Published:Updated:

“தமன்னா எனக்குத் தங்கச்சியா?”

“தமன்னா எனக்குத் தங்கச்சியா?”
“தமன்னா எனக்குத் தங்கச்சியா?”

ஃபேஸ்புக் மூலம் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு, சென்ற வாரம் சினிமாவிகடன் யூடியூப்பில் நேரடியாகப் பதிலளித்தார் நடிகர் ஜெகன். கொஞ்சம் அப்படி, கொஞ்சம் இப்படி ரகமாகக் கேள்வி கேட்டுத் துளைத்த அந்தத் தொகுப்பில் இருந்து சுவாரஸ்யமான சில கேள்விகளும், ஜெகனின் பதில்களும்!

சீனிவாசன் : ‘தமன்னாவுக்கு நீங்க அண்ணனா நடிச்சீங்க. நான் உங்களை மச்சான்னு கூப்பிடலாமா?’’

‘‘யோவ்... அது படத்துலதான்யா தங்கச்சி. ஷூட்டிங் ஸ்பாட்ல தமன்னா என்னை கிராஸ் பண்ணிட்டுப் போகும்போது, எனக்கும் உடம்புல ஒரு பார்ட்டும் வேலை செய்யாது. அது மட்டுமில்லாம, என்கிட்ட வந்து ‘ஸார்... ஸார்...’னு கொஞ்சி கொஞ்சிப் பேசும்யா அந்தப் பொண்ணு. ச்சே... என் மூடையே கெடுத்துட்டியே நீ. மவனே என்னையை மட்டும் மச்சான்னு சொல்லிப் பாரு. உன் மண்டையிலேயே கொட்டுவேன்!’’

பரணி : ‘‘எப்போ டபுள் மீனிங்கா பேசுறதை நிறுத்துவீங்க?’’

‘‘மிஸ்டர் பரணி. நீங்க எப்போ டபுள் மீனிங்கைக் கேட்கிறதை நிறுத்துறீங்களோ, அப்போதான் நான் பேசுறதை நிறுத்துவேன். டபுள் மீனிங்னு ஒண்ணு கிடையவே கிடையாது. அது நாமளா உருவாக்கிக்கிட்டதுதான். நான் ‘கனெக்‌ஷன்’ நிகழ்ச்சியை என் குடும்பத்தோடதான் பார்க்கிறேன். நீங்க சொல்ற மாதிரி, அவங்களுக்கு எதுவும் தோணலையே... ஏன்? டபுள் மீனிங்கிறது கேட்கிறவங்க மனநிலை!’’

அரவிந்த்: ‘‘உங்க மொபைல் நம்பர் கிடைக்குமா?’’

‘‘ஏன்யா உனக்கு இந்த ஆசை? சும்மாவே என் ஃபேஸ்புக் பக்கத்துல ‘ஒரு சட்டை வாங்கினா, ஒரு சட்டை ஃப்ரீ, மூணு சட்டை வாங்கினா ஒரு அண்டர்வேர் ஃப்ரீ’னு ஒரு நாளைக்கு ஆயிரம் மெசேஜ் அனுப்புறாங்க. என் பொண்டாட்டிக்குத் தெரியாமலேயே என் மொபைல் நம்பர் மறைக்கணும்னு யோசிச்சுட்டு இருக்கேன். நீங்க வேற!’’

“தமன்னா எனக்குத் தங்கச்சியா?”

செந்தில்குமார்: ‘‘ ‘சகாப்தம்’ படத்துல நடிச்சீங்க. கேப்டனுடனான அனுபவம்?’’

‘‘அதைப்பத்தி நிறையப் பேசிட்டேன். திரும்ப அதையே சொன்னா, போர் அடிக்கும். ஒண்ணு மட்டும் சொல்றேன். நல்ல சகோதரர். அவரைப் பற்றி நிறைய விஷயம் கேள்விப்பட்டிருப்போம். ஆனா, ரெண்டு நாள் பழகினா, அதெல்லாம் மறந்துடும். ரொம்ப ரொம்ப நல்ல மனிதர். உண்மையிலேயே சொல்றேன். அவருடன் பழகினதுக்கு அப்புறம் அவர் மேல பெரிய மதிப்பும் மரியாதையும் எனக்கு வந்திருக்கு!’’

முத்து & குமரன்: ‘‘விஜய் மற்றும் அஜித்துடன் எப்போ நடிப்பீங்க?’’

‘‘இதே கேள்வியை நான் உங்ககிட்ட திருப்பிக் கேட்கிறேன். அஜித் ரசிகர்கள் அஜித்துக்கும், விஜய் ரசிகர்கள் விஜய்க்கும் போன் பண்ணி ‘நீங்க எப்போ ஜெகனுக்கு சான்ஸ் தரப்போறீங்க. நீங்க அவருடன் சேர்ந்து நடிச்சா, நாங்க எக்ஸ்ட்ரா ரெண்டு கட் அவுட் வைப்போம்’னு சொல்லுங்க. சரியா?’’

தருண்: ‘‘உங்களுக்குப் பிடிச்ச நடிகை யார்? ஏன்?’’

‘‘கொஞ்சம் பழசா இருக்கும். பரவாயில்லையா? இப்போ இருக்கிற நடிகைகள் எல்லாம் எனக்கு பெருசா இம்ப்ரஸ் ஆகலை. ஆனா, ஸ்கூல் படிக்கும்போதும் சரி, காலேஜ் படிக்கும்போதும் சரி ‘இவங்க நடிச்சா போதும். அந்தப் படத்தைக் கண்டிப்பா பார்த்துடணும்’னு தோணின நடிகை குஷ்பு மட்டும்தான். அவங்க நடிச்ச ‘வருஷம் 16’, ‘அண்ணாமலை’ படத்துல நடிப்பைப் பார்க்கணுமே? ப்பா செம! நானாவது பரவாயில்லை, என் ஃப்ரெண்ட்ஸ் சில பேர் குஷ்பு பக்தர்களா எல்லாம் இருந்திருக்காங்க!’’

சிவாநாத்: ‘‘ புது இயக்குநர்கள்கூட வொர்க் பண்ணுவீங்களா?’’

‘‘இந்தக் கேள்வியையெல்லாம் சிவனே தாங்கிக்க மாட்டார் சிவா. நான் நடிச்சுட்டு இருக்கிற எல்லா இயக்குநர்களும் புதுசுதான். நானே ‘ஏன் நாம வொர்க் பண்ண பழைய இயக்குநர்கள் எல்லாம் நம்மளைக் கூப்பிட மாட்டேங்கிறாங்க’னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன். என்ன பாஸ் நீங்க?’’

சையத் ஆசாத் : ‘‘சிவகார்த்திகேயனை விஜய் டி.வி வளர்த்துவிட்ட மாதிரி, உங்களை வளர்த்து விடலையேங்கிற ஆதங்கம் இருக்கா?’’

‘‘சிவகார்த்திகேயனை யாரும் வளர்த்து விடலை. அவரேதான் வளர்ந்திருக்கார். அவருடைய வெற்றிக்குப் பின்னாடி அவர் கடந்த வலிகளை, நான் நேர்ல பார்த்திருக்கேன்!’