Published:Updated:

ராமநாதபுரத்தில் ஒரு போதிதர்மன்!

ராமநாதபுரத்தில் ஒரு போதிதர்மன்!
ராமநாதபுரத்தில் ஒரு போதிதர்மன்!
 

ராமநாதபுரத்தில் ஒரு போதிதர்மன்!

தமிழ் சினிமாக்காரர்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. யூடியூபை வலம் வந்தால் அதிரிபுதிரி காமெடி சேனல்கள் கண்ணில் தட்டுப்பட்டு வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன. ஒரு சாம்ஸங் கேலக்ஸி மொபைல் போனும் அதில் எடிட்டிங் அப்ளிகேஷனும் இருந்தால் போதும். நீங்கள் யூடியூபில் பலரை லைக் பண்ணவைக்கலாம் என உணர்த்தி இருக்கிறார்கள் ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை வாழூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஜுல்ஃபியும் சீனியும்.

போதி தர்மராக, உன்னைப்போல் ஒருவன் கமலாக, துப்பாக்கி விஜயாக, ராவணன் விக்ரமாக, அவன் இவன் விஷாலாக என ஐம்பதுக்கும் மேற்பட்ட வேடங்களைத் தாங்கி ஒரிஜினல் சினிமாக்களை இரண்டு முதல் முன்று நிமிடங்கள் ‘பரோடி’ எனப்படும் லந்து வீடியோக்களை எடுத்து இணையத்தில் விட்டிருக்கிறார்கள். அதிலும் ஹெல்மெட், கேபிள் ஒயர், டிஷ் ஆன்டெனா எனக் கண்டதையும் மாட்டிக்கொண்டு தண்ணீர் தொட்டிக்குள் இருந்து எழுந்து வந்து சண்டை போடும் ‘ஏழாம் அறிவு’ கிளைமாக்ஸ் போதி தர்மரைப் பார்த்தால் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும். ‘k10zulfi’ என்ற அந்த சேனலைப் பார்த்தால் சிரிப்புக்கு கியாரன்டி.

இந்தக் குறும்(பு)படங்களின் டைரக்டர் ஜுல்ஃபிக்கு போன் போட்டேன். கடகடவென வார்த்தைகள் வந்து விழுகின்றன.

ராமநாதபுரத்தில் ஒரு போதிதர்மன்!

‘‘நான் ராமநாதபுரத்தில் அஃப்ரின் மொபைல்ஸ் கடையில வேலை பார்க் கிறேன். கூட வேலை பார்க்கிற சீனி செம ஜாலியான ஆளு. அவரை நீங்க அர்ஜூன் மாதிரி இருக்கீங்கண்ணேனு சொன்னா அர்ஜூனாவே மாறி ‘ஏன்டா டே...’னு அவரை மாதிரியே டயலாக் பேச ஆரம்பிச்சிடுவார். பாடியான ஆளுங்கிறதால அண்ணே நீங்க சாமி விக்ரம் மாதிரி இருக்கீங்கனு உசுப்பேத்திவிட்டு அப்படி நடண்ணே, இப்படி நடண்ணேனு மொபைல்ல எடுத்து போட்டுப் பார்ப்போம். அப்போதான் அந்த யோசனை வந்துச்சு. சாதாரண நோக்கியா 5800 போன்ல ஏழாம் அறிவை உல்ட்டா பண்ணி 77-ம் அறிவுனு ஒரு வீடியோ எடுத்து எடிட் பண்ணிவிட்டோம். நெட்ல ‘பேதி தர்மர்’னு ஷேர் ஆச்சு. அடுத்தடுத்து பில்லா, உன்னைப்போல் ஒருவன், டாப் 5 பாடல்கள்னு வீடியோக்கள் செம பேர் வாங்கித் தந்துச்சி. அதோட நாங்களே சும்மா ஸ்ப்ளெண்டர் ப்ளஸ், ராம்ராஜ் வேட்டிகள்னு எங்க ஸ்டைல்ல விளம்பரங்களை எடுத்து விட்டோம். ஃபேஸ்புக்ல ஷேர் செய்றதுல நிறைய லைக்ஸ். ‘என்னமா காமெடி பண்றீங்கடா’னு ஃப்ரெண்ட்ஸ் ஏத்திவிட்டாங்க. ஒரு கட்டத்துல ‘குற்றம்’னு ஒரு குறும்படத்தை எடுத்தோம். அதையும்கூட ஸ்கிரிப்ட்டா எழுதலை. ஸ்பாட்ல என்ன தோணுச்சோ, அதை நடிச்சுட்டு வந்திடுவோம். ஓவரா சேட்டை பண்ணினா, அவனைக் குறும்படத்துல மர்டர் பண்ணிடு வோம். ராத்திரி் பரோட்டாவும் முட்டை பொடிமாஸும் வாங்கித் தர்ற ஆளுக்கு கேரக்டரை வெயிட் ஆக்கிடுவோம். எல்லாம் தமாஸ்தான். உலகத்திலேயே பேப்பர்ல கதை, வசனம் எதுவும் எழுதாம குறும்படம் எடுத்த முதல் ஆளுங்க நாங்க. சுடுகாடு, கம்மாக்கரை, ஆத்துப்பாலம்னு காலைக்கடன்களை முடிச்சுட்டு ஷூட்டிங்கையும் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்திடுவோம். வேலைக்குப் போயிட்டு ராத்திரி டிபன் சாப்பிடுறதுக்கு முன்னாடி எடிட் பண்ணி ஓடவிட்டுப் பார்ப்போம். சும்மா அதிரவைப்போம்லண்ணே’’ பகபகவென சிரிக்கிறார் ஜுல்ஃபி.

இந்தக் கொடூரக் குறும் படங்களின் ஹீரோ சீனி, ‘‘ஊர்ல எனக்கு நானே ‘ஜெனரேட்டர் ஸ்டார்’னு பட்டம் கொடுத்துக்கிட்டேன். பரோட்டா போடுறதுல ஆரம் பிச்சு பிரியாணி சாப்பிடுறது வரை காமெடியா வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கோம். டி.டி.ஹெச் டெக்னீசியன் வேலையைத் தவிர்த்துட்டு எனக்கு பவர் ஸ்டார் மாதிரி சினிமாவில் பேர் எடுக்க ஆசை. இப்போ லோக்கல் கேபிள் சேனல் வரைக்கும் கூப்பிடுறாங்க. எனக்குதான் சினிமா பக்கம் தாவலாம்னு யோசனை. எனக்கு என்னங்க குறை... நீங்களே சொல் லுங்க’’ என நம்மை சிதறவிட்டார் சீனி.

டெய்ல் பீஸ்: அண்மையில் இவர்களின் வீடியோ அட்ராசிட்டி எல்லைமீறி ஹாலிவுட் வரைக்கும் போய்விட்டது. ‘க்ளோன் வார்ஸ்’ என்ற டீஸரில் சித்தார்கோட்டை வாழூர் கிராமத்தின் மீது பறக்கும்தட்டு ஒன்று விழுந்து நொறுங்கும் காட்சியும் அதைத் தொடந்து ஹாலிவுட் ஸ்டைலில் திஸ் சம்மர் இன் வேர்ல்டு வைட் தியேட்டர்ஸ் என கேப்ஷன் போட்டு ‘க்ளோன் வார்ஸ்’ என மிரளவைத்திருக்கிறார்கள். நீங்களும் செமையா சிரிக்கணும்னா இந்த லிங்க்ஸ் போய்ப் பாருங்க...

ராமநாதபுரத்தில் ஒரு போதிதர்மன்!
ராமநாதபுரத்தில் ஒரு போதிதர்மன்!
ராமநாதபுரத்தில் ஒரு போதிதர்மன்!

  https://www.youtube.com/watch?v=GBWqTKA_dKo
 

- ஆர்.சரண்