Published:Updated:

“கடவுள் கிடையாது... மிருகம் கூடாது!”

“கடவுள் கிடையாது... மிருகம் கூடாது!”
“கடவுள் கிடையாது... மிருகம் கூடாது!”

கிழ்ச்சி நெகிழ்ச்சிகளின் தொகுப்பாக இந்த வருடம் இன்னும் கலர் கூட்டியிருக்கும் 'விஜய் அவார்ட்’ஸின் ஹைலைட்ஸ் இங்கே...

விழாவின் இன்ட்ரோ ஸாங்... விஜய், சூர்யாவுக்கு அல்ல... 'டி.டி’-க்கு! 'மணமகளே மருமகளே வா... வா...’ பாடல் இன்ட்ரோவோடு என்ட்ரி கொடுத்தார் டி.டி.

'சூது கவ்வும்’ படத்துக்குச் சிறந்த பின்னணி இசை விருது பெற்றார் சந்தோஷ் நாராயணன். அவருக்கு விருதை வழங்க வந்த பூஜா, ''பார்த்திபன் சார்கிட்ட, 'நீங்க விருது வாங்க வந்தீங்களா... கொடுக்க வந்தீங்களா?’னு கேட்டேன். 'விருதுங்கிறது முத்தம் மாதிரி. கொடுத்தாலும் வாங்கினாலும் ரெண்டு பேருக்கும் சொந்தம்தான்’னு சொன்னார். நான் இப்போ சந்தோஷ§க்கு விருது கொடுத்துட்டேன். அப்போ இவர் எனக்கு முத்தம் கொடுக்கணும்ல!'' என்று பூஜா கேட்க, கூச்சத்தில் நெளிந்தார் சந்தோஷ். ஆனாலும், விடவில்லை பூஜா. ''சரி அப்போ நான் கொடுக்கிறேன்'' என அவரை நெருங்க, அதிர்ச்சியடைந்த சந்தோஷ், அடுத்த நொடியே ஜூட்!

“கடவுள் கிடையாது... மிருகம் கூடாது!”

''ஏன் நஸ்ரியா இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?'' என்ற கேள்விக்கு, ''என்ன பண்றது... லவ்வ்வ்வ்!'' என்றார் நஸ்ரியா. ''அப்போ சிறந்த வில்லனுக்கான விருதை நாங்க ஃபஹத் பாசிலுக்குக் கொடுத்துர்றோம்!'' என்று கோபி கலாய்க்க, நஸ் முகத்தில் எக்ஸ்ட்ரா வெட்கம்.

கௌதம் கார்த்திக்கு சிறந்த அறிமுக நடிகர் விருது கொடுத்த குஷ்புவிடம், ''இப்போ 'குட்டி குஷ்பு’ ஹன்சிகா ஆடின பாட்டுக்கு நிஜ குஷ்பு ஆடுவார்!'' என்று கமிட் செய்ய, 'டார்லிங்கு டம்பக்கு...’ பாட்டுக்கு 'கெட்ட ஆட்டம்’ போட்டார் 'முன்னாள் உடன்பிறப்பு’ குஷ்பு!

“கடவுள் கிடையாது... மிருகம் கூடாது!”

சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதை 'பாண்டிய நாடு’ படத்துக்காகப் பெற்ற இயக்குநர் பாரதிராஜா, '' 'நான் சினிமாவுக்கு நடிக்கத்தான் வந்தேன்’னு சொன்னப்ப சிவாஜி சார், 'ஏண்டா... நீ கண்ணாடியே பார்த்தது இல்லையா?’னு கேட்டார். ஆனா, இப்போ என் நடிப்புக்காக ஒரு விருதுனு நினைக்கும்போது ரொம்பக் கூச்சமா இருக்கு!'' என்று நெகிழ்ந்தார்.

அறிமுக இயக்குநருக்கான விருதைப் பெற்ற அட்லி, ''என்னைத் தயாரிப்பாளர்கிட்ட அறிமுகப்படுத்திவெச்ச சிவகார்த்திகேயனுக்கு, இந்த மேடையில் நான் நன்றி சொல்லணும்!'' என்று சொல்ல, ''முதல்ல 'என் படத்துல உனக்கு ஒரு காமெடியன் ரோல் இருக்கு’னு சொன்னான். ஆனா, தரலை. அப்புறம் 'ஹீரோ ரோல் இருக்கு’னு சொன்னான். அதையும் தரலை. கடைசியா நயன்தாரா கொடுத்தாங்கனு சொல்லி ஒரு கிலோ அல்வாதான் கொடுத்தான்!'' என அவரைக் கலாய்த்தார் சிவகார்த்திகேயன்.

“கடவுள் கிடையாது... மிருகம் கூடாது!”

தமிழ் சினிமாவின் சிறந்த பங்களிப்புக்கான விருதை, மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு சமர்ப்பணம் செய்தது விஜய் அவார்ட்ஸ்.

'பரதேசி’ படத்துக்காகச் சிறந்த இயக்குநர் விருதை, திருமதி அகிலா பாலுமகேந்திரா கையால் பெற்ற இயக்குநர் பாலா, ''அகிலா அம்மா, ஒரு குழந்தை மாதிரி. அவங்க கையால வாங்கின இந்த விருது, எனக்கு ஆஸ்கருக்குச் சமம்'' என்றார்.  

சிறப்பு விருது பெற்ற விஜய் சேதுபதியிடம், ''இங்கே ஒரு ஹீரோயினைக் கடத்திட்டுப் போகணும்னா, யாரைக் கடத்திட்டுப் போவீங்க?'' என்று கேட்டதும், உடனே வந்தது பதில்... ''நயன்தாரா. அவங்க உள்ளே வர்றப்பவே பார்த்துட்டேன். ரொம்ப அழகா இருந்தாங்க!'' என்றார். அதேபோல 'எந்த ஹீரோவை நீங்கள் கடத்துவீர்கள்?’ என்று நயன்தாராவிடம் கேட்டபோது, அதிர்ச்சி ரியாக்ஷன் காட்டியவர் எந்தப் பதிலும் சொல்ல வில்லை. ரசிகர்களிடம் இருந்து எழுந்த 'ஷாருக்... ஷாருக்...’ சிபாரிசையே பதிலாக அறிவித்தார் டி.டி.

“கடவுள் கிடையாது... மிருகம் கூடாது!”

20 வருடங்களில் 11 படங்கள் மூலம் இந்திய அளவில் சாதனை படைத்ததற்காக, இயக்குநர் ஷங்கருக்கு செவாலியே சிவாஜி கணேசன் விருது. ''இந்த விருதுக்கு நான் எவ்வளவு தகுதியானவன்னு தெரியலை. இனிமேலாவது எதையாவது உருப்படியா செய்யணும்னு நினைச்சுக்கிறேன்!'' என்றார் அடக்கமாக!

“கடவுள் கிடையாது... மிருகம் கூடாது!”

ஸ்டார் கெஸ்டாக மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் சூர்யா. சிறந்த பாடகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட யுவன் ஷங்கர் ராஜாவுக்கு விருது வழங்கியவர் ஏ.ஆர்.ரஹ்மான். 'தலைவா’ படத்துக்காக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர் விருது பெற்றார் விஜய். ''ஒரு படத்தோட வெற்றியை மக்கள்தான் தீர்மானிக்கணும். ஜெயிச்ச படத்துக்கு விருது கிடைச்சிருந்தாக்கூட நான் இவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன். ஜெயிச்சிருக்கவேண்டிய படம்னு மக்களே முடிவு செஞ்சு, இந்த விருது கொடுத்தது ரொம்ப சந்தோஷம். வெற்றிங்கிறது கோல் போடுற மாதிரி. கோல் போடும்போது பந்து மட்டும்தான் வலைக்குள்ள விழணும். பந்தோட சேர்ந்து நாமளும் வலைக்குள்ள விழுந்துரக் கூடாது. கிரீடம் எவ்வளவு கனமா இருந்தாலும், அதைத் தாங்குற தலையில கனம் இருக்கக் கூடாது!'' என்றெல்லாம் மனம் திறந்து விஜய் பேசப் பேச, அரங்கில் ஆச்சர்ய அலை!

சிறந்த என்டர்டெயினர் விருதை விஜயிடம் இருந்து பெறும்போது, மறைந்த தன் அப்பா குறித்த நினைவுகளைச் சொல்லிக் கலங்கினார் சிவகார்த்திகேயன். அவரைத் தேற்றிய விஜய், ''உங்களுக்கு டான்ஸ் நல்லா வருது; ஆக்டிங் நல்லா வருது. காமெடி... சொல்லவே தேவையில்லை. என் பையனும் பொண்ணும்கூட இவர் ஃபேன்ஸ்தான். குட்டீஸ் எல்லாரையும் புடிச்சிட்டார்!'' என்று சொல்ல, சிவா முகத்தில் மின்னல் பரவசம்!

“கடவுள் கிடையாது... மிருகம் கூடாது!”

சிறந்த நடிகர் மற்றும் ரசிகர்களின் மனம் கவர்ந்த இயக்குநர் விருதைப் பெற்ற கமலிடம், ''நீங்க கடவுளா... மிருகமா?'' என்ற கேள்வி. மைக்ரோ நொடி யோசித்தவர், ''ஒண்ணு கிடையாது... இன்னொண்ணா இருக்கக் கூடாது!'' என்றார் பளிச்சென.

அது... கமல்!

 - ம.கா.செந்தில்குமார், பா.ஜான்ஸன்