Published:Updated:

“விஜய் சேதுபதியை ரொம்பப் பிடிச்சிருக்கு!” சர்ப்ரைஸ் சமந்தா

“விஜய் சேதுபதியை ரொம்பப் பிடிச்சிருக்கு!” சர்ப்ரைஸ் சமந்தா
“விஜய் சேதுபதியை ரொம்பப் பிடிச்சிருக்கு!” சர்ப்ரைஸ் சமந்தா

ஸோ ஸ்வீட் சமந்தா... இப்போ 'செம ஹேப்பி பேபி’!  

'' சூர்யா, விஜய், விக்ரம்னு வரிசையா மாஸ் ஹீரோ படங்களை பாக்கெட் பண்ணிட்டீங்க!''

'' இது எனக்கு தங்கமான தருணம். இப்போ 'கத்தி’ ஷூட்டிங்ல இருக்கேன். 'முருகதாஸ் சார் படம், விஜய் சாருக்கு ஹீரோயின்’... இவையெல்லாம் ஒரு ஹீரோயின் கேரியர்ல பயங்கரமான கிராஃப். இத்தனைக்கும், பெரிய டைரக்டர், பெரிய ஹீரோனு ஆரம்பத்துல பயந்தேன். ஆனா, முருகதாஸ் சாருக்கு சூப்பர் காமெடி சென்ஸ். பேசிட்டே இருக்கும்போது சிரிக்கவெச்சிடுறார். விஜய் சார் அவ்ளோ ஃப்ரெண்ட்லியா பழகுறார். விக்ரம் சார்கூட 'பத்து எண்றதுக்குள்ள’ படம் பண்ணிட்டு இருக்கேன். 'ஐ’ படத்துக்காக அவர் பண்ண ஹோம்வொர்க்ஸ் எல்லாம் சொன்னார். 'இப்படி எல்லாம் ஒரு மனுஷனால பண்ண முடியுமா?’னு ஆச்சர்யமா இருந்துச்சு. அவர் சாப்பாட்டுல உப்பு இருக்கவே கூடாதாம். சாப்பாடுனா, ரைஸ், இட்லி, சப்பாத்தி இல்லை. காய்கறி, பழங்கள்லகூட உப்பு இருக்கக் கூடாதாம். அதுவும் வாழைப் பழம் மாதிரி இனிப்பான பழங்கள் கூடவே கூடாதாம். ஒரு வாரம் சரியா சாப்பிடக் கூடாதுன்னா, நான் துடிச்சுப் போயிடுவேன். ஆனா, ஒரு கேரக்டருக்காக ஒரு வருஷம் மனுஷன் இப்படி இருந்திருக்கார் என்பதை என்னால நம்பவே முடியலை!''

“விஜய் சேதுபதியை ரொம்பப் பிடிச்சிருக்கு!” சர்ப்ரைஸ் சமந்தா

'' 'அஞ்சான்’ பிகினிக்கு வந்த கமென்ட்ஸ்?''

''என் ஃப்ரெண்ட்ஸ் இதுக்கு முன்னாடி நான் நடிச்ச படம் பார்த்துட்டு, 'நீ நல்லா நடிச்சிருக்கே’னுதான் சொல்வாங்க. ஆனா, 'அஞ்சான்’ பார்த்துட்டு, 'நீ ரொம்ப அழகா இருக்கே’னு சொன்னாங்க. தேங்க்ஸ் டு கேமராமேன் சந்தோஷ் சிவன் சார். பிகினி பத்தி என்ன சொல்றது... பாசிட்டிவ், நெகட்டிவ்னு ரெண்டு விதமாகவும் வந்துச்சு.  ஏன்னா, அதுக்கு முன்னாடி 'பாணா காத்தாடி’, 'நீதானே என் பொன்வசந்தம்’னு ஹோம்லியாத்தானே நடிச்சுட்டு இருந்தேன். ஆனா, அப்படி ஒரே மாதிரி நடிச்சு, 'சமந்தான்னா இப்படித்தான்’னு ஒரு இமேஜ் வந்துடக் கூடாது. அதான் பிகினி டான்ஸுக்கு ஓ.கே சொன்னேன். 'அஞ்சான்’ மாதிரி ஒரு மாஸ் ஹீரோ படத்துல, 'அட... ஹீரோயின் நல்லா இருக்காளே... அழகா இருக்காளே’னு ரெவ்யூ வாங்குறதே பெரிய விஷயம். அதுக்காகத்தான் பிகினி ட்ரிக்!''  

''தெலுங்குல உங்களுக்கும் ஸ்ருதிக்கும் போட்டி; தமிழ்ல நயன்தாராவுக்கும் உங்களுக்கும் போட்டி... எப்படிச் சமாளிக்கிறீங்க?''

''போட்டி இல்லைனு சொன்னா, அது பொய். ஆனா, போட்டி நல்லதுதானே. 'ஏய் அந்தப் படத்துல நீ நல்லா நடிச்சிருந்தே!’னு நம்ம ஃப்ரெண்ட்ஸ் சொல்றது ஒரு வாழ்த்துதான். ஆனா, அதையே இன்னொரு ஹீரோயின் சொன்னா, வேற லெவல் பாராட்டு. அதனால இந்தப் போட்டியை நான் ரசிக்கிறேன்!''

'' 'இப்படி ஒரு கேரக்டர் மிஸ் பண்ணிட்டோமே’னு சமீபத்துல நீங்க ஃபீல் பண்ண கேரக்டர்?''

'' 'பெங்களூரு டேய்ஸ்’ நஸ்ரியா கேரக்டர். 'ச்சே... இந்த ரோல் நாம பண்ணியிருக்கணும்’னு தோணுச்சு. இப்ப அதோட தெலுங்கு ரீமேக்ல நடிக்க என்னைக் கேட்டிருக்காங்க. ஆனா, இப்படி அடிக்கடி கேரக்டர் பார்க்க முடியாது. நீங்களே மனசைத் தொட்டுச் சொல்லுங்க... ஹீரோயினுக்கு ஸ்கோப் இருக்கிற மாதிரி இப்ப எத்தனை படம் வருது? ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஹீரோக்களைப் பார்த்துத்தான் பொறமைப்படணும்!''

''ஓ.கே அப்படி எந்த ஹீரோவைப் பார்த்துப் பொறாமைப்படுறீங்க!''

''விஜய் சேதுபதி! நான் அவரோட பயங்கரமான ஃபேன். 'பீட்சா’ ரிலீஸான சமயம். அந்தப் படம் பத்தி எந்தப் பேச்சும் இல்லை. என்னை வலுக்கட்டாயமா கூட்டிட்டுப் போயிட்டாங்க சில ஃப்ரெண்ட்ஸ். முதல் ஷாட். ஹீரோ அறிமுகம். விஜய் சேதுபதி. ரொம்ப சுமாரான ஓப்பனிங். 'அச்சோ... இவர்தான் ஹீரோவா... ரெண்டு மணி நேரம் காலி’னு நினைச்சேன். ஆனா, அடுத்தடுத்து ஒவ்வொரு ஷாட்லயும் ஆச்சர்யப்படுத்திட்டே இருந்தார். மனசுவிட்டுச் சொல்றேனே... அடுத்த 15-வது நிமிஷம் அவரை நான் காதலிக்கவே ஆரம்பிச்சிட்டேன். அதுலயும் பேய் வீட்டுக்குள்ள பயந்து, தடுமாறி ஓடுறப்பலாம் சீனுக்கு சீன் சிக்ஸர் அடிச்சார் விஜய் சேதுபதி. ஒவ்வொரு படத்துலயுமே இப்படி வெரைட்டி காமிச்சு அசத்திட்டே இருக்கார். அவரை ரொம்பப் பிடிச்சிருக்கு!

விஜய் சேதுபதிகூட நடிக்க எனக்கு ஆசை. ஆனா, அதுல ஒரு சின்ன தயக்கம். அவர் படம்னா, ஹீரோ, ஹீரோயின்னு எல்லாமே அவர்தான். யாருக்குமே எந்த வாய்ப்பையும் கொடுக்க மாட்டாரே! (கலகலவெனச் சிரிக்கிறார்) ஒரு நல்ல ஸ்கிரிப்ட் வந்தா, அவர்கூட நடிப்பேன்!''

''நல்ல லைன்-அப்ல இருக்கீங்க. சம்பளம் கோடிகளைத் தாண்டிருச்சா?''

''இப்ப இருக்கிற பணத்தை வெச்சுக்கிட்டே என்ன பண்ணப்போறேன்னு தெரியலை. இன்னும் பணம் பணம்னு சுத்துறதுல எனக்கு விருப்பம் இல்லை. மனதிருப்திக்காக ஒரு என்.ஜி.ஓ நடத்திட்டு இருக்கேன். உடனடி மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவி பண்றதுதான் அதன் நோக்கம். பிறந்த குழந்தையில் இருந்து 14 வயசுக் குழந்தைங்க வரை உதவிகள் பண்றோம். டிரஸ்ட்டுக்கு அரசாங்க அனுமதி வாங்கி, ஒரு வருஷமா பண்ணிட்டு இருக்கேன். போர்டு மெம்பர்ஸ்ல ரெண்டு டாக்டர்ஸும் இருக்காங்க. ஆனா, டிரஸ்ட் செலவுக்காக நான் சினிமாவுல நடிச்சு வர்ற காசை எடுக்க மாட்டேன். கடைத் திறப்பு விழா, விளம்பர வருமானங்கள் முழுக்க அந்த டிரஸ்ட்டுக்குக் கொடுத்திருவேன். சமயங்கள்ல ஒரே ஒரு ஆபரேஷனுக்கு 20 லட்சம் வரைகூட தேவைப்படும். அப்போ ட்விட்டர், ஃபேஸ்புக்ல என் ரசிகர்களிடம் உதவச் சொல்லி ரிக்வெஸ்ட் அனுப்புவேன். நிறைய டொனேஷன் வரும். ஒரே ஒருத்தரால் அந்தச் செலவைக் கொடுக்க முடியும்னா, நானே பேசி உதவச் சொல்லிக் கேட்டுக்குவேன். என்கிட்ட முடியாதுனு சொல்ல அவங்களுக்குச் சங்கடமா இருக்கும்ல. அதை நல்ல காரியத்துக்காகப் பயன்படுத்திக்குவேன். இந்த விஷயத்துல என் செலிபிரிட்டி இமேஜைப் பயன்படுத்துவதில் எனக்குத் தயக்கமே இல்லை!''

“விஜய் சேதுபதியை ரொம்பப் பிடிச்சிருக்கு!” சர்ப்ரைஸ் சமந்தா

''ரொம்ப நல்ல விஷயம். 'ஜிகர்தண்டா’ பார்த்தீங்களா?''

'இப்போ எதுக்கு இந்தக் கேள்வி?’ ரியாக்ஷன் கொடுக்கிறார். ''பார்த்தேனே... படத்துல சிம்ஹா பெர்ஃபார்மன்ஸ் பார்த்தப்ப, பயங்கர ஷாக்.  என்னா மாதிரி ஒரு ரோல், அதை அவர் எவ்ளோ அழகா எக்ஸிக்யூட் பண்ணியிருந்தார். சான்ஸே இல்லை!''

''அந்தப் படத்துல சித்தார்த்தும் நடிச்சிருந்தாரே... உங்க லவ்வர் பாய் நடிப்பைப் பத்தி எதுவும் சொல்ல மாட்டீங்களா?''

''வெல். இப்போதைக்கு நான் ஒரு ரிலேஷன்ஷிப்ல இருக்கேன். ஆனா, அது யார், என்னன்னு பேச விரும்பலை. நேரம் வரும்போது நானே சொல்றேன். அதுவரை பேசாம அமைதியா இருக்கிறது எனக்கு பெட்டர்!''

-ம.கா.செந்தில்குமார்