Published:Updated:

பாலசந்தரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது: கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் தலைவர்கள் இரங்கல்!

பாலசந்தரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது: கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் தலைவர்கள் இரங்கல்!
பாலசந்தரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது: கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் தலைவர்கள் இரங்கல்!

சென்னை: திரைப்பட இயக்குனர் பாலசந்தரின் மறைவு, திரை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
இதுகுறித்து முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ''பழம்பெரும் திரைப்பட இயக்குனரும், ரசிகர் பெருமக்களால் 'இயக்குனர் சிகரம்' எனவும் அன்புடன் அழைக்கப்பட்ட கே.பாலசந்தர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி தனது 84வது அகவையில் (23.12.14) உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

அன்பும், அடக்கமும், எளிமையும் மிகுந்த பாலசந்தர் கலையுலக வாழ்வு திண்ணை நாடகங்கள் மூலம் தான் அரங்கேறியது. மத்திய அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டே அவர் நடத்திய, 'மேஜர் சந்திரகாந்த்', 'எதிர் நீச்சல்', 'நாணல்', 'விநோத ஒப்பந்தம்' போன்றவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற பிரபல நாடகங்கள்.

பாலசந்தர், 'நீர்குமிழி' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பல வெற்றி படங்களை இயக்கினார். அவரது திரைப்படங்கள் பெண்களை மையமாக வைத்து சமூகத்தில் அவர்கள் படும் துன்பங்களையும், துயரங்களையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கும். தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்ரி இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகிலும் தடம் பதித்து வெற்றி கொடியை நாட்டியவர் பாலசந்தர்.

அவர் இயக்குனராக மட்டுமின்றி கதை, திரைக்கதை, வசனம் போன்ற துறைகளிலும் மிளிர்ந்தவர். அவர் தான் இயக்கிய திரைப்படங்களில் உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் புது வர்ணம் பூசி திரையுலகிற்கு புது இலக்கணம் வகுத்து தந்தவர். தொலைக்காட்சிகளில் வெளியாகும் இக்கால நெடுந்தொடர்களுக்கு இவர் தான் வித்திட்டவர்.

பாலசந்தர் எண்ணற்ற தேசிய மற்றும் மாநில விருதுகளைப் பெற்று திரையுலகிற்கு பெருமை சேர்ந்த்துள்ளார். இந்திய சினிமாவிற்கு அவர் அளித்த ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக 'தாதா சாகேப் பால்கே' விருது அவருக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

பாலசந்தர் மறைவு, திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். திரையுலகில் அவர் விட்டுச் சென்ற இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது" என்று கூறியுள்ளார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

வைகோ இரங்கல்...

பாலசந்தர் மறைவுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''தமிழக கலை உலகத்தின் ஈடற்ற படைப்பாளியான இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், அளவற்ற துக்கமும் அடைந்தேன். புதல்வரின் மறைந்த துக்கம் கேட்க அவரது இல்லம் சென்றபோது, அவருடன் மூன்று மணிநேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். நாடகத் துறையில் அவர் படைத்த நாடகங்களும், வெள்ளித்திரையில் அவர் உருவாக்கிய அமரகாவியங்களும் என் மனதை முழுமையாக ஈர்த்ததைப் பற்றி சொன்னேன்.

அவர் தந்த ‘அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, சிந்து பைரவி, தண்ணீர் தண்ணீர், நீர்க்குமிழி, மேஜர் சந்திரகாந்த், வறுமையின் நிறம் சிவப்பு, எதிர்நீச்சல், இருகோடுகள், வானமே எல்லை’ இவற்றைக் குறிப்பிட்டபோது, இருகோடுகளில் அவர் சித்தரித்த அறிஞர் அண்ணா, புற்றுநோயால் மிகவும் உடல் நலம் குன்றியபோதும் கூட தனது விருப்பத்தை அறிந்து எதிர்நீச்சல் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய பண்பாட்டை கூறினார்.

இன்றைய சமூகத்தைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார். அவர் மறைந்தாலும் அவரது படைப்புகள் காலத்தைக் கடந்து வாழும். அவரை இழந்து கண்ணீரில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

ராமதாஸ்...

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ''தமிழ் திரையுலகின் அழிக்க முடியாத அடையாளங்களில் பாலச்சந்தர் முக்கியமானவர். நாடகத் துறையில் தமது கலைப் பயணத்தைத் தொடங்கிய அவர், திரையுலகிலும் அறிமுகமாகி அதன் அனைத்து பரிமாணங்களையும் கண்டவர்.

திரைப்படங்களில் புதுமைகளைப் புகுத்திய பாலச்சந்தர், சமூக அவலங்களை சாடவும் தவறவில்லை. 9 தேசிய விருதுகள், கலையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உட்பட அவர் பெற்ற எண்ணற்ற விருதுகளே திரையுலகில் அவர் செலுத்திய ஆளுமையை வெளிப்படுத்தும்.

மொத்தத்தில் தமிழ் திரையுலக வரலாற்றை எழுதுவதாக இருந்தால் பாலச்சந்தரை தவிர்த்து விட்டு எழுத முடியாது என்பது தான் அவரது சிறப்பும், பெருமையும் ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

பாலசந்தரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது: கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் தலைவர்கள் இரங்கல்!ஜி.கே.வாசன்...


தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''கே.பாலசந்தரின் புகழ் நேற்று, இன்று, நாளை என்று திரையுலகில் என்றும் ஒரு வரலாறாக இருக்கும். எளிமைக்கும், பண்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியவர். கே.பாலசந்தர் குடும்பத்திற்கும் எங்கள் குடும்பத்திற்கும் 40 ஆண்டுகால பழக்கம் உண்டு என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அவரது மறைவால் இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கலைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

கி.வீரமணி...

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''பல திரைப்படக் கலைஞர்களை உருவாக்கிய நாணயச்சாலை போன்றவர் இயக்குனர் கே.பாலசந்தர். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், கலை உலகத்தாருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.

சீமான் இரங்கல்...

நாம் தமிழர் கட்சியின் தலைவரும் இயக்குனருமான சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''நாடகக் கலைஞராக கலையுலகில் அடியெடுத்து வைத்த அய்யா பாலசந்தர், தமிழ்த் திரையுலகில் நிகழ்த்தாத புரட்சி இல்லை. சாதியமும் மதப்பிடிப்பும் பெரிதாக நிலவிய அந்த காலகட்டத்திலேயே யாரும் நினைத்துப் பார்க்க முடியாத புதுமைகளை நிகழ்த்திக்காட்டிய பெருமை பாலசந்தரையே சேரும். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும் மிகப் பிரசித்தியான நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியும் தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியவர் பாலசந்தர்.

நாகேஷ், கமலஹாசன், ரஜினிகாந்த், சரிதா, சுஜாதா, மேஜர் சுந்தர்ராஜன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட எத்தனையோ கலைஞர்களைத் தமிழ்த் திரையுலகுக்கு அடையாளப்படுத்தி வைத்த கலையுலக கண்டுபிடிப்பாளர் அவர். தனது இறுதிக்காலம் வரை இளைய தலைமுறை கலைஞர்களுக்கும் மாற்று சிந்தனையோடு வந்தவர்களுக்கும் ஊக்கமளித்து உதவியது அவரது தனிச்சிறப்பு. தனக்கு பிடித்த திரைப்படங்களைப் பாராட்டி, தனது கைப்படவே கடிதம் எழுதி சம்பந்தப்பட்டவர்களை ஊக்கப்படுத்தும் நற்குணம் கொண்டவர்.

பாலசந்தரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது: கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் தலைவர்கள் இரங்கல்!விவசாயம், சாதியம், தமிழிசை, கலப்பு திருமணம், தேசப்பற்று என சகலவிதமான விதைப்புகளையும் மிகுந்த தைரியத்துடன் தனது படங்களில் செய்துகாட்டியவர். மிக உயரிய பால்கே விருதைப்பெற்ற பாலசந்தர், தனது இறுதிக்காலம் வரையிலும் தமிழ்த் திரையுலகின் ஆக்கபூர்வங்களுக்காகவே பாடுபட்டவர். உடல்நிலை நலிவுற்ற போதும் உத்தமவில்லன் படத்தில் நடித்த அவருடைய ஆர்வமும் பிடிப்பதும் வேறு எவருக்குமே கைவராதது. கலையுலகில் மட்டுமல்லாது தனிப்பட்ட வாழ்விலும் மிகுந்த கண்ணியத்துடன் வாழ்ந்த அந்த பெருமகனின் இழப்பு தமிழ் கூறும் நல்லுலகின் பேரிழப்பு.

அவரின் குடும்பத்துக்கும், கோடிக்கணக்கான அவர் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை நாம் தமிழர் கட்சி தெரிவித்துக்கொள்கிறது. பாலசந்தர் பெயரில் விருதுகளை அறிவித்து மத்திய, மாநில அரசுகள் அந்த நிகரற்ற கலைஞரை கௌரவிக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

ஈஸ்வரன் இரங்கல்...

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தனது இரங்கல் செய்தியில், ''தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் மறைவு, தமிழ் சமூகத்திற்கு மிகப் பெரிய பேரிழப்பு. வெற்றி, தோல்வி ஆகிய இரு துருவங்களையும் ஒரே நேரத்தில் தமது திரையுலக வாழ்வில் அனுபவித்தவர் அவர். சிறந்த படைப்பாளிகளை தட்டி கொடுப்பதும், மனம்விட்டு பாராட்டுவது போன்ற நற்குணங்களை சக படைப்பாளிகள் அவரிடம் கற்றுகொள்ள வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.