Published:Updated:

“நானா பிரச்னை செய்கிறேன்?”

“நானா பிரச்னை செய்கிறேன்?”
“நானா பிரச்னை செய்கிறேன்?”

      ஒருபுறம் ‘அவரா இவர்?’ என்று யோசிக்கும்படி ஆபாசப்பட சர்ச்சையில் சிக்கினாலும் ‘காக்கிச் சட்டை’யைத் தொடர்ந்து, ‘பென்சில்’, ‘ஈட்டி’ தவிர தெலுங்கில் ஒரு படம் என திவ்யா ஆல்வேஸ் பிஸி. அறிமுகமானபோது அழகுத் தமிழில் பேட்டி கொடுத்த திவ்யா ‘எனக்குத் தமிழ் கொஞ்சம் தகறாறு’ என சிரித்துக்கொண்டே ஆரம்பிக்கிறார்.

‘‘முதல் படம் கிராமம் சார்ந்தது. அடுத்த படம் நகரம் சார்ந்தது. உங்களுக்குப் பிடித்தது வில்லேஜ் ஆடியன்ஸா? சிட்டி ஆடியன்ஸா?”

‘‘ரெண்டுமே பிடிக்கும். ஆனா, ரொம்ப பிடிச்சது கிராமத்துக்காரங்கதான். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் ரிலீஸ் ஆன நேரம். கடை திறப்பு விழாவுக்காக ஒரு கிராமத்துக்குப் போனேன். நிகழ்ச்சி முடிஞ்சு கார்ல கிளம்பியதும், பைக்ல 50, 60 பேர் என்னைப் பின்தொடர்ந்து வந்துட்டு இருந்தாங்க. என்னைப் பார்க்க இத்தனை பேரானு ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும், லாரி பஸ்ஸெல்லாம் அதிவேகத்துல போற அந்த ரோட்டுல இவங்க இப்படி வர்றது எனக்கு பயமா இருந்துச்சு. அவங்களுக்கு ஏதாவது ஆயிடுமோனு பயந்து கார் கண்ணாடியை இறக்கிவிட்டு, ‘ப்ளீஸ் போங்க’னு டாட்டா காட்டினேன். அப்புறமும் போகாம, ‘பரவாயில்லை மேடம். நாங்க கொஞ்ச தூரம் வர்றோம்’னு பின்னாடியே வந்தாங்க. அந்தச் சம்பவத்தை என்னால மறக்கவே முடியலைங்க. இப்போ நினைச்சுப் பார்த்தாலும் உதறுது. என்மேல இத்தனை அன்பா?”

“நானா பிரச்னை செய்கிறேன்?”

‘‘அதனாலதான் 2014-ம் ஆண்டின் ‘கனவுக்கன்னி’னு உங்களைத் தேர்ந்தெடுத்திருக்காங்க”

‘‘ஆமாங்க. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.  தமிழ்நாட்டு ரசிகர்கள் மட்டும் பாராட்டினா பரவாயில்லை. தெலுங்கு ரசிகர்கள் ‘நம் ஊர் பொண்ணு தமிழ் சினிமாவில் கலக்குது டோய்’னு குஷியாகி வாழ்த்துறாங்க. என் மேல நிறைய எதிர்பார்ப்பு இருக்கு. அதை முதல்ல ரீச் பண்ணிடணும். இப்போவெல்லாம் கால்ஷீட் கொடுக்கிறதோட நின்னுடாம, என்ன கதை, எனக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்குனு நல்லா விசாரிச்சுட்டுதான் நடிக்கிறேன். என் ரசிகர் களை இன்னும் சந்தோஷப் படுத்தணும்ல?”

‘‘பெரிய ஹீரோக்களோட ஜோடி போடுற ஐடியா இல்லையா?”

‘‘இருக்கு. ஆனா அதுக்குனு ஒரு டைம் வரணும்ல? நல்ல கதை, நல்ல கேரக்டர் கொடுத்தா எந்த ஹீரோவுக்கும் ஜோடியா நடிப்பேன். சிவகார்த்திகேயன், ஜீ.வி.பிரகாஷ், அதர்வா, மலையாளத்தில் ஹிட்டான ‘பெங்களூர் டேஸ்’ தமிழ், தெலுங்கு ரீமேக்ல ஆர்யாவோட நடிக்கிறேன். இது தவிர, கார்த்தி சாரோட ஒரு படம் ஒப்பந்தமாகியிருக்கேன்.’’

“நானா பிரச்னை செய்கிறேன்?”

‘‘ ‘பெங்களூர் டேஸ்’ல சமந்தா நடிக்க இருந்த கேரக்டரைத்தான் நீங்க பறிச்சிட்டீங்களாமே?”

‘‘டைரக்டர் எனக்கு போன் பண்ணி, ‘பெங்களூர் டேஸ்’ ரீமேக்ல நடிக்கிறீங்களானு கேட்டார். பொதுவா எனக்கு ரீமேக் படங்கள்ல நடிக்க விருப்பம் கிடையாது. ஆனா, டைரக்டர் பாஸ்கர் சார் ‘இல்லை. இந்தப் படத்தை நாம அப்படியே ரீமேக் பண்ணப் போறதில்லை. நிறைய சேஞ்ச் பண்ணியிருக்கோம்’னு சொன்னதும்தான் கதை கேட்டேன். அப்புறம்தான் ஓகே சொன்னேன். அதுவரை சமந்தாவுக்குப் பதிலா நான் செலக்ட் ஆகியிருக்கேனு  தெரியாது. மறுநாள் பேப்பர் படிக்கும்போதுதான் ‘சமந்தா வாய்ப்பைத் தட்டிப்பறித்த திவ்யா’னு செய்தி பார்த்தேன். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க?’’

‘‘நடிகைகளோட ஆபாசப் படங்கள், வீடியோக்கள் தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கு. எப்படி?”

‘‘அதையெல்லாம் நான் கேர் பண்ணவே இல்லை.  ஏன்னா, பப்ளிசிட்டி இருக்கிற நடிகைகளைத்தானே இந்த மாதிரி ‘மார்ஃபிங்’ செஞ்சு விளையாடுவாங்க. ஆனா, இதனால அவங்களுக்கு என்ன கிடைக்கப் போகுதுனுதான் தெரியலை. இவ்ளோ கஷ்டப்பட்டு மார்ஃபிங் பண்ற நேரத்தை நல்லது பண்றதுக்காக செலவழிச்சிருக்கலாம். சரி, விடுங்க... அவங்களுக்கு ஒரு அற்ப சந்தோஷம். அவ்வளவுதான்.’’

‘‘நீங்க நடிச்ச முதல் இரண்டு தமிழ்ப் படங்களான ‘காட்டுமல்லி’, ‘நகர்ப்புறம்’ படங்களுக்கு என்ன பிரச்னை?”

‘‘ ‘நகர்ப்புறம்’ ரிலீஸுக்கு ரெடினு கேள்விப்பட்டேன். ‘காட்டுமல்லி’ படத்தை ஒரு காட்டுல படமாக்கினாங்க. அது சீஸனை அடிப்படையா வெச்சு உருவாக்கிய கதை. முதல் தடவை ஷூட்டிங் போயிருந்தப்போ மழை, வெள்ளம்னு ஷூட்டிங்கை முடிக்கலை. திரும்ப அதே சீஸன்லதான் ஷூட்டிங்னு சொன்னாங்க. ஆனா, அதுக்கப்புறம் யாருமே என்னை அணுகவே இல்லை. நானும் அடுத்தடுத்த படங்கள்ல பிஸியாகிட்டேன். இப்போ திடீர்னு ‘காட்டுமல்லி’ படத்துக்கு நான்தான் பிரச்னை பண்ணிட்டு இருக்கேனு செய்தி பரப்புறாங்க. நான் என்னங்க பண்ணேன்? என்னால எப்படி பிரச்னை ஆகும்?”

சொல்லுங்கண்ணே சொல்லுங்க! 
- கே.ஜி.மணிகண்டன்