Published:Updated:

“இனி ஆரம்பிங்க உங்க ஆட்டத்தை!”

“இனி ஆரம்பிங்க உங்க ஆட்டத்தை!”
“இனி ஆரம்பிங்க உங்க ஆட்டத்தை!”

மொக்கை வாங்குவது ஒரு கலை; கலாய்க்கப்படுவது ஒரு நிலை. 'கடைசியாக நீங்கள் எப்போது மொக்கை வாங்கினீர்கள் அல்லது கலாய்க்கப்பட்டீர்கள்?’ என்று கேட்டபோது...

சென்ராயன்:

''என் சொந்த ஊர் போடி. சினிமா வாய்ப்புக்காக சென்னைக்கும் போடிக்கும் அலைஞ்சிட்டு இருந்தேன். போடியில் இருந்தப்ப திடீர்னு ஒரு போன். 'சென்னைல ஒரு புரொடக்ஷன் டிபார்ட்மென்ட்ல இருந்து பேசுறோம். நாங்க எடுக்கப்போற படத்துல உங்களுக்கு முக்கியமான கேரக்டர். சம்பளம் பேசணும். நாளைக்கு ஆபீஸுக்கு வந்திடுங்க’னு சொல்லி போனை வெச்சுட்டாங்க. ஒரு பக்கம் சந்தோஷம்; மறுபக்கம் கவலை. ஏன்னா, சென்னைக்குப் போறதுக்கு கைல சல்லிக்காசு இல்லை. அப்பா உடனே அவருக்கு சீதனமா வந்த சைக்கிளை வித்து பணம் கொடுத்தார். ஆசை ஆசையா கிளம்பி கிண்டி வந்து இறங்கி அந்த நம்பருக்கு போன் பண்ணினேன். 'டேய் மச்சான், நான்தான்டா முருகன் பேசுறேன். இன்னைக்கு ஏப்ரல் ஒண்ணு. அதான் விளையாட்டா போன் பண்ணேன்’னு சிரிக்கிறான். அன்னைக்கு அவன் வாங்கின திட்டை, அவனால வாழ்க்கைக்கும் மறக்க முடியாது!''

“இனி ஆரம்பிங்க உங்க ஆட்டத்தை!”

முருகதாஸ்:

''பொள்ளாச்சியில் ஷூட்டிங். அதுக்காக கோவை ரயில்வே ஸ்டேஷன்ல போய் இறங்கினேன். புரொடக்ஷன் கார் வர்ற வரை ஓரமா ஒதுங்கி நின்னேன். ஒரு பொண்ணு என்னைப் பார்த்துட்டுச் சிரிச்சுக்கிட்டே இருந்துச்சு. எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்க ஆரம்பிச்சிருச்சு. என் பக்கத்துல வேற யாரும் இல்லை. 'நீங்க சினிமா ஆக்டர்தானே? உங்க நடிப்பு சூப்பரா இருக்கு. அதுவும் லவ்வுக்கு ஹெல்ப் பண்றது, ஐடியா குடுக்கிறது எல்லாம் ரொம்ப சூப்பர்’னு சொல்லுச்சு. நான் அப்டியே பறக்க ஆரம்பிச்சிட்டேன். கொஞ்சம் தயங்கி, 'உங்க நம்பர் கிடைக்குமா?’னு கேட்டுச்சு. நான் நம்பர் கொடுக்கவும், 'உங்களுக்குக் கல்யாணம் ஆகிருச்சா?’னு கேட்டுச்சு. 'இல்லைங்க... நீங்க எப்ப வேணும்னாலும் கூப்பிடலாம்’னு சொன்னேன். உடனே அதுக்கு அந்தப் பொண்ணு, 'நீங்க இவ்வளவு சிம்பிளா இருப்பீங்கனு நினைச்சுக்கூடப் பார்க்கலை. நான் ஒரு பையனைக் காதலிக்கிறேன். ரெண்டு பேர் வீட்லயும் பிரச்னை. சினிமாவில் ஐடியா சொல்லி சேர்த்து வெக்கிற மாதிரி எங்களையும் நீங்கதான் சேர்த்துவெக்கணும்’னு சொல்லுச்சு பாருங்க. எனக்குத் தலை சுத்திருச்சு. 'ஸாரி... சிஸ்டர்’னு கிளம்பி வந்துட்டேன்!''

“இனி ஆரம்பிங்க உங்க ஆட்டத்தை!”

அமுதவாணன்:

''திண்டுக்கல் பக்கத்துல ஒரு கோயில் திருவிழா நிகழ்ச்சி. 'தம்பி... வெளிநாட்ல செட்டில் ஆனவங்க, அவங்க நண்பர்கள் எல்லாம் வருவாங்க. பிரமாண்டமாப் பண்ணியிருக்கோம். டிரெஸ்ல இருந்து எல்லாம் காஸ்ட்லியா இருக்கணும்’னு கண்டிஷன் போட்டாங்க. 'செம ஆஃபர். வந்தவங்களுக்குப் பிடிச்சுப்போச்சுன்னா ஃபாரின்ல இருந்தெல்லாம் ஆஃபர் வரும்ல’னு ஆர்வமா கோட், சூட், ஷூ, டை... எல்லாம் வாங்கினோம். ஆறரை மணிக்கு நிகழ்ச்சினு சொல்லியிருந்தாங்க. யாரும் கூப்பிடலை. கேட்டதுக்கு, 'தேர் வந்துட்டுப் போகட்டும். உடனே ஆரம்பிச்சிடலாம்’னு சொன்னாங்க. தேர் வந்து போய் மணி பத்தும் ஆச்சு. 'தம்பி நீங்க நிகழ்ச்சியை ஆரம்பிச்சு ஒன்றரை மணி நேரம் நடத்துங்க. மத்த அயிட்டங்களை ரெண்டு மணிக்கு மேல வெச்சுக்கலாம்’னாங்க.

'நம்ம மொத்த நிகழ்ச்சியே ஒன்றரை மணி நேரம்தானே.. இவங்களை எப்படிச் சமாளிக்கிறது’னு கன்ஃபியூஸ் ஆகிட்டோம்.  நேரம் ஆக ஆக ஊர் மக்கள் பாய், தலையணையோட வந்து உக்காந்தாங்க. 'இதுதானா உங்க ஃபாரின் மக்கள்’னு தலையில் அடிச்சுக்கிட்டு புரோகிராம் பண்ணினோம்.

புதுக்கோட்டை பக்கத்துல ஒரு கிராம நிகழ்ச்சி. சென்னையில் இருந்து ஒரு டான்ஸ் ட்ரூப்புக்குச் சொல்லியிருந்தாங்க. நடுநடுவே நாங்க மிமிக்ரி பண்ணணும். 9 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குச்சு. 11 மணி  போல  வேடிக்கை பார்த்த பெண்கள் எல்லாம் கிளம்பிட்டாங்க. கொஞ்ச நேரத்துல ஒரு பெரியவர் வந்து, 'தம்பி... எல்லாப் பொம்பளையாளுங்களும் போயிட்டாங்க. இனி ஆரம்பிங்க உங்க ஆட்டத்தை’னு குஷியாச் சொன்னார். 'என்ன ஆட்டம்?’னு புரியாமக் கேட்டா, 'அரைகுறை  டிரெஸ்ல கிளுகிளுப்பா ஆடுவீங்களே.. தெரியாத மாதிரியே கேக்கிறீங்களே’னு சிரிக்கிறார். எங்களுக்கு செம ஷாக். டான்ஸ் ஆட வந்தவங்க அத்தனை பேரும் காலேஜ் பொண்ணுங்க.  துணைக்கு அவங்க வீட்ல இருந்தும் ஆளுங்க வந்திருந்தாங்க. கடைசியா டீசன்ட்டாவே ஆடி சமாளிச்சோம்!''

- ம.கா.செந்தில்குமார், ஓவியங்கள்: ஹரன்