Published:Updated:

ரத்தம்.. சண்டை : 'அரவான்' வசந்தபாலன்

Vikatan Correspondent

ஆதி, பசுபதி, பரத், தன்ஷிகா, அர்ச்சனா கவி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கும் படம் 'அரவான்'. வசந்தபாலன் இயக்க, பாடகர் கார்த்திக் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்து இருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (அக்டோபர் 12) சென்னையில் நடைபெற்றது. முன்னதாக திரையிடப்பட்ட ட்ரெய்லரும், இரு பாடல் காட்சிகளும் பெரிதும் வியக்க வைத்தது.

அவ்விழாவில் இசையமைப்பாளர் கார்த்திக்  " வழக்கமாக இசையமைப்பாளர்கள் அழைத்ததும் போய் ரெண்டு மணி நேரத்தில் பாடி கொடுத்துவிட்டு கைநிறைய சம்பளத்தை வாங்கி வந்துதான் எனக்கு பழக்கம். அந்த பாடல் வரவேற்பை பெற்றால் பெரிதும் மகிழ்வேன். இல்லையென்றால் அதுபற்றி அதிகம் பேச மாட்டேன். ஆனால் திடீரென்று வசந்தபாலன் என்னை அழைத்து நீங்க இப்படத்திற்கு இசை அமைக்கிறீர்களா?  என்று கேட்டபோது ஆர்வத்தில் சரி என்று சொல்லிவிட்டேன். அப்புறம்தான் தெரிந்தது. அது எவ்வளவு கஷ்டமான வேலை என்று. ஆனால் ஒருமுறை கூட எனக்கும் வசந்த பாலனுக்கும் நடுவே சண்டை வந்தது இல்லை " என்றார்.

இயக்குனர் வசந்தபாலன்  " கார்த்திக் அப்படி சொன்னது சும்மா சபை நாகரிகத்துக்காக. தினமும்  எங்களுக்குள் சண்டை இல்லாமல் எந்த வேலையும் முடிந்ததில்லை. படத்திற்கு பாடல்கள் ரொம்ப ரொம்ப முக்கியம். அது வரவேற்பை பெறுவது என்பது ஒரு படத்திற்கு மிகவும் அவசியம் என்பதால் நான் அவரை கசக்கி பிழிந்துவிட்டேன். பலமுறை எனக்கும் நா.முத்துக்குமாருக்கும் கூட சண்டை வந்திருக்கிறது. நான் பாட்டெழுத மாட்டேன் என்று கோபித்துக் கொண்டு போய்விடுவார். ரெண்டு நாள் கழித்து, 'என்ன.. அந்த வரியை மாத்திட்டீங்களா?' என்பேன் நான்.

பாடல் உருவான விதம் இப்படி என்றால், இந்த படத்திற்காக தன்னை வருத்திக் கொண்ட எல்லாரைப் பற்றியும் நான் இங்கே குறிப்பிட வேண்டும். ஆதிக்கும் பசுபதிக்கும் தினமும் ரத்த காயமில்லாமல் படப்பிடிப்பு முடிந்ததே இல்லை. படப்பிடிப்புக்கு வந்த முதல் நாளே ஆதியை மரத்தில் கட்டி வைத்துவிட்டேன். சட்டையில்லாத அவரது உடம்பில் எறும்புகளும் பூச்சிகளும் ஏறி கடித்து தள்ளின. அதையெல்லாம் பொறுத்துக் கொண்டார் அவர்.

ஆதியின் கட்டுமஸ்தான உடல்வாகும், நடிப்பும் அவரை இந்திய சினிமாவில் முக்கியமான இடத்திற்கு கொண்டு செல்லும். ஒரு பாடல் காட்சியில் தன்ஷிகாவை விட ஆதி மிகவும் அழகாக இருக்கிறார். இந்த படத்தில் அவர் செய்திருப்பது எல்லாமே அவரது தகுதிக்கு ரொம்பவே குறைவு என்றுதான் சொல்வேன்.

நான் பிரச்னைகளை தேடிப் போய் ரசிக்கிறவன். 'அங்காடி தெரு'வில் அப்படி ஒரு பிரச்னை வந்ததும், வேறு மாதிரி ஒரு படம் எடுக்கலாமே என்று இந்த கதையை எடுத்திருக்கிறேன். 18 ம் நூற்றாண்டில் நடக்கிற கதை. அந்த வாழ்க்கையை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறேன் என்று நம்புகிறேன். நீங்க பார்த்துட்டு சொல்லுங்க " என்றார்.