Published:Updated:

காக்காமுட்டை படம் எப்படி?

  காக்காமுட்டை படம் எப்படி?
காக்காமுட்டை படம் எப்படி?

காக்காமுட்டை படம் எப்படி?

கோழிமுட்டை வாங்கிச் சாப்பிடக் காசில்லாததால் வீட்டுக்கு அருகிலுள்ள மரத்தில் காக்கை இடும் முட்டைகளைத் திருடி உடைத்து, குடித்துவிடுகிறார்கள் இரண்டுசிறுவர்கள். சிறுவர்களாக நடித்திருக்கும் ரமேஷ், விக்னேஷ் ஆகிய இருவரும் பாத்திரமாகவே இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

  காக்காமுட்டை படம் எப்படி?

காக்காமுட்டையைக் குடிப்பதால் இரண்டுசிறுவர்களின் இயற்பெயரே தெரியாத அளவு அவர்கள் இருவரையும் பெரிய காக்காமுட்ட, சின்ன காக்காமுட்ட என்று எல்லோரும் கூப்பிடுகிறார்கள். அவர்கள்தாம் இப்படத்தின் நாயகன், நாயகி, நகைச்சுவைநடிகர் ஆகிய எல்லாமே.

சென்னையின் மையத்திலிருக்கும், சைதாப்பேட்டை பாலத்தின் அருகிலுள்ள குடிசைப்பகுதியைக் கதைக்களமாகவும், அங்கு வசிக்கும் மிக எளியமக்களைக் கதை மாந்தர்களாகக்கொண்டும் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படம் உலகமயமாதலின் விளைவுகளைப் பற்றிப் பேசுகிறது.

குடிசைப்பகுதி சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் இடத்தில் திடீரென பிட்சா கடை வந்துவிடுகிறது. அதன்பின் அவர்கள் சாலையில் நின்று அந்தக்கடையை வேடிக்கை பார்க்கமட்டுமே முடிகிறது. கடையைத் திறந்து வைக்க சிம்பு வருகிறார். சிம்பு வந்து பிட்சா சாப்பிடுவதைப் பார்த்ததும் இவ்விரு சிறுவர்களுக்கும் பிட்சா சாப்பிடும் ஆசை வந்துவிடுகிறது.

அப்பா சிறைக்குப் போய்விட்டதால் இவர்களைப் படிக்கவைக்கமுடியாமல் வீட்டிலேயே விட்டுவிடுகிறார் அம்மா. அந்த வேடத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யாராஜேஷூக்கு இது வாழ்நாள்வேடம். அவ்வளவு பொருத்தமாக இருக்கிறார். நடிப்பு என்று தெரியாத அளவு மிகஇயல்பாக நடித்திருக்கிறார்.

  காக்காமுட்டை படம் எப்படி?

ரயில் தண்டவாளங்களின் ஓரத்தில் சரக்குரயிலில் இருந்து சிதறிவிழுகிற நிலக்கரிகளைப் பொறுக்கி விற்று அந்தக்காசைச் சேமித்து பிட்சா சாப்பிடத்திட்டமிடுகிறார்கள். 299 ரூபாய் விலையுள்ள பிட்சாவை அவர்கள் சாப்பிட்டார்களா? இல்லையா? என்பதுதான் படம்.

இதை வைத்துக்கொண்டு குடிசைப்பகுதி மக்களின் வாழ்நிலையை மிக எதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் மணிகண்டன். ஐஸ்வர்யாராஜேஷ் மற்றும் அவருடைய மாமியாராக நடித்திருக்கும் வயதான பெண்மணியும், குடிசைவாழ்மக்களின் பிரநிதிகள் போல் இருக்கிறார்கள். அவர்களுக்கான உரையாடல்கள் சமுகத்துக்குச் சவுக்கடி. மாமியாராக நடித்திருக்கும் பெண்மணி, பேரப்பிள்ளைகளுக்கு ஆதரவாகவே எப்போதும் பேசுவதும் அவர்களின் விருப்பத்துக்கேற்ப வீட்டிலேயே பிட்சா தயாரிப்பதும் ஒரேநேரத்தில் சிரிக்கவும் வேதனைப்படவும் வைக்கின்றன

அந்த மக்களை அரசியல்வாதிகளும் இடைத்தரகர்களும் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதையும் மிக அளவான காட்சிகளில் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சிறுவர்கள், பிட்சாகடை மேலாளரிடம் அடிவாங்கும் காட்சி காணொளியில் பதிவானதும், அது யார் யாருக்கு எப்படியெல்லாம் பயன்படுகிறது? அதை ஒவ்வொருவரும் எவ்வாறு பயன்படுத்த முனைகிறார்கள்? ஆகிய காட்சிகளில் சமுகஅவலங்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன.

பிட்சாகடையைத் திறந்து வைக்க சிம்பு வருவதும் அதன்பின் அந்தக்கடையால் சிக்கல் ஏற்பட்டதும் உங்களால்தான் சிக்கலா? என்ற கேள்விக்கு சிம்பு அளிக்கும் பதிலும் தற்காலத்துக்கு மிகப்பொருத்தமாக இருக்கிறது. ரயில்வேதொழிலாளியாக நடித்திருக்கும் ஜோமல்லூரியும் சிறப்பாக நடித்திருக்கிறார். சிம்பு பிட்சா தின்னானா? ஏன் அவன் ரசம்சோறு சாப்பிடமாட்டானா? என்று கேட்கிற இடத்தில் திரையரங்கம் அதிர்கிறது.

  காக்காமுட்டை படம் எப்படி?

குடிசைப்பகுதிச் சிறுவர்களுக்கு பிட்சா மோகம் வருவதும், கடைக்குள் அனுமதிக்க மறுப்பதால், புத்தாடைகள் எடுக்க மயிலாப்பூர் வரை போவதும் திரைக்கதைக்குப் பொருத்தமாக இருக்கின்றன, ஆனால், மற்ற நேரங்களில் மிகவிவரமாகச் செயல்படுகிற  சிறுவர்கள் இந்தவிசயத்தில் மட்டும் அவ்வளவு விவரம் தெரியாதவர்கள் போல் சித்தரிக்கப்பட்டிருப்பது கொஞ்சம் உறுத்தலாக இருந்தாலும் அந்தக்குறையே தெரியாதபடிக்கு சிறுவர்கள், தங்களுடைய நடிப்பால் கவர்ந்திழுத்துவிடுகிறார்கள்.            மாடிவீட்டுப்பயைன் கொடுக்கும் பாதி பிட்சாவைத் தம்பி சாப்பிடப்போகும்போது கையைப் பிடித்துத் தடுத்துவிட்டு கம்பீரமாக நடந்துபோவதும் பிறகொரு நேரத்தில், எச்ச பீசாவ துன்னுவியா என்று கேட்கும்போதும் அண்ணன் ரமேஷ் அசரவைக்கிறான். ஜாடிக்கேத்த மூடி மாதிரி அண்ணன் காட்டிய வழியில் அலட்டிக்கொள்ளாமல் செல்லும் தம்பி விக்னேஷ் பார்ப்போர் மனதைக் கொள்ளையடிப்பான் என்பதில் சந்தேகமேயில்லை.

ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கின்றன,

பிட்சாவவிட ஆயா சுட்ட தோச எவ்வளவோ மேல் என்கிற ஒற்றை வார்த்தையில் ஓராயிரம் அர்த்தங்கள் உள்ளன. அவற்றைக் காட்சிப்படுத்த முயன்ற இயக்குநர் பாராட்டுக்குரியவர். 

அடுத்த கட்டுரைக்கு