Published:Updated:

ரஜினிக்கு 'தில்லு முல்லு' ' ஸ்ரீகாந்துக்கு 'பாகன்' !

விகடன் விமர்சனக்குழு
ரஜினிக்கு 'தில்லு முல்லு' ' ஸ்ரீகாந்துக்கு 'பாகன்' !
ரஜினிக்கு 'தில்லு முல்லு' ' ஸ்ரீகாந்துக்கு 'பாகன்' !

ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவாவுடன் இணைந்து 'நண்பன்' படம் நடித்து இருக்கிறார் ஸ்ரீகாந்த். தனி நாயகனாக தற்போது 'பாகன்' என்ற புதுப்படத்தில் நடித்து வருகிறார்.

ஜனனி அய்யர் நாயகியாக நடிக்க, முகமது அஸ்லம் என்பவர் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிரபல இயக்குநர்கள் சேரன், அமீர், ராதா மோகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் முகமது அஸ்லம்.

'பாகன்' படம் குறித்து இயக்குனர் முகமது அஸ்லம் " காமெடி கலந்த ஜனரஞ்சகப் படம் 'பாகன்'. காதல், ஆக்ஷன், சென்டிமெண்ட், வயிற்றைப் பதம் பார்க்கும் அளவுக்கு காமெடி என பக்கா பொழுதுபோக்குப் படம் இது.

ஸ்ரீகாந்துக்கு சந்தேகமே இல்லாமல் ஒரு சிக்ஸர் இந்தப் படம். காட்சிக்குக் காட்சி காமெடியில் பின்னிப் பெடலெடுத்துள்ளார் ஸ்ரீகாந்த். அவருக்குள் இத்தனை பெரிய நகைச்சுவை கலைஞர் ஒளிந்திருந்தாரா என எல்லாருமே கேட்கும் அளவுக்கு காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

ரஜினி சாருக்கு ஒரு 'தில்லுமுல்லு' மாதிரி, ஸ்ரீகாந்துக்கு இந்தப் 'பாகன்' அமையும். உருவத்தில் பெரிய யானையை சிறிய உருவம் கொண்ட பாகன் அடக்கி ஆள்கிறான். அதுபோல பிரச்னைகள் நிறைந்த இந்த பெரிய வாழ்க்கையை சமாளித்து வாழ்பவனே ஹீரோ. வாழ்க்கையில் அதிகம் சம்பாதிக்க ஆசைப்பட்டு வெளிமாநிலம், வெளிநாடு செல்வோர் மத்தியில், வாய்ப்புக் கிடைத்தும் வெளிநாடு செல்லாமல் தன் சொந்த மண்ணில் உழைத்து முன்னேறுகிறான் இந்த பாகன். இந்த மண்ணின் மீது அவ்வளவு காதல்.

என் படத்தில் என் குருநாதர்கள் சேரன், அமீர், ராதா மோகன் பாதிப்பு இருக்கும். காரணம், அவர்களைப் பிடித்துப் போய், அவர்கள் படங்களை ரசித்து அவர்களுடன் பணியாற்றியவன் நான். அதனால் என் படைப்பிலும் அவர்களின் பாதிப்பு இருக்கும். அது தவறும் அல்ல" என்கிறார்.

ஸ்ரீகாந்தின் அம்மாவாக கோவை சரளாவும், அப்பாவாக 'மதராசப்பட்டினம்' படத்தில் ஆசிரியர் வேடத்தில் நடித்த ஜார்ஜும், நண்பர்களாக 'வெண்ணிலா கபடிக் குழு' சூரி, 'அங்காடித் தெரு' பாண்டியும் நடிக்கின்றனர். ஜேம்ஸ் வசந்தன் இசை அமைக்கிறார்.

மும்பையின் லோனாவாலா, பொள்ளாச்சி மற்றும் வெளிநாடுகளில் படமாகிறது 'பாகன்'.