Published:Updated:

விஜய் அமலா ஹனிமூன் டேட்

Vikatan Correspondent
விஜய் அமலா ஹனிமூன் டேட்
விஜய் அமலா ஹனிமூன் டேட்

'''சினிமாவையும் வாழ்க்கையையும் குழப்பிக்கக் கூடாது’னு பிரியதர்ஷன் சார் ஒரு மணி நேரம் பேசினார். 'ஆதர்சத் தம்பதிங்கிறது சாதாரண வார்த்தை. ஆனா, தியாகம், விட்டுக்கொடுத்தல்னு அதுக்குப் பின்னாடி நிறைய விஷயம் இருக்கு’ - கல்யாண பத்திரிகையை கையில் வாங்கிட்டு அஜித் சார் சொன்னார். 'ஷூட்டிங் ஸ்பாட் மாதிரி எல்லாமே நாம நினைச்சது, நினைச்ச நேரத்துல வாழ்க்கையில் நடக்காது. அதை மட்டும் மனசுல வெச்சுக்கங்க’ - இது சூர்யா சார் சொன்னது. இந்த ஒரு வாரக் கல்யாண வாழ்க்கையே இது எல்லாத்தையும் புரியவெச்சிருச்சு!'' என இயக்குநர் விஜய் ஆரம்பிக்க, ''என்ன சொல்றார் எங்க கேரள மாப்பிள்ளை?'' - சரசரவென வந்து விஜய் அருகே அமர்கிறார் அமலா பால்.

''உங்களைப் பத்திதான், நல்லவிதமா சொல்லிட்டு இருக்கேன்!'' என்று விஜய் சொல்ல, ''நம்ம்ம்பிட்டேன்!'' என்று சிரிக்கிறார் 'மைனா’ மருமகள். காதல் - திருமணம் - ஹனிமூன் பயண சுவாரஸ்யத்தைப் பகிர்ந்துகொண்டனர் இருவரும்.

'' 'மைனா’வை ரிலீஸுக்கு முன்னாடியே பார்த்துட்டேன். 'தெய்வத்திருமகள்’ டீச்சர் ரோலுக்கு அமலா செட் ஆவாங்கனு தோணுச்சு...'' என்று விஜய் ஆரம்பிக்க, தொடர்கிறார் அமலா. ''அப்போ என் முன்னாடி ரெண்டு ஆஃபர் இருந்துச்சு. ஒண்ணு 'தெய்வத்திருமகள்’, இன்னொண்ணு 'ராஜபாட்டை’... ரெண்டுல ஏதாவது ஒரு படம்தான் கமிட் ஆக முடியும். நான் 'தெய்வத்திருமகள்’ க்ளிக் பண்ணேன். அதுக்காக, விஜயை நான் முதன்முதலாப் பார்த்த அக்டோபர் 26, என் பிறந்தநாள். அது தெரிஞ்சதும் என்னை லஞ்ச்சுக்கு அழைச்சிட்டுப் போய் ட்ரீட் கொடுத்தார். அந்தப் படத்தின் ஷூட்டிங், புரமோஷன் டைம்ல எங்களுக்குள்ள நல்ல நட்பு மட்டுமே இருந்தது. அப்புறம் விஜய் ஒரு வீடும், ஒரு காரும் வாங்கினார். அதுதான் இந்தக் கல்யாணத்துல கொண்டுவந்து விட்டிருக்கு!''

விஜய் அமலா ஹனிமூன் டேட்

''நான் ஒரு பி.எம்.டபிள்யூ கார் வாங்கினப்போ, 'டெஸ்ட் டிரைவ் பண்ணிப் பார்க்கிறேன்’னு சொல்லிட்டு அமலா டிரைவ் பண்ணாங்க. டிரைவிங் பத்தி நிறைய டிப்ஸ் கொடுத்தாங்க. அது, நான் இவங்களுக்கு கார் வாங்கிக் கொடுத்துட்டதா செய்தி பரவிடுச்சு. அதே மாதிரி நான் வீடு வாங்கினப்ப, அது அமலாவுக்கு வாங்கிக் கொடுத்ததுனு பரபரப்பு கிளப்பிவிட்டாங்க. ஆனா, அப்பல்லாம் அப்படி ஒரு ஐடியாவே இல்லை. 'தலைவா’ ஷூட்டிங் சமயம்தான் எங்க நட்பு காதல்ங்கிற அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது'' என்று விஜய் சொல்ல, ''அப்பவும் சார் புரபோஸ் பண்ணலை. நான்தான் முந்திக்கிட்டுச் சொன்னேன்'' என்று சிரிக்கிறார் அமலா!

''மனசுல என்ன இருந்தாலும் இவர் சொல்ல மாட்டார்னு தெரியும். அதனால நானே காதலைச் சொல்லிட்டேன். 'தலைவா’ல ஒரு பாட்டுக்கு ரோப் டான்ஸ் பண்றப்போ, நான் தவறிக் கீழே விழுந்துட்டேன். அப்போ, இவர் ரொம்ப டென்ஷனாகிட்டார். அந்தப் பதற்றமும் அக்கறையும்தான், இவருக்கும் நம்ம மேல காதல் இருக்குனு கன்ஃபர்ம் பண்ணுச்சு. அதனாலதான் தைரியமா காதல் சொன்னேன். நான் மட்டும் அப்போ சொல்லலைனா, இப்போ வரை கிசுகிசுக்கள்லதான் காதலிச்சிட்டிருக்கணும்!'' என்று அமலா சொல்ல, விஜய் முகத்தில் வெட்கம்.

விஜய் அமலா ஹனிமூன் டேட்

''எங்களைப் பத்தி விக்ரம் சார்தான் முதல்ல ஸ்மெல் பண்ணார். 'உங்களுக்குள்ள ஏதோ இருக்கு... ஏதேதோ இருக்கு’னு சொல்லிட்டே இருப்பார். எங்க ரெண்டு பேரையும் சேர்த்து முதல் போட்டோ எடுத்ததும் அவர்தான்'' என்றபடி மொபைலில் இருக்கும் அந்தப் படத்தைக் காண்பிக்கிறார் விஜய்.

''இவர் ரொம்ப நல்ல ஹஸ்பெண்ட். ஆனா, வெரி பேட் பாய் ஃப்ரெண்ட். எனக்கு சண்டை போடுறதுனா ரொம்பப் பிடிக்கும். ஆனா, இவர் எனக்கு ரொம்ப மரியாதை கொடுக்கிறார். இவருக்கு கோபம் வரவைக்கிறது ரொம்பக் கஷ்டம்'' என்று அமலா சிரிக்க, தொடர்கிறார் விஜய், ''அமலாவுக்கு எப்போ வேலை பார்க்கணும், எப்போ ஜாலியா இருக்கணும்னு தெரியும். ஆனா, எனக்கு ஜாலி, கலாட்டானா என்னன்னே தெரியாது. துபாய் போயிருந்தப்ப திடீர்னு என்னை வாட்டர் கேம்ஸ்ல விளையாடச் சொல்லித் தள்ளிவிட்டாங்க. முதல்ல 'நான் என்ன குழந்தையா?’னு கடுப்பாகிட்டேன். ஆனா, விளையாட விளையாட செம ஜாலியா இருந்துச்சு. ஸ்கூபா டைவிங், பீச் டிரைவ், கேண்டில் லைட் டின்னர்னு என் வாழ்க்கையை ஒரு ஃப்ளாஷ்ல கலர்ஃபுல் ஆக்கிட்டாங்க அமலா!''

''ரெண்டு பேர்கிட்டயும் ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிக்காத குணம் ஏதாவது ஒண்ணு சொல்லுங்க'' என்று கேட்டதும் அதிர்ச்சியாகிறார் விஜய். ''ஒண்ணா..!? அது பெரிய லிஸ்ட்டே வெச்சிருப் பாங்களே...'' என்கிறார்.

''விஜய்... ரொம்ப நல்லவர். அதுதான் அவரோட ப்ளஸ், மைனஸ் மத்தது எல்லாமே'' என்று அமலா சொல்ல, ''இவங்க சமயங்கள்ல சின்னக் குழந்தை மாதிரி நடந்துப்பாங்க. சமயங்கள்ல பெரியப் பொண்ணு மாதிரி பேசுவாங்க. எந்த நேரம் எந்த இடத்தில் அந்த மாற்றம் இருக்கும்னு எனக்கு இன்னும் பிடிபடலை. அதைக் கண்டுபிடிக்க, இன்னும் சில வருஷங்கள்ஆகும்னு நினைக்கிறேன்'' என்று சிரிக்கிறார் விஜய்.

''மறக்க முடியாத பரிசுப் பொருட்கள்?''

''நான் சும்மா சும்மா ஏதாவது கிஃப்ட் பண்ணிட்டே இருப்பேன். அதுக்கெல்லாம் சின்ன ஸ்மைல் மட்டும்தான் அவரோட ரியாக்ஷன். ஆனா, சார் கொடுத்த ஒரு கிஃப்ட்... வாவ்!'' என்று அந்த ஆச்சர்யத்தை மீண்டும் ரீவைண்ட் செய்து அனுபவித்துவிட்டுத் தொடர்கிறார் அமலா.

'' 'நம்ம நிச்சயதார்த்த சங்கீத் நிகழ்ச்சிக்கு கிடார் வாசிக்கப்போறேன்’னு சொன்னார். சமயங்கள்ல ராத்திரி போன் பண்ணினா, 'கிடார் பயிற்சில இருக்கேன்’ம்பார். சங்கீத்ல, 'நான் கிடார் ப்ளே பண்ற வீடியோ பாருங்க’னு சொல்லிட்டு ஒரு வீடியோ ப்ளே பண்ணார். அதைப் பார்த்த எல்லாருக்கும் அதிர்ச்சி. நான் நடிச்ச ஹிட் பாடல்களுக்கு அவர் டான்ஸ் பண்ணியிருந்தார். ரொம்ப நல்லா

விஜய் அமலா ஹனிமூன் டேட்

ஆடியிருந்தார். விக்ரம், அனுஷ்காவுக்கு எல்லாம், 'விஜய் இவ்வளவு டான்ஸ் பண்ணுவாரா?’னு ஆச்சர்யம். அதுக்கு முன்னாடி இவருக்கு டான்ஸ் தெரியாது. ஆனா, எனக்காக ராத்திரி பகலா பிராக்டீஸ் பண்ணி ஆடியிருக்கார். அதைப் பார்க்கப் பார்க்க... நான் அழுதுட்டேன்'' என்று நெகிழ்கிறார் அமலா.

''ஓ.கே விஜய் உங்களுக்காக டான்ஸ் கத்துக்கிட்டார். நீங்க அவருக்காக என்ன கத்துக்கிட்டீங்க?'' என்று அமலாவிடம் கேட்டால், செமத்தியாகச் சிரிக்கிறார்.

''சுடு தண்ணி வைக்கக் கத்துக்கிட்டேன். செம சூடா இருக்காம் நான் வைக்கிற தண்ணி!'' என்று அமலா மேலும் மேலும் சிரிக்க, அதை வைத்த கண் வாங்காமல் ரசிக்கிறார் விஜய்.

- ம.கா.செந்தில்குமார்