Published:Updated:

ஆறு படங்கள் சேர்ந்து ஒரு படம்!

ஆறு படங்கள் சேர்ந்து ஒரு படம்!
ஆறு படங்கள் சேர்ந்து ஒரு படம்!

குறும்படங்கள் இப்போ பெருசாச்சு. ஆம். கடந்த வாரம் சென்னையின் முக்கியமான தியேட்டர்களில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தன் நண்பர்களோடு இணைந்து உருவாக்கிய ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனத்தின் செயல்பாடாக ‘பெஞ்ச் டாக்கீஸ்’ என்ற படத்தை ரிலீஸ் செய்திருந்தார். இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஆறு குறும்படங்களின் தொகுப்பே இந்த ‘முழுநீள’ திரைப்படம்.

அனில் கிருஷ்ணன் இயக்கிய ‘தி லாஸ்ட் பேரடைஸ்’ செம க்ளாஸிக். வசனமே இல்லாமல் வெறும் உடல்மொழிகளாலும் பின்னணி இசையாலும் கவித்துவமான குறும்படம். சிறையிலிருந்து பல வருடங்களுக்குப் பிறகு வெளியே வரும் வாய் பேச முடியாத ஒருவர் தன் வீட்டைக் கண்டடையும் பயணமே கதை. கதையின் நாயகனாக பிரமாதமாக நடித்திருந்தார் குரு சோமசுந்தரம். (‘ஜிகர்தண்டா’ ஜிப்ரீஸ் வாத்தியார்!)

மோனேஷ் இயக்கிய நல்லதோர் வீணை, அருமையான படைப்பு. குழந்தைகளைப் பாலியல் வேட்கைக்கு உட்படுத்தும் ஒரு டியூஷன் ஆசிரியரையும் அவரால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனையும் பற்றிக் கதை பேசுகிறது. ‘இந்த அனுபவத்தை யாரும் வெளியில சொல்ல மாட்டாங்க. இதனால வாழ்க்கையில என்னைப்போல தடம் மாறிப்போகாம இருக்கணும்னா, எல்லோரும் தைரியமா இதைப்பத்தி வீட்டுல சொல்லணும்’ என அந்தச் சிறுவன் பேசுவது, இன்றைய குழந்தைகளில் பெண் குழந்தைகள் மட்டும் இல்லை, ஆண் குழந்தைகளும் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகும் பேராபத்தை பொளேர் என முகத்தில் அறைகிறது.

ஆறு படங்கள் சேர்ந்து ஒரு படம்!

பழிவாங்குதலின் உச்சகட்டமாய் என்ன இருக்கும் என சொல்கிறது சாருகேஷ் சேகர் இயக்கிய ‘புழு’ குறும்படம். யாருமற்ற மலை உச்சியில் ஒருத்தருக்கொருவர் தாக்கிக்கொண்டு ரத்தம் உடலில் இருந்து வழிய வழிய உயிருக்குப் போராடும் கடைசி நிமிடங்களில்கூட கொலை வெறியோடு ஒருவரை ஒருவர் அழிக்கப் பார்ப்பதும், அவர்களுக்குள் அதற்கு முன் இருந்த தொடர்பை டீச்சர் சொல்லிக் கொடுத்த பிரேயர் பாடலை அவர்கள் பாடுவதின் மூலமும் முகத்தில் அறைந்து சொல்லி இருக்கிறார். இறுதியில் இந்தக் கொலை கேமில் யார் வென்றார்கள் என்பதை ஆடியன்ஸ் சாய்ஸில் விடுகிறார் இயக்குநர். கருப்பு வெள்ளைப் படமாக இருந்தாலும் இந்தக் குறும்படம் தரும் விஷுவல் ட்ரீட்மென்ட்டும் உணர்வும் நிச்சயம் உலகத்தரம்!

கோபகுமார் இயக்கிய ‘அகவிழி’, நோலன் டைப் குறும்படம். கொஞ்சம் சிக்கலான ஒவ்வொருவரின் கனவுகளாக விரியும் காட்சிகள் மூலம் குழப்பி அடிக்கும் சம்பவங்களால் ஒரு முக்கோணக்காதல் கதையைச் சொல்கிறார். ஆங்கில வசனங்களாலும் நிறைய ட்விஸ்ட்டுகளாலும் இன்னொரு முறை பார்த்தால் மட்டுமே புரியும் வகையில் ‘மெனக்கெட்டு’ எடுத்திருக்கிறார் இயக்குநர். அருமையான கேமரா வொர்க்குக்காகப் பார்க்கலாம்.

ரத்னக்குமார் இயக்கிய ‘மது’ என்ற குறும்படம் ஒட்டுமொத்த பெஞ்ச் டாக்கீஸிலும் தரை டிக்கெட் ரகம். ஆனாலும் செல்வராகவன் டச்சோடு அசத்துகிறது. தான் காதலித்த பெண்ணுக்கு நிச்சயமானதும் தற்கொலைக்கு முயலும் ஒருவனை அவனின் நண்பர்கள் எப்படிக் காப்பாற்றுகிறார்கள் என்பதே கதை. கொஞ்சம் காதல், நிறைய கலாய், நிறைய நட்பு, நிறைய காமெடியுமாய் வயிற்றைப் புண்ணாக்கிச் செல்கிறது இந்தப் படம். சந்தானம் விழித்துக்கொள்ள வேண்டிய நேரத்தை இவர்களின் யதார்த்தமான டைமிங் ஜோக்குகள் சொல்கின்றன.

கடைசிக் குறும்படமாக ஏற்கெனவே நாளைய இயக்குநர் சீஸன் 1-ல் கார்த்திக் சுப்புராஜை ஃபைனலில் கௌரவமாக இரண்டாம் இடத்தை வாங்கித் தந்த ‘நீர்’ படம். (முதல் இடம் நெஞ்சுக்கு நீதி - நலன் குமாரசாமி)
கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை 116 நிமிடங்கள் முழுநீளப்படம் பார்க்கும் அனுபவத்தைத் தர வேண்டும் என்பதற்காகக் கூடுதலாகச் சேர்த்திருக்கிறார்.

ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்கச் செல்லும் மூன்று மீனவர்களின் தினசரி வாழ்க்கையை முகத்தில் அறைந்து சொல்கிறது படம். சிங்களக் கடற்படையினரால் சுடப்படும் நித்திய கண்டம் பூரண ஆயுசு வாழ்க்கையை  காட்சிப்படுத்தி இருக்கிறார். விஜய் சேதுபதி எப்படி இவ்வளவு பெரிய ஆள் ஆனார் என்பதை அவர் ஆரம்ப காலத்தில் நடித்த இந்தக் குறும்படத்தை பார்க்கும்போது எளிதில் புரியும்.

‘‘நாங்க எதிர்பார்த்ததைவிட நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. பெஞ்ச் டாக்கீஸ்-2 விரைவில் ரிலீஸ் ஆகும். அதில் இன்னும் பல புதிய இயக்குநர்களின் குறும்படங்கள் உங்களை அசத்தும். தகுதியான ஆட்களை மேலே கொண்டுசெல்வது தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்களின் கடமை’’ என்கிறார் கார்த்திக் சுப்புராஜ்!

- ஆர்.சரண்-