Published:Updated:

நான் கானா பாடகன் இல்லை!

நான் கானா பாடகன் இல்லை!
நான் கானா பாடகன் இல்லை!
நான் கானா பாடகன் இல்லை!

'மதுரை பக்கத்தில உள்ள கிராமத்துல திருவிழா. ராத்திரி ஆரம்பிச்சு விடிய விடிய நானும் என் பொண்டாட்டி ரீட்டாவும் கரகாட்டம் ஆடிட்டு விடிஞ்சதும் காசு வாங்கிட்டுப் போகலாம்னு காத்துக்கிடந்தோம். ஆனா, எங்களை இந்தத் திருவிழாவுக்கு புக் பண்ணினவர் அந்தக் காசை வாங்கிட்டு ஓடிட்டார். ஊர்க்காரங்க அடுத்த நாள் திருவிழா வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் கெஞ்சிக்கூத்தாடி, பஸ்ஸுக்கு மட்டும் காசு வாங்கிட்டு மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுக்கு டவுன் பஸ்ஸில் போகும்போது வைகை ஆத்தைத் தாண்டுச்சு. அப்போ மனசுல நெனச்சேன்... இந்த வைகை ஆத்து மண்ணு ஒரு நாள் என் பேரைச் சொல்லும்னு' என்று சொல்லிவிட்டு...

''ஏய் பாண்டி நாட்டு கொடியின் மேலே

தாண்டிக் குதிக்கும் மீனைப்போல

சீண்டினாக்க யாரும்

ஹேய்,  நான் அலங்காநல்லூர் காளை

வைகை மண்ணும் சொல்லும் என் பேரை

என் பேரைச் சொன்னா...

புழுதி பறக்கும் பாரேன்!'

தன் உச்சக்குரலில் பாடத் தொடங்குகிறார் அந்தோணிதாசன். அத்தனை கொண்டாட்டமாகப் பாடிக்கொண்டிருக்கும்போதும் கண்களில் நீர் திரளு கிறது. அந்தோணிதாசன், தமிழ் சினிமாவில் தன் குரலால் வென்ற வெள்ளந்தியான எளிய மனிதர்.

''என் அப்பா நாதஸ்வரக் கலைஞர், அம்மா, கட்டடத் தொழிலாளி. நானும் அக்காவும். நாட்டுப்புறக் கலைஞனுக்கே விதிக்கப் பட்ட வறுமையைத் தவிர வேறொண்ணும் பெருசா இல்லை.  ஆனா ஜெயிச்சே தீரணும்னு நெனப்பு மட்டும் மாறவேயில்லை. எத்தனை அவமானம், எத்தனை தோல்வி. சின்ன வயசில் சர்ச்சில் ஒரு திருப்பலி அன்னிக்கு பிரசங்கம் செஞ்ச ஃபாதர் 'மனிதன் என்றால், ஏதோ இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும். அந்தப் பயணத்தில் வரும் தோல்விகளை சட்டை செய்யக் கூடாது’னு பேசினார். எட்டு வயசில கேட்ட அந்தப் பேச்சுதான் மனசில ஆணியா அடிச்சுக்கெடக்கு.

அப்பா போகிற நிகழ்ச்சிக்கு சுருதிப் பெட்டி வாசிக்க  ஆரம்பிச்சு அப்படியே கரகாட்டம் ஆடுறவங்க குழுவில பஃபூனா போக ஆரம்பிச்சேன். படிப்படியா 14 வயசிலேயே குறவன் குறத்தி ஆட்டம் ஆடுற அளவுக்குத் தொழிலைக் கத்துக்கிட்டேன். கொஞ்சம் கொஞ்சம் சொந் தமா பாட்டெழுதி தஞ்சை அந்தோணிங்கிற பெயரில் நாட்டுப்புறப்பாடல் கேசட் வெளியிட்டேன்.

'சென்னை சங்கமம்’ விழாவில் நிகழ்ச்சி பண்ண என் உறவினரும் பிரபல பாடகியுமான சின்னப் பொண்ணு அக்காகூட வந்திருந்தேன். அந்த விழாவில் நடிகர் கருணாஸ் அண்ணனை அறிமுகப்படுத்தி வெச்சாங்க.  'திண்டுக்கல் சாரதி’ படத்தில,  'திண்டுக்கல்லு திண்டுக்கல்லு’ பாடலை என்னைப் பாடவெச்சு அறிமுகப் படுத்தினார். தொடர்ந்து சந்தோஷ் நாராயணன், ஷான் ரால்டன் போன்ற இசையமைப்பாளர்கள் வாய்ப்பு கொடுத்து 'சூது கவ்வும்’ , 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, 'குக்கூ’, 'முண்டாசுப் பட்டி’, 'ஜிகர்தண்டா’, 'சதுரங்கவேட்டை’, 'சிகரம் தொடு’ வரைக்கும் பாடியாச்சு. காந்த் தேவா, கார்த்திக் ராஜா, இமான் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில் பாடிட்டு இருக்கேன். 'ஜிகர்தண்டா’வில் 'பாண்டி நாட்டு கொடி’ பாட்டு மூலமா பாடலாசிரியராகவும் ஆகிட்டேன்' என்று பெருமிதமாகச் சிரிக்கிறார்.

''ஆனா சினிமாவுக்கு முன்னாடியே  எம்.டிவி வரைக்கும் போயிட்டிங்க போல?'

''ஆமாம், அதே 'சென்னை சங்கமம்’ விழாவில் பால் ஜேக்கப்னு ஒருத்தர் அறிமுகமானார். அவர்தான் எம்.டிவியின் 'லா பொங்கல்’  நிகழ்ச்சியில் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அந்த நிகழ்ச்சிக்குப் போன பிறகுதான் தெரிஞ்சது இந்திய பாப் ஸ்டார் உஷா உதுப் அம்மாகூட பாடப்போறேன்னு. என்னை மாதிரி சாமானியனுக்கு எளிதில் கிடைக்காத வாய்ப்பு அது.'

''உங்கள் குடும்ப வாழ்க்கை பத்தி சொல்லுங்க?''

நான் கானா பாடகன் இல்லை!

''காதல் திருமணம். என் மனைவி என்னைப் போன்ற கரகாட்டக் கலைஞர். இப்போ அவங்களும் சினிமா பாடகி ஆகிட்டாங்க. 'ஜிகர்தண்டா’ படத்தில என்கூட 'கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சா’ பாட்டு பாடியிருப்பாங்க. அவங்களைக் காதலிக்கும்போது எனக்கு 15 வயசு. அவங்களுக்கு 14 வயசு. ஆரம்பத்தில் என்னைக் கண்டுக்கவேயில்லை. நிகழ்ச்சியில் பழைய சினிமா சோகப் பாடலா பாடி கரெக்ட் பண்ணி கட்டிக்கிட்டேன். மூணு புள்ளைங்க. எல்லாம் நல்லா படிக்குதுங்க. நாங்க பெரிய கூட்டுக் குடும்பமா வாழுறோம். அவங்க காட்டும் அன்பில் சுமையெல்லாமே சுகமாத்தான் தெரியுது.''

''கானா பாடல்களும் பாடுறீங்களா?''

''இல்லைங்க, என்னை எல்லோரும் கானா பாடகன்னு நெனச்சிட்டு இருக்காங்க. நான் அடிப்படையில் நாட்டுப்புறப் பாடகன். கிராமத்துப் பின்புலத்தில் இருந்து வந்தவன். கானா என்பது சென்னை நகர உழைக்கும் மக்களின் இசை. நகரத்து உழைக்கும் மக்களின் இசைக்கும் கிராமியப் பாடல்களுக்கும் நிறைய வேறுபாடு இருக்கு. ஆனா என் மனசில பாடகனாக ஆகணும்கிற விதை விழுந்ததுக்கு கானா பாடல்களும் காரணம்.'

''அடுத்து சினிமாவில் என்ன சாதிக்கணும்னு ஆசைப்படுறீங்க?''

'' தாய்ப்பால் மாதிரி இசைப்பால் ஊத்தி எங்களைப் போன்ற கலைஞர்களை வளர்க்கும் அய்யா இளையராஜாவின் இசையில ஒரே ஒரு பாட்டு பாடினாகூட போதுங்க. லட்சம் கோடியெல்லாம் வேண்டாம். அதுவே பிறப்பின் பயனை அடைஞ்சதுக்கு சமம்.''

செந்தில்குமார், படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

நான் கானா பாடகன் இல்லை!