Published:Updated:

“பாலா என் குலதெய்வம்!”

“பாலா என் குலதெய்வம்!”
“பாலா என் குலதெய்வம்!”

பேஸ்புக்கில் ‘ஆர்கே.சுரேஷ் பசுமை இயக்கம்’, ‘ஆர்கே.சுரேஷ் அறக்கட்டளை’ என்று ஏராளமான பக்கங்கள் காணக்கிடைக்கின்றன. ‘யார் இவர்’ என்று விசாரித்தால், ‘ஸ்டுடியோ 9’ தயாரிப்பாளர்தான் இந்த ஆர்.கே.சுரேஷ். இப்போது பாலா இயக்கத்தில் ‘தாரை தப்பட்டை’யில் வில்லனாக நடிக்கிறார்.படம் ரிலீஸ் ஆகும் முன்னாலே பப்ளிகுட்டி அட்ராசிட்டியானு கேட்டுத்தானே ஆகணும்?

“பாலா என் குலதெய்வம்!”

‘‘ரசிகர் மன்றம், அறக்கட்டளை, பசுமை இயக்கம்னு எத்தனை மன்றங்கள்தான் வெச்சிருக்கீங்க பாஸ்?’’ ‘‘ஓ... ஃபேஸ்புக் பக்கங்களைக் கேட்கிறீங்களா?

ஊர்ல அப்பா பிரபலமான ஆள். நிறைய பேருக்கு நல்லது பண்ணியிருக்கார். அதுல பலன் அடைஞ்சவங்க ஆர்வக்கோளாறுலேயும், என் மேல இருக்கிற பாசத்துலேயும் இப்படிப் பண்ணிக்கிட்டு இருக்காங்க. ஆரம்பத்துல வேணாம்னு தடுத்துப் பார்த்தேன். இப்போ மரம் நடுறது, தண்ணீர் பந்தல் திறக்குறதுனு நல்ல விஷயங்கள் பண்றதனால தடுக்க மனசு வரலை. மத்தபடி, இதுல அரசியல் நோக்கமெல்லாம் கிடையாது. எனக்கு சொந்த ஊர் இராமநாதபுரம். அந்த மண்ணுல என் சொந்தங்கள் ஆயிரக்கணக்குல இருக்காங்க. பாசக்காரப் பயலுக, அவங்கதான் இந்த வேலையைப் பார்த்திருப்பாங்க.”

‘‘ ‘ரியல் ஸ்டார்’ பட்டமும் கொடுத்திருக்காங்களே?’’

‘‘ரியல் ஸ்டார்னு மட்டுமா போட்டாங்க. ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பட்டம் போட்டுக்கிட்டு இருக்காங்க. ‘என்ன வேணா பண்ணுங்கடா, இப்படி பட்டம் கொடுத்து பவர் ஸ்டார் ஆக்கிடாதீங்க’னு பாசமா மிரட்டியிருக்கேன்.”

‘‘அது சரி, எப்படி வந்தீங்க சினிமாவுக்கு?’’

“சின்ன வயசுல இருந்தே சினிமாவுல நடிக்கணும்ங்கிறதுதான் இலக்கு. காலேஜ் முடிச்ச கையோட சண்டைப் பயிற்சி, டான்ஸ்னு அத்தனையும் கத்துக்கிட்டேன். அப்புறம் பல காலேஜ் நிகழ்ச்சிகளுக்கு கொரியோகிராஃபரா போயிருக்கேன். ஜூனியர் என்.டி.ஆரோட டான்ஸ் குரூப்ல ஆடியிருக்கேன். பாலிவுட் ஆக்டர் சல்மான்கானை வெச்சு பல ஸ்டேஜ் ஷோ பண்ணியிருக்கேன். அப்புறம் கன்னட நடிகர் சுதீப் பழக்கம் ஆனார். சல்மான்கானும், சுதீப்பும் என்னுடைய ஃபேமிலியில ஒருத்தர் மாதிரி. இதைப் பண்ணு, இதைப் பண்ண வேணாம்னு அவங்கதான் எனக்கு அட்வைஸ் பண்ணுவாங்க. அப்புறம் நடிப்புக்காக பயிற்சி எடுத்துக்கிட்டு, கோலிவுட் தயாரிப்பாளர்கள்கிட்ட வாய்ப்பு கேட்டு கதவைத் தட்டினேன். ‘பத்து லட்சம் இருக்கா, 20 லட்சம் இருந்தா நீ ஹீரோ’னு டெம்ப்ளேட் வசனங்கள் பேசுனாங்க. ‘போங்கடா டேய்... நானே இயக்கி நடிக்கிறேன்’னு 2011-ல ‘போ நீ போ’னு ஒரு படத்தை ஆரம்பிச்சுட்டேன். அந்தப் பட வேலையா இருக்கும்போதுதான் ‘முதல்ல சினிமாவுல இருக்கிற பிசினஸைக் கத்துக்கணும்’னு தோணுச்சு. அதை அப்படியே மூட்டை கட்டிவெச்சுட்டு, ‘சாட்டை’ மூலமா டிஸ்ட்ரிபியூட்டர் ஆகிட்டேன். அப்புறம் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘சூதுகவ்வும்’னு நிறைய படங்கள் விநியோகஸ்தரா இருந்தேன்.”

“பாலா என் குலதெய்வம்!”

‘‘விஜய் சேதுபதிக்கும் உங்களுக்குமான பிரச்சனை தீர்ந்ததா?’’

‘‘ ரெண்டு பேருக்கும் இடையில எந்தப் பிரச்னையும் கிடையாதுங்க. அவரைச் சுத்தி இருக்கிறவங்கதான் எனக்கு எதிரா செயல்பட்டுக்கிட்டு இருக்காங்க. தயாரிப் பாளர்ங்கிற முறையில நான் ஒரு விஷயம் சொன்னா, அதை அவர்கிட்ட வேறவிதமா கொண்டுபோனாங்க. ‘இப்படிச் சொன்னீங்களாமே’னு கோபப்பட, பதிலுக்கு நானும் முறுக்க வேண்டியதாகிடுச்சு. ‘வசந்தகுமாரன்’ படம் நடிக்க 2012--ல் ஒப்பந்தம் போட்டார். இதுக்கு இடையில் பல படங்கள்ல நடிச்சுட்டார். ஆனா, என்னுடைய படத்துக்கு மட்டும் நடிச்சுக் கொடுக்கலை. அவர் தரப்புல கேட்டா, ‘இப்போ அவரோட மார்க்கெட் வேல்யூ வேற’னு சொல்றாங்க. போட்ட ஒப்பந்தப்படி நடிச்சுக் கொடுங்க, லாபத்துல கண்டிப்பா ஒரு பங்கு தர்றேன்னும் சொன்னேன். பண்ணலை. தவிர, நான் குண்டர்களை வெச்சு மிரட்டுவதாகப் பொய்யான செய்தியைப் பரப்பினாங்க. அதுக்குப் பிறகுதான் நான் பத்திரிகையாளர்களைச் சந்திச்சு நடந்ததைச் சொன்னேன். பதிலுக்கு விஜய் சேதுபதி கொடுத்த பேட்டியில் ‘அவர் படத்தில் நடிக்க முடியாது’னு அறிக்கை கொடுக்கிறார். ஏன் முடியாதுனு யாராவது கேட்கிறாங்களா? தயாரிப்பாளர் சங்கமும் தயாரிப்பாளருக்கு ஆதரவா நிற்காம, அவருக்கு ஆதரவா இருக்குது. இதெல்லாம் நியாயமே கிடையாது.’’

‘‘பாலாவின் ‘தாரை தப்பட்டை’ வாய்ப்பை எப்படிப் பிடிச்சீங்க?’’

“ ‘பரதேசி’ படத்தை விநியோகம் பண்ணினதுல, பாலா அண்ணன் பழக்கம். சில தடவை சந்திச்சுப் பேசியிருக்கேன். திடீர்னு ஒருநாள் அவரே கூப்பிட்டார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் முகத்தையே உத்துப் பார்த்துக்கிட்டிருந்தவர், ‘போயிட்டு, தாடி வளர்த்துட்டு வா’னு அனுப்பிட்டார். தாடியோட ஒரு போட்டோஷூட் நடந்தது. அப்புறம், க்ளீன் ஷேவ் பண்ணிட்டு ஒரு போட்டோஷூட் நடத்தினார். அவ்வளவுதான். ‘என் படத்துல நீதான் வில்லன். கொஞ்சம் கஷ்டமா இருக்கும். சீரியஸா பண்ணு. சரியா’னு அனுப்பிவெச்சுட்டார். எனக்கு ஆர்வம் தாங்கலை. ‘நடிச்சா பாலா சார் படத்துல நடிக்கணும். அதுக்கப்புறம் நடிக்கலைனாலும் பரவாயில்லை’னு பல தடவை நினைச்சிருக்கேன். படத்துல சசிகுமார் சாருக்கு அடுத்து முக்கியமான கேரக்டர் நான்தான். கடைசி வரைக்கும் தியேட்டர்ல ஆடிக்கிட்டே படம் பார்க்கலாம். அந்த அளவுக்கு குத்துப்பாட்டு ஹெவியா இருக்கு. சினிமாவில் என் குலதெய்வம் பாலாவுக்கு நன்றி!” -

கே.ஜி.மணிகண்டன், படங்கள்: எம்.உசேன்