Published:Updated:

"ஒரு நிமிஷம் நின்னு பேசுங்க ப்ளீஸ்!”

"ஒரு நிமிஷம் நின்னு பேசுங்க ப்ளீஸ்!”
"ஒரு நிமிஷம் நின்னு பேசுங்க ப்ளீஸ்!”

"ஒரு நிமிஷம் நின்னு பேசுங்க ப்ளீஸ்!”

''ஒரு கேனான் 5டி கேமரா என்னவெல்லாம் பண்ணும்? நல்லா படம் எடுக்கும்; வீடியோ எடுக்கும்; அதை வெச்சு குறும்படம் எடுக்கலாம். ஏன்... இப்போ முழுப் படமே எடுக்கலாம். ஆனா, நாங்க வாடகைக்கு எடுத்த கேனான் 5டி கேமரா, தமிழ் சினிமாவுக்கு ரெண்டு இயக்குநர்கள், ஒரு ஹீரோ, ஒரு வில்லனைக் கொடுத்திருக்கு. ரெண்டு இயக்குநர்கள்ல ஒருத்தர் கார்த்திக் சுப்புராஜ். இன்னொருத்தர் 'காக்கா முட்டை’ படம் இயக்கிட்டு இருக்கும் மணிகண்டன். ஒரு ஹீரோ, விஜய் சேதுபதி. அந்த வில்லன்... அட நம்புங்க... நான்தான்!'' - கலாட்டா இன்ட்ரோ கொடுக்கிறார் பாபி சிம்ஹா. 'சூது கவ்வும்’ பகலவன், 'நேரம்’ வட்டி ராஜா கேரக்டர்களில் கியர் தட்டியவர், 'ஜிகர்தண்டா’ படத்தில் செம டெரர் சேதுவாக லாங்க் ஜம்ப் அடித்திருக்கிறார்.

''நான் ஹைதராபாத் பையன். ஆனா, வளர்ந்தது நம்ம கொடைக்கானல்லதான். என் ஒரிஜினல் பேரு ஜெயசிம்ஹா. வீட்ல செல்லமா 'பாபி’னு கூப்பிடுவாங்க. ரெண்டையும் சேர்த்து 'பாபி சிம்ஹா’ ஆகிட்டேன். 2005-ல் சென்னை வந்தேன். மார்க்கெட்டிங், இன்ஷூரன்ஸ், பி.பி.ஓ-னு பார்க்காத வேலை இல்லை. மூணு மாசம் வேலை பார்ப்பேன். திடீர்னு, 'சிம்ஹா, நீ இருக்க வேண்டிய இடம் இது இல்லியேடா!’னு உள்ளுக்குள்ள உதைக்கும். உடனே வேலையை விட்ருவேன். போட்டோ எடுத்து பின்னாடி போன் நம்பர் எழுதி, ஒவ்வொரு சினிமா கம்பெனியா போய் கொடுத்துட்டு வருவேன். இருக்கிற பணம் எல்லாம் தீர்ந்து, பசி வயித்தைப் பிராண்டும். திரும்ப வேலைக்குப் போவேன்.

"ஒரு நிமிஷம் நின்னு பேசுங்க ப்ளீஸ்!”

ஒரு பெரிய வங்கியோட மார்க்கெட்டிங் வேலைக்காக இன்டர்வியூவுக்குப் போனேன். 'வாடிக்கையாளரை எப்படி ஈர்க்கிறீங்கனு பார்க்கணும். ரோட்ல போற ஒருத்தரை நிறுத்தி மூணு நிமிஷம் பேசுங்க’னு அசைன்மென்ட் கொடுத்தாங்க. நானும் ஒவ்வொருத்தரா நிறுத்தி, 'எக்ஸ்க்யூஸ் மீ’னு ஆரம்பிச்சா, அவங்க என்ன, ஏதுனு நிமிர்ந்துகூடப் பார்க்காம, 'ஸாரி’ சொல்லிட்டுப் போயிட்டே இருப்பாங்க. 10 பேர்கிட்ட பேசிருப்பேன். யாருமே நிக்கலை. அழுகை வந்திருச்சு. 'சார்... நான் நடிக்கதான் சென்னைக்கு வந்தேன். எனக்கு மார்க்கெட்டிங் திறமை இல்லை. மன்னிச்சுக்கங்க’னு சொல்லிட்டு வந்துட்டேன்.

"ஒரு நிமிஷம் நின்னு பேசுங்க ப்ளீஸ்!”

அந்தச் சமயம்தான் 'காக்கா முட்டை’ இயக்குநர் மணிகண்டன் பழக்கம் ஆனார். அவரும் நானும் சேர்ந்து சுத்திட்டு இருக்கும்போது, 'கேனான் 5டி கேமரா வாடகைக்குக் கிடைக்குமா?’னு கேட்டு வந்த கார்த்திக் சுப்புராஜ் பழக்கம் ஆனார்; அப்புறம் விஜய் சேதுபதி நட்பு ஆனார். ரெண்டு பேரும் குறும்படங்களில் நடிச்சோம்.

காலேஜ் படிக்கும்போது, நான் நிறையப் பேருக்கு உதவியிருக்கேன்; பணம் கொடுத்திருக்கேன். ஆனா, சென்னையில் ஒரு ரூபாய்கூட இல்லாம நின்னப்ப, அவங்க யாருமே எனக்கு உதவலை. போன்ல கூப்பிட்டா அட்டெண்ட் பண்ணக்கூட மாட்டாங்க. அப்போ கார்த்திக்தான்  எனக்கு சோறு போட்டார்; டிரெஸ் எடுத்துக் கொடுத்தார்; வீட்டு வாடகை கொடுத்தார்; ஒரு அப்பா மாதிரி என்னைப் பார்த்துக்கிட்டார். அப்போ நான் உருகி உருகிக் காதலிச்ச பொண்ணுகூட, 'நீ நாளைக்கு ஜெயிக்கலாம்... ஜெயிக்காமப் போகலாம். ஆனா, இன்னைக்கு உன்கிட்ட பணம் இல்லை. அதானே நிஜம். உன்னை நம்பி நான் எப்படிக் காத்திருக்கிறது?’னு கேட்டுட்டுப் போயிட்டாங்க. 'எல்லாமே கையைவிட்டுப் போகுது. சினிமாவுக்கு நாம சின்சியரா இருக்கோம். அந்த சினிமா நம்மளைக் காப்பாத்தும்’னு மட்டும் நம்பினேன். அந்த நம்பிக்கையும் உழைப்பும்தான் என்னை இப்போ காப்பாத்தியிருக்கு.

'பீட்சா’வுக்கு முன்னாடியே 'ஜிகர்தண்டா’ கதையை என்கிட்ட சொன்னார் கார்த்திக். 'அந்த சேது கேரக்டர் நான் பண்ணட்டா?’னு கேட்டேன். 'அது ரொம்ப வெயிட்டான கேரக்டர். நீ தாங்குவியானு தெரியலை. வேற கேரக்டர் தர்றேன்’னு சொன்னார். ஆனா, 'காதலில் சொதப்புவது எப்படி?’, 'நேரம்’, 'பீட்சா’, 'சூது கவ்வும்’னு என் நடிப்பைப் பார்த்துட்டு கார்த்திக்கு என் மேல நம்பிக்கை வந்திருக்கும்னு நினைக்கிறேன். 'ஜிகர்தண்டா பண்ணப் போறேன். சேது கேரக்டர்ல நீயே நடி. நிறைய ஹோம்வொர்க் பண்ணு. படம் ஓடுதோ இல்லையோ, உன் ஆக்ட்டிங் பத்தி நிச்சயம் பேசுவாங்க’னு நம்பிக்கையா சொன்னார். லுக், பாடிலாங்வேஜ், சிரிக்கிறது, முறைக்கிறது, மதுரை ஸ்லாங்ல பேசுறதுனு நாலு மாசம்

"ஒரு நிமிஷம் நின்னு பேசுங்க ப்ளீஸ்!”

மோல்டு பண்ணி ஆளையே மாத்திக்கிட்டேன். ஷூட்டிங் அப்போ சித்தார்த், 'பாஸ் என் கேரக்டரைவிட உங்க கேரக்டர்தான் செம மாஸ். சூப்பரா பண்றீங்க’னு பாராட்டிட்டே இருந்தார். மணிரத்னம் சார் என் நடிப்பைப் பாராட்டி கார்த்திக்கு மெசேஜ் பண்ற அளவுக்கு எல்லா திசைகள்லயும் வாழ்த்து குவிஞ்சது.

'அடுத்து என்ன?’னு எல்லாரும் கேக்கிறாங்க. நான் நடிகன் ஆகுறதுக்கு முன்னாடியே என் நடிப்பைப் பார்த்துட்டு ரெண்டு நண்பர்கள் என்னை வெச்சு படம் பண்ணணும்னு ஆசைப்பட்டாங்க. அடுத்து அவங்க படங்களில் ஹீரோவா நடிக்கப்போறேன்.

எனக்கு இங்கிலீஷ் நடிகர் கிறிஸ்டியன் பேல்தான் ரோல்மாடல். ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் துளி சம்பந்தம் இல்லாத அளவுக்கு வித்தியாசம் காட்டுவார். அவரை மாதிரி வகைதொகை இல்லாம எல்லா கேரக்டரும் பண்ணணும். 'இவனை நம்பி எதுவும் நடிக்கவைக்கலாம்’னு எந்த இயக்குநரும் தைரியமா வரணும். அதான் என் ஆசை, லட்சியம், இலக்கு, புரட்சி, போராட்டம்... எல்லாமே!

இப்போ எங்கே போனாலும் என்னை அடையாளம் கண்டுபிடிச்சுப் பேசுறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. யார் கூப்பிட்டாலும் நான் நின்னு நிதானமா ரெண்டு நிமிஷம் பேசிடுவேன். நீங்க யாரா வேணும்னா இருங்க. ஆனா, யாராவது பேசணும்னு வந்தா நீங்க ஒரு நிமிஷம் காது கொடுத்துக் கேளுங்க. ஏன்னா, அதுல ஒருத்தன் இன்னொரு சிம்ஹாவா இருக்கலாம்!''

- எஸ்.கலீல்ராஜா, படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

அடுத்த கட்டுரைக்கு