபவ், இயல்பான சப்-இன்ஸ்பெக்டராக நயனுக்கு உதவ முன்வருவதும், பின் அவர் மேல் இருப்பது காதலா என்று தெரியாமல் தவிப்பதுமாக நன்றாகவே நடித்திருக்கிறார். கொலையாளியைப் பார்க்கும்போது, 'இவன் எதுக்கு இங்கே வந்தான்?’ என்று கேட்பதும், துரத்தும்போது 'டேய் நில்லுடா..!’ என்று அவனிடமே வேண்டுகோள் வைப்பதும் அவரை காமெடி போலீஸ் ஆக்கிவிடுகிறதே!

என்கவுன்டர் போலீஸாக பசுபதி... சிடுசிடு முகம், சுடுசுடு வார்த்தைகள் எனக் கலக்குகிறார். அமைச்சரிடம் பம்முவதும் நயனிடம் எகிறுவதுமாக, 'போலீஸ் டென்ஷனை’ நமக்கும் கடத்துகிறார்.

மரகதமணி இசையில் பாடல்கள் சுமார் ரகம். ஆனால், பின்னணி இசையில் செம பெப் ஏற்றுகிறார். விஜய் சி.குமாரின் ஒளிப்பதிவில் ஹைதராபாத்தின் கசகச மார்க்கெட்கூட கலர்ஃபுல்லாகத் தெரிகிறது.

நீ எங்கே என் அன்பே - சினிமா விமர்சனம்

'நமஸ்தே’ கொலையாளி சேஸிங், 'பீப்பிள் பிளாசா’ க்ளைமாக்ஸ் இரண்டுமே பக்... பக்... ...திரைக்கதைக்கு பக்கா. ஆனால், நிறைய இடங்களில் சப் டைட்டில் இல்லாமல் வரும் தெலுங்கு வசனங்கள் 'என்ன சொல்றீங்க காரு?’ என்று கதறவைக்கிறதே!

'கஹானி’ படத்தின் ஜீவனே வித்யாபாலனைக் கர்ப்பிணியாகக் காட்டுவதுதான். ஆனால், நயன்தாராவை அப்படிக் காட்டவில்லை. போதா தற்கு அழகாக வேறு காட்டியிருக்கிறார்கள். அதனால், அனுதாபம் நமக்கு வரவில்லை. நயனுக்கு ஒரே ஓர் உதவி செய்யும் இமாமைக் கொல்பவர்கள், கூடவே அலையும் வைபவை ஏன் விட்டுவைக்க வேண்டும்? அந்த

ஹார் டுடிஸ்க் அவ்வளவு பெரிய பொக்கிஷம் என்றால், அதை ஏன் அவ்வளவு நாள் யாருமே கண்டுகொள்ளவில்லை? என படம் முழுக்க அலையடிக்கின்றன கேள்விகள்.

லாஜிக் பார்க்கவில்லை என்றால், 'என் அன்பே’ என்று ரசிக்கலாம்!

- விகடன் விமர்சனக் குழு

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு