Published:Updated:

அல்லிநகரத்தில் 'அன்னக்கொடியும் கொடிவீரனும் '

அமீர், இனியா, கார்த்திகா, புதுமுகம் விஷ்ணு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாக இருக்கும் படம் 'அன்னக்கொடியும் கொடிவீரனும்'.

'பொம்மலாட்டம்' படத்தினை அடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு பாரதிராஜா இயக்க இருக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுத, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு துவக்க விழா தேனியில் உள்ள அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், பாலு மகேந்திரா, மணிரத்னம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். விழாவில் தமிழ் திரையுலகை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகள் கலந்து கொண்டார்கள்.

அவ்விழாவில் இயக்குனர் பாரதிராஜா பேசியது :

" இந்த மண் கொடுத்த உற்சாகத்தில் சினிமா உலகில் என்னால் சாதிக்க முடிந்தது. இது போன்ற விழாக்களில் கடந்த 35 ஆண்டு காலத்தில் தேனி அல்லிநகரம் பகுதியில் நான் பங்கேற்றதில்லை. தேனி மாவட்டத்தில் சின்னமனூர், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற விழாக்களில் பேசி இருக்கிறேன். ஆனால் 35 ஆண்டுகளில் என்னை என் பகுதி மக்களும், பள்ளித் தோழர்களும் விழா நடத்தி வரவழைக்கவில்லை என்பதற்காக இந்த படத் தொடக்க விழாவின் மூலம் நானே என்னை வரவழைத்துக் கொண்டேன். நான் இங்கிருந்து சினிமாத்துறைக்கு சென்று அங்கிருந்து சினிமாவை இங்கு கொண்டு வந்து இருக்கிறேன்.

நடிகர் அமீர் கூட ஒரு இளைஞர்தான். கட்டுவீரியன் வேடத்தில் 25 கிலோ எடையுள்ள ஆட்டை அசாத்தியமாக தூக்கி வரக்கூடிய அந்த அழகு, என்னுடன் மோதிப் பார்த்த அமீரை நினைத்து பார்க்க வைத்தது. இங்கு வந்துள்ள தமிழ் திரையுலகினர் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக நன்றியை தெரிவிக்கும் வகையில், இயக்குனர் பாலச்சந்தரின் கால்களில் விழுந்து வணங்குகிறேன். " என்று கூறிவிட்டு இயக்குனர் பாலசந்தர் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

கவிஞர் வைரமுத்து பேசியது :

" இன்றைய தினம் சினிமா உலகத்தையே எங்கள் ஊருக்கு அழைத்து வந்து இருப்பது பாரதிராஜாவின் அளவில்லா  சாதனை.

தமிழ் கலை உலகில் கடந்த 1976-க்கு பிறகு எந்த ஒரு இயக்குனர் வந்திருந்தாலும் அவரிடம் பாரதிராஜாவின் பாதிப்பு இருக்கும் என்று இயக்குனர் மணிரத்னம் கூறினார். இதன் மூலம் ஒரு பல்கலைக் கழகமே பட்டம் அளித்தது போன்ற பெருமையை பாரதிராஜா பெற்றுள்ளார்.

சினிமா யாரையும் கவிழ்த்துதான் போடும். திறமை இருந்து எதிர் நீச்சல் போட்டு பிழைத்து வா என்று கூறும் சினிமாதுறையில் 36 ஆண்டு காலம் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார் பாரதிராஜா.

இந்த மக்களிடம் நாம் கலை என்ற பெயரில், எழுத்து என்ற பெயரில், கொண்டாட்டம் என்ற பெயரில் சுரண்டி எடுத்து இருக்கிறோம். நானும், நண்பர் பாரதிராஜாவும் நமது காலத்திற்குள் இந்த மண்ணின் மக்களுக்கு நல்லது செய்யும் வகையில் கல்வி அறக்கட்டளை தொடங்கிட வேண்டும். இதுவே இந்த மண்ணுக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.

வார்த்தையை கற்று கொடுத்தது தமிழ். எங்கள் வாழ்க்கையை கற்று கொடுத்தது நீங்கள். உங்களுக்கு நிச்சயம் நாங்கள் நன்றிக் கடன் பட்டவர்களாக இருப்போம். இந்த விழாவில் அறக்கட்டளைக்கு எனது பங்களிப்பாக ரூ.5 லட்சம் கொடுக்கிறேன். மேலும் இந்த படத்திற்காக எனக்கு கிடைக்கும் சம்பளத்தையும் அறக்கட்டளைக்கு வழங்குகிறேன். மேலும் எனது நண்பர் கோவில்பட்டி நாகஜோதி என்பவர் ரூ.10 லட்சம் இந்த அறக்கட்டளைக்கு தருகிறார். "