Published:Updated:

மாயாஜால மல்ட்டி பிளெக்ஸ்!

மாயாஜால மல்ட்டி பிளெக்ஸ்!
மாயாஜால மல்ட்டி பிளெக்ஸ்!

டூரிங் டாக்கீஸில் மணலைக் குவித்து படம் பார்த்த தமிழன், இப்போது பக்கெட் பாப்கார்னுடன் மல்ட்டி பிளெக்ஸ் திரையரங்குகளின் சோபாக்களில் புதைந்திருக்கிறான்!

தமிழகத் திரையரங்குகளை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தியதில் 'சத்யம் சினிமாஸ்’-க்குப் பெரும் பங்கு உண்டு. சத்யத்தின் அடுத்த அதிரடி... லக்ஸ்!

சென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் வணிக வளாகத்தில் சத்யம் சினிமாஸ் தொடங்கியிருக்கும் லக்ஸ் தியேட்டர்களுக்கு முதல் வாரத்திலேயே இளசுகளின் லட்சம் லைக்ஸ். திரையரங்குகளின் உள்ளே, வெளியே ஆயிரத்தெட்டு ஆச்சரியங்கள் வரவேற்கின்றன. லக்ஸில் ப்ரியா ஆனந்துடன் ஒரு விசிட்!

நட்சத்திர ஹோட்டல் போல பிரமாண்டமாக வரவேற்கிறது லக்ஸின் பிரதான லாபி. ப்ரியாவை வரவேற்ற சத்யம் சினிமாஸின் மக்கள் தொடர்பாளர் ப்ரீதா, ''பிரதான லாபியில் இரண்டு, இரண்டாவது லாபியில் ஒன்பது என லக்ஸில் 11 தியேட்டர்கள். மெயின் லாபியில் 72 எல்.சி.டி. பொருத்தப்பட்ட வீடியோ பில்லர் இந்தியாவில் முதல் முயற்சி. பிரதான லாபியில் பெரிய பியானோ ஒன்று உண்டு. அதில் ஐ-பாட் இணைத்தால், பாடலுக்கு ஏற்ப, பியானோ தானாகவே இசைக்கும். இப்படி, திரையரங்குக்கு வருபவர்களின் ரசனைக்கேற்ப புதுசா, சொகுசா வசதிகளைப் பார்த்துப் பார்த்து அடுக்கியிருக்கிறோம்!'' என்கிறார். அடுத்தடுத்து தியேட்டரின் காபி ஷாப், ஐஸ்க்ரீம் ஃபேக்டரி, ஈட்-அவுட் என உலா தொடர்ந்தது.

மாயாஜால மல்ட்டி பிளெக்ஸ்!

ப்ரியாவை, சத்யம் சினிமாஸின் பொது மேலாளர் (இன்ஜினீயரிங்) ஜோஷ்வா, புரொஜெக்டர் அறைக்கு அழைத்துச் சென்று திரை ஒளிபரப்புத் தொழில்நுட்பத்தை விளக்கினார். ''ஒரு தியேட்டருக்கு, புரொஜெக்டரும் ஒலியை நேர்த்தியாகக் கையாள்வதும் ரொம்ப முக்கியம். கார்பன் ஆர்க் புரொஜெக்டர், ஸெனான் விளக்கு, ஃப்ளாட்டர்... இந்த வரிசையில் இப்போ டிஜிட்டல் புரொஜெக்டர். லக்ஸில் உபயோகப்படுத்துவது '4கே டிஜிட்டல் புரொஜெக்டர்’. எங்களுக்கு ஒரு படத்தின் வீடியோ பகுதி ஹார்டு டிஸ்க்கில் வரும். அது பாதுகாக்கப்பட்டது. அதாவது, அதை நீங்கள் பிரதி எடுக்க முடியாது. நம்ம இஷ்டத்துக்கு டவுண்லோடு பண்ணவும் முடியாது. விநியோகஸ்தர்களிடம் இருந்து வரும் ஹார்டு டிஸ்க்கை எங்கள் சர்வரில் டவுண்லோடு பண்ணுவோம். ஆனால், அப்பவும் அதை ஓட்டிப் பார்க்க முடியாது.

மாயாஜால மல்ட்டி பிளெக்ஸ்!

சம்பந்தப்பட்ட விநியோகஸ்தருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புவோம். அதுக்கு அவங்க அனுப்பும் பதில் மின்னஞ்சல்தான் படத்தைத் திரையில் காட்டுவதற்கான சாவி. அந்த மெயிலை நாங்க 'கே.டி.எம்’னு சொல்வோம். அதாவது, 'கீ டெலிவரி மெசேஜ்’. அதில் ஹார்டு டிஸ்க்கில் உள்ள படத்தின் பெயர், திரையிடப்பட வேண்டிய நேரம், எத்தனை நாள்களுக்கு திரையிடலாம்... என எல்லா தகவல்களும் இருக்கும். ஹார்டு டிஸ்க் உங்களிடம் இருந்தாலும் 'கே.டி.எம். கால வரையறை’ முடிந்த பிறகு அந்தப் படத்தை நாம் திரையிட முடியாது. அந்த அளவுக்குப் பாதுகாப்பு உண்டு!'' - திகில் படம் பார்ப்பது போல வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தார் ப்ரியா.

''அடுத்து ஒலி சம்பந்தமானது. அனலாக், மோனோ, ஸ்டீரியோ என இருந்த ஒலிபரப்பு முறை, டி.டீ.எஸ்-னு டிஜிட்டல் ஆன பிறகே துல்லியமாகக் கேட்க ஆரம்பித்தது.

மாயாஜால மல்ட்டி பிளெக்ஸ்!

டிஜிட்டலில் 5.1 சவுண்டு சிஸ்டத்தில் '5’ என்பது திரைக்குப் பின்னால் இடது, வலது, மையத்தில் உள்ள மூன்று ஸ்பீக்கர்களையும், திரையரங்கில் இடது பக்கம், வலது பக்கம் உள்ள இரண்டு ஸ்பீக்கர்களையும் குறிக்கும். '.1’ என்பது சப்-வூஃபர். 5.1 இப்போ 7.1, 11.1 (ஆரோ) என டெக்னிக்கலாகப் பல படிகள் முன்னேறிவிட்டது. ஆனால், மழை பெய்யும், இடி இடிக்கும் சத்தங்களை பக்கவாட்டு ஸ்பீக்கரில் கொடுத்தால், உண்மைத்தன்மை இருக்காது. அதனால் திரையரங்கின் கூரையிலும் ஸ்பீக்கர்கள் பொருத்தினார்கள். அதுதான் அட்மாஸ் சிஸ்டம். அட்மாஸ் செட்டப்பை 64.1-னு சொல்வாங்க. அதாவது, தியேட்டரின் அளவைப் பொறுத்து, 64 ஸ்பீக்கர்கள் வரை பொருத்தலாம். எங்கள் அட்மாஸ் சவுண்ட் சிஸ்டத்தை கேட்டுட்டு, 'லைஃப் ஆஃப் பை’ பட இயக்குநர் ஆங் லீ-யே அசந்து பாராட்டினது எங்கள் உழைப்புக்கான பலன்!''

''வாவ்... சினிமா இவ்வளவு பெரிய விஷயமா? இதுக்கு முன்னாடி தியேட்டர்னா எனக்கு பாப்கார்ன் மட்டும்தான் ஞாபகத்துக்கு வரும்!'' என்று அழகாக ஆச்சரியப்பட்டார் ப்ரியா.

மாயாஜால மல்ட்டி பிளெக்ஸ்!

''இப்போ ஏழு படங்கள் நடிச்சிட்டு இருக்கேன். ஏதோ நான் நடிச்சு முடிச்சதும் அது அப்படியே தியேட்டருக்குப் போயிரும்கிற மாதிரி ஒரு நினைப்பு இருந்தது. ஆனால், கிளாப் போர்டு அடிக்கிறதுல ஆரம்பிச்சு இங்கே புரொஜெக்டர் பட்டன் அழுத்தும் வரை எவ்வளவு வேலைகள்... ஆசம்... ஆசம்!'' என்று ப்ரியா சிலாகித்துக்கொண்டே இருக்க, ஒரு ஷோ முடிந்து வெளியே வந்த ரசிகர்கள், ப்ரியாவை மொய்த்துக்கொண்டனர். ஆட்டோகிராஃப், போட்டோகிராஃப் என்று சில நிமிடங்கள்.

கிளம்புவதற்கு முன் தியேட்டரின் பிரமாதமான பின்னணிக்கு முன் நின்று தன்னைத்தானே சில 'செல்ஃபி’ க்ளிக்கிக்கொண்டார் ப்ரியா. ''இதெல்லாம் என் 'வால்’ல போஸ்ட் பண்ண!'' - வலது கண்ணை ப்ரியா க்ளிக்க... ஆசம்... ஆசம்!

- ம.கா.செந்தில்குமார், படங்கள்: எம்.உசேன்